/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் திருமுறை மாநாடு கோலாகலம்
/
சிங்கப்பூரில் திருமுறை மாநாடு கோலாகலம்

சைவமும் தமிழும் தழைக்க ஆன்மிகநிறை நிகழ்வுகளைப் படைப்பதில் சிங்கப்பூர் நகரத்தார் சமூகம் முத்திரை பதிக்கும் தனித்துவம் மிக்க அமைப்பாகத் திகழ்ந்து வருகிறது. 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து திருமுறை மாநாட்டை நடத்தி வருவது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு ஜூலை 25, 26, 27 தேதிகளில் சிங்கப்பூர் அருள்மிகு ருத்ர காளியம்மன் ஆலயத்தில் அரங்கம்நிறை நிகழ்வாக சிங்கப்பூர் மக்களுக்குப் பெருவிருந்து படைத்தது பாராட்டுக்குரியதாகும்.
நேரில் கண்டு களிக்க இயலாதோருக்கு வலைத் தளவழி ஒளி - ஒலி பரப்பப்பட்டது உலகளாவிய நிலைக்குக் கொண்டு சென்றது. சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகப் பதிவாளரும் மேனாள் வளர் தமிழ் இயக்கத் தலைவருமான ராஜாராம் கலந்து கொண்டார். பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்துக் கவுரவிக்கப்பட்டார். “ திருமுறைகள் பாமரர் முதல் பண்டிதர் வரை, சாதாரண பக்தர்கள் முதல் பெருந் துறவியர் வரை அனைவருக்கும் உரிய பொக்கிஷம் என அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் பிற மொழிகளெல்லாம் இறைவனுக்குப் பின்னால் செல்லும். ஆனால் தமிழுக்குப் பின்னால் இறைவன் தொடருவதை குமரகுருபரர் “ பைந்தமிழ் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே “ என்ற மேற்கோளைச் சுட்டிக் காட்டி சிறப்பு விருந்தினர் பேசும்போது எழுந்த கரவொலி அடங்க நெடுநேரமாயிற்று. ஞானசம்பந்தப் பெருமானின் “ ஒழுகலரி தழிகலரி லுழி உலகு “ எனும் பாடலைப் பயிற்சி செயின் “ ழ “ கரப் பிரச்சினை எழாது என்றபோது வளர் தமிழ் இயக்கத் தலைவர்தம் முத்திரை பளிச்சிட்டது.
திருமுறைகளை மக்கள் மனதில் பதிய வைக்கும் இம்மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பு விருந்தினர் வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினார். தருமை ஆதீனப் புலவர் திருமுறைக் களஞ்சியம் பிரபாகர் மூர்த்தி திருமுறையில் ஞானநெறி, தொண்டு நெறி, பக்திநெறி என்ற தலைப்பில் சொற்பெருக்காற்றி சுவைஞர்களைத் தம் வசப்படுத்தினார். மாநாட்டின் ஒரு அங்கமாக கேலாங் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் 63 நாயனார் குரு பூசை நடைபெற்றமை குறிப்பிடத் தகுந்ததாகும்.
திருமுறை ஓதும் போட்டியிலும், திருமுறைப் பேச்சுப் போட்டியிலும் முதல் பரிசு பெற்ற மழலையர் பள்ளி, தொடக்கப் பள்ளி மாணவமணிகள் திருமுறை விண்ணப்பம் மற்றும் திருமுறை குறித்த பேச்சிலும் பங்கேற்று அரங்கம் வியக்க அசத்தினர். வினா - விடை அரங்கத்தில் சிறப்புப் பேச்சாளர் தகுந்த விளக்கமளித்து மகிழ்வித்தார். திருமுறை மாநாட்டின் வெளியீடாக சித்திரக் கதைகள் அடங்கிய நூல் வெளியீடு கண்டது.
சிங்கப்பூரின் பல்வேறு ஆலயங்களில் சேவை புரியும் ஓதுவாமூர்த்திகளின் தீமுறைப் பண்ணிசை மாநாட்டிற்கு மகுடமாய்த் திகழ்ந்தது. சுருங்கக் கூறின் இம்மாநாடு இளையர் மத்தியலும் பக்தரிடையேயும் புத்துணர்வைத் தோற்றுவித்தது எனலாம். மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் மிகச் சிறப்பாக நிகழ்வுகளை ஒருங்கிணைத் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement