/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
இசை வெள்ளத்தில் இஷா ஜோதியின் சங்கீத சமர்ப்பணம்
/
இசை வெள்ளத்தில் இஷா ஜோதியின் சங்கீத சமர்ப்பணம்
ஆக 07, 2025

ஒளிரும் மாலைப் பொழுதில் சந்தனமும், குங்குமும், பன்னீரும் மணக்க ரிச்மண்ட், டெக்சாஸ் சாரதாம்பா கோயில் வளாகத்தில் உள்ள சங்கரா ஹால் விழாக்கோலம் பூண்டிருந்தது. இளம் இஷா ஜோதி கம்பீரமாக தன்னுடைய முதல் கர்நாடக இசை மேடைக் கச்சேரியான 'சங்கீத சமர்ப்பணத்தை' அளிக்க ஆவலுடன் மேடையேறினார். நிறைந்த அரங்கம் அதை விட ஆவலுடன் காத்திருந்தது.
தனது உயர்நிலைப் பள்ளி நிறைவு விழாவை இசைப் பயணத்தின் தொடக்க விழாவாகவும் கொண்டு இருபெரும் விழாக்களின் நாயகியாக மிளிர்ந்தார் இஷா ஜோதி. கலையும் கல்வியும் சிறக்க குருவருள் தானே முதன்மை. இஷா ஜோதியின் இசைப் பயணத்திலும் அவரின் கர்நாடக இசை குருவின் பங்கு அளப்பரியதாகும். ஹூஸ்டன் மாநகரின் பெருமைமிக்க அடையாளமாகத் திகழும் கிருஷ்ண கான சுதா மியூசிக் அகடமியின் நிறுவனரான ராஜராஜேஸ்வரி பட் அவர்களின் சீரிய இசைப் பயிற்சியில் நல்ல குரல் வளமும் இசையில் ஈர்ப்பும் ஞானமும் பெற்று சிறந்துள்ளார் இஷா.
“ என் இசை ஆசிரியை இசையை மட்டும் கற்பிக்கவில்லை, என்னுடைய குரலை எனக்கு அடையாளப்படுத்தி, என்னிடம் இருக்கும் வலிமையையும் எனது குறிக்கோளையும் கண்டடையச் செய்துள்ளார்” என்றார் இஷா. ஒரு இசைக் கச்சேரி சிறக்க பல்வேறு அம்சங்கள் பக்கபலமாக இருக்க வேண்டியது மிக அவசியம். அதிலும் பக்க வாத்தியம் எனும் சேர்ந்திசைக்கும் குழுவினரின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிகழ்வில், கிளீவ்லேண்ட் தியாகராஜா விழாவில் பரிசு பெற்ற தேஜாஸ் முரளி (வயலின்), தன் இனிமையான இசை நயத்தால் கச்சேரிக்கு மெருகூட்டினார். தாளகதியோடு மிருதங்கத்தில் உடன் பயணித்த நாராயண் ஸ்ரீநிவாசனின் விரல் அசைவுகளின் நுணுக்கம் பார்வையாளர்களை கட்டிப் போட வைத்தது.
சாமஜவரகமனா
அனிந்திதா ஸ்ரீராமசுப்பிரமணியன், இஷா ஜோதியுடன் இசை பயிலும் சக மாணவி தம்பூரா இசைத்து தெளிவான ஸ்ருதியுடன் கச்சேரி அழகாக அடுத்த நிலைகளுக்கு செல்ல உறுதுணையானார். மொத்தத்தில், இஷா மற்றும் குழுவினரின் இசை கச்சேரி அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தி மெய் மறக்கச் செய்தது. ஆரபி ராகத்தில் ஆரம்பித்த வர்ணம் இனிய சொல்லும் இசையும் கலந்த சாரலாக பொழியத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஸ்ரீவிக்ன ராஜம், சாரதே கருணாநிதியே, சபாபதிக்கு என அடுத்தடுத்து பொழிந்தது எல்லாம் கோடைமழைக் கொண்டாட்டம் தான். நம்மை அடுத்து ஆழ்ந்த பக்தி பாவத்திற்கு அழைத்து சென்றன சுதாமயி மற்றும் மானஸ எதிலோ. ஹிந்தோளம் ராகத்தில் மிதந்து வந்த சாமஜவரகமனா பார்வையாளர்களை பரவசப்படுத்தி நுண் அதிர்வுகளை பரவச் செய்தது. இஷா ஜோதி, எளிய பாணியில் பாடிய தீராத விளையாட்டு பிள்ளையும், குனிதடோகிருஷ்ணாவும், அழைப்பாயுதே கண்ணாவும் கேட்போரை காந்தமாக கவர்ந்திழுத்த பல்சுவை இனிய நாதங்கள். வேகம் கூடி அடைமழையாய் தெறித்த முத்தைத்திரு திருப்புகழும், தனஸ்ரீ ராகத்தில் துள்ளி வந்த தில்லானாவும் இஷாவின் இசை திறனுக்கு சாட்சியாக நாவில் நர்த்தனமாடின. துள்ளி வந்த தில்லானாவிற்கு பிறகு ஆழ்ந்த பக்தியில் தோய்ந்து வந்த ஹரிவராசனம் காண்போரை கைத்தொழுது கசிந்துருகச் செய்தது. இந்த இனிய இசை நிகழ்வை செம்மையாக தொகுத்து வழங்கிய வர்ஷா வாசு நிகழ்வை மேலும் சிறப்பாக்கினார். ஒவ்வொரு பாடலும் அதைப் பற்றிய குறிப்பும் இரு பக்கமும் அகல திரைகளில் காண்பிக்கப்பட்டது பலரின் பாராட்டைப் பெற்றது. அதே போல், கச்சேரியில் பாடப்பட்ட பாடல்கள் அமைந்த ராகங்களில் உருவாக்கப்பட்ட திரைப்படப் பாடல்களையும் இடையிடையே அறிவித்தது சுவையான அம்சமாக விளங்கியது. சங்கீத சமர்ப்பண இசை விழா, ஹிமாலயன் யோகி மற்றும் அமுத வாசி பவுண்டேஷன் நிறுவனருமான ஸ்ரீ அமுத பாரதி ஐயா அவர்களின் ஆன்மிக அருளாசியுடன் தொடங்கப்பட்டது.
இஷாவின் பெற்றோர் நெகிழ்வு
இசைக் கச்சேரியின் நிறைவில், ஹூஸ்டன் நகரில் மூத்த இசை ஆசிரியராக விளங்கும் திருமதி. ஜானகி விஸ்வநாதன் அவர்கள், பாடப்பட்ட அனைத்து பாடல்களுக்கும் குறிப்பெடுத்து நிறைகுறைகளை ஆய்ந்து வழிகாட்டும் விதமாக இஷா ஜோதி மற்றும் குழுவினரை வாழ்த்தி சிறப்பித்து பேசியது நிகழ்விற்கு மகுடம் சூட்டியது போல் திகழ்ந்தது.“அவரின் ஒவ்வொரு சொல்லும் இஷாவின் இசைப்பயணத்தில் படிக்கட்டுகளாக அமையும். அவற்றை ஆசீர்வாதமாக பெறுவதில் அகம் மகிழ்கிறோம்” என இஷாவின் பெற்றோர் நன்றியோடு கூறுகின்றனர். இந்த இசைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக, இஷாவின் பெற்றோர்கள் தேவி பிரபாகரன் மற்றும் பிரபாகரன் குணசேகரன் பிரதிபலிக்கும் அன்பும் அறமும் அமைந்துள்ளன. ஆம், இந்நிகழ்வின் அனைத்து அன்பளிப்புத் தொகையும் இளம் சிறார் கான்சர் ஆராய்ச்சி மையமான செயின்ட் ஜுட்ஸ் (St. Jude Children's Research Hospital) நிறுவனத்திற்கு அளிக்கப்பட உள்ளது.
இதே அன்பும் ஆழமும் இஷாவின் இளைய சகோதரனின் சிறு உரையில் ஒலிப்பதை கேட்க முடிந்தது. இஷாவின் இசையும் அதிலுள்ள ஈடுபாடும் எவ்வாறு இல்லத்தில் இனிமையும் இடைவிடா முயற்சியை கொண்டு வந்தது என குரு பிரபாகரன் கூறியது நெகிழ்வான நொடிகளான அமைந்தன.
இசை என்பது மொழி, கலாச்சாரம், பண்பாடு கடந்து அன்பையும் அறத்தையும் பேசும் என்பதற்கு அடையாளமாக இந்த இனிய இசை நிகழ்வு என்றும் நினைவில் நிற்கும் என்பதில் ஐயமில்லை. அன்புக் குடும்பம், அயரா உழைப்பு, அர்ப்பணிப்பு, கலையின் மீது தீராக் காதல், தோள் கொடுக்கும் தோழமைகள், சுற்றம் சூழ நடந்தேறிய சங்கீத சமர்ப்பணம் ஒரு இசை நிகழ்வு மட்டுமல்ல, கூடி நின்று நம் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு நளினமாக நகர்த்திச் செல்லும் நயமும், நட்பு பாராட்டி நெஞ்சம் நிறையும் அழகியதோர் தருணம்.தகவல் : திருமதி. ராஜி வாஞ்சி,
- நமது செய்தியாளர் , ஷீலா ரமணன்.
Advertisement