
நாட்டுப்பற்று, தேசப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, பெண் விடுதலை, சமூக முன்னோக்கு, சமத்துவம் போன்ற பல்வேறு கோணங்களில் தனது தன்னிகரற்ற எழுத்தால் தமிழ் மக்கள் இதயங்களில் நீங்கா இடம்பெற்ற மகாகவி பாரதியாருக்கு, ஆஸ்டின் மண்ணில் விழா எடுத்து, தமிழ் தொடர்ந்து வளர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையில், ஆஸ்டின் இந்து ஆலயம் மற்றும் சமூக மையம் இணைந்து ஆஸ்டின் இந்து கோவிலில் “பாரதியார் தினம் 2024” என சிறப்பாக கொண்டாடியது போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய மகத்தான செயல்.
இந்த நிகழ்ச்சி நிறைவாக முடிந்ததை பார்க்கும்பொழுது,
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”
என தமிழ்த்தாய் சொல்வதாக பாரதியார் முழங்கிய பாரதியின் கனவு நனவாகி, “மெல்லத் தமிழினிச் சாகும்” என தவறாக புரிந்து சொல்பவர்களுக்கு பதிலடியாகவும், தமிழ் என்றென்றும் உயிர்ப்போடு இருந்து கொண்டு இருக்கும் என உணர்த்துவதாகவும் அமைந்தது.
ஆஸ்டின் மாணவச் செல்வங்கள் பாட்டு, நடனம், கவிதை, பட்டிமன்றம், கருத்தரங்கம் என பாரதியார் பற்றி தூய தமிழில் தங்களது தமிழ்த் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியது இந்த நிகழ்ச்சியின் சிகரமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சி, அடுத்த தலைமுறையினர்க்கு தமிழை முறையாக எடுத்துச் செல்லும் நிகழ்வாகவும், தமிழ் ஆர்வலர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும், புதிய படைப்பாளிகளுக்கு ஆற்றல் மிகு உந்து சக்தியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைவதற்கு சிறப்பாக திட்டமிட்டு, செவ்வனே நிறைவேற்றிய நல்ல உள்ளங்கள் முனைவர் சதாசிவம், ராமச்சந்திர ரெங்கபாஷ்யம், மருத்துவர் சூர்யா கண்ணன், இராசாத்தி, கோபி, துர்கா, செந்தில், மதுசூதன், நிவேதிதா, தாரணி மற்றும் ஆர்த்தி. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சண்முகசுந்தரம் ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றி. இதற்கு பக்கபலமாக இருந்த தன்னலமற்ற தன்னார்வலர்கள் அனைவருக்கும், மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம். எழுத்து: சண்முகம்
- நமது செய்தியாளர் மகா ரமேஷ்
Advertisement