/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் ஆடிப் பூர மஹோற்சவ கோலாகலம்
/
சிங்கப்பூரில் ஆடிப் பூர மஹோற்சவ கோலாகலம்
ஜூலை 29, 2025

உலக மக்களைக் காப்பதற்காக ஸ்ரீ அம்பாளே சக்தியாக உருவெடுத்த நாள் ஆடிப் பூர நன்னாள். பூமா தேவியே இந்நாளில் ஆண்டாளாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது. 27 ஆம் தேதி மாலை 6.55 மணியிலிருந்து 28 ஆம் தேதி இரவு 8 மணி வரை பூர நட்சத்திரம் அமைகிறது. இந்நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் 11 ஆவது நட்சத்திரமான பூர நட்சத்திர நாளன்று யோகியரும் சித்தர்களும் தவ வாழ்வை மேற்கொள்ளுவதாக வரலாறு கூறுகிறது. இத்தகு தெய்விகச் சிறப்பு வாய்ந்த நன்னாளை சிங்கப்பூர் ஆலயங்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றன.
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் ஜூலை 28 ஆம் தேதி திங்கள் கிழமை காலை 8.30 மணிக்கு ஸ்ரீ துர்க்காம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மாலையில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஸ்ரீ துர்க்காம்பிகைக்கு வண்ண வண்ண வளையல்கள் மாலையாக அணிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றபோது பக்தப் பெருமக்களின் “ ஓம் சக்தி ....பராசக்தி “ சரண கோஷம் விண்ணதிர வைத்தது. அம்பிகை வளையல் அலங்காரத்தில் ஜொலித்தது மெய் சிலிர்க்க வைத்தது.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான ஸ்ரீ அம்பிகைக்கு வளைகாப்பு நடத்துவதால் பக்தர்களின் அனைத்துத் தடைகளும் அகலும். ஆலயத்தில் பிரசாதமாக வழங்கும் வளையல்களை இல்லங்களில் வைக்கும் போது தீய சக்திகள் அனைத்தும் விலகும். இந்த அதிர்வலைகள் கர்ப்பமுற்ற மகளிருக்கு மிகுந்த நன்மைகள் பயக்கும். தீர்க்க சுமங்கலிகளாக விளங்க வழிவகுக்கும்.
தலைமை அர்ச்சகர் ஆகம ப்ரவீண சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார் தமக்கே உரிய வெண்கலக் குரலில் இசையோடு பாடி ஆடிப் பூர மஹோற்சவத்தைப் பற்றி விளக்கினார். வழக்கம்போல பக்தப் பெருமக்களுக்கு அருள் பிரசாதத்துடன் அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது சுரேஷ் குமார் தலைமையிலான ஆலய மேலாண்மைக் குழுவினர் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement