/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் இலக்கிய வட்ட ஆண்டு விழா - குழந்தைகள் தின கொண்டாட்டம்
/
சிங்கப்பூர் இலக்கிய வட்ட ஆண்டு விழா - குழந்தைகள் தின கொண்டாட்டம்
சிங்கப்பூர் இலக்கிய வட்ட ஆண்டு விழா - குழந்தைகள் தின கொண்டாட்டம்
சிங்கப்பூர் இலக்கிய வட்ட ஆண்டு விழா - குழந்தைகள் தின கொண்டாட்டம்
டிச 08, 2024

தனித்துவச் சிறப்போடு தமது முத்திரைத் திருவிழாவான குழந்தைகள் தின விழாவையும் - நான்காம் ஆண்டுத் துவக்க விழாவையும் தாரகை இலக்கிய வட்டம் தேன் தமிழ் வெள்ளமாய்ப் பாய்ந்த சொல்லருவி எனக் களை கட்டிய விழாவாக விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலக பதினாறாம் தளத்தில் சீரும் சிறப்புமாக நடத்தியது.
சிங்கையின் சிங்கப் பெண் அப்துல் லத்தீப் மஹ்ஜபீன் தலைமை ஏற்க தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மாணவி பூஜா சங்கரின் வரவேற்பு நடனம் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் அமைந்தது. வளர் தமிழ் இயக்கத் தலைவர் நசீர் கனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தாரகை இலக்கிய வட்டத்தின் புதிய அமைப்புச் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். தாரகை இலக்கிய வட்டத்தின் நான்காண்டு நிகழ்வுகள் பாமாலையாய் காணொளிவழி அனைவரையும் கவர்ந்தது.
புதிய செயலவை பொறுப்பேற்பு
பல்திறன் வித்தகி முனைவர் ராஜீ ஸ்ரீநிவாசன் செயலவை உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். மூத்த சமூக அடித்தளத் தலைவர் புதியநிலா மு.ஜஹாங்கீர் - லிசா மகளிர் பிரிவின் நிறுவநர் ஜாய்ஸ் கிங்ஸ்லி முன்னிலையில் புதிய செயலவை உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். கவிமாலைக் காப்பாளர் புதுமைத் தேனீ கவிஞர் மா.அன்பழகன் - பட்டி மன்ற கலைக் கழகத் தலைவர் யூசுப் ராவுத்தர் ரஜீத் - நர்கீஸ் பானு ஆகியோர் ஆலோசகர்களாகப் பொறுப்பேற்றுக் கொணடனர்.
புதுமையான முறையில் செயலவை உறுப்பினர்கள் எழுவருக்கு பெயர் மற்றும் பொறுப்பு குறித்த அணியரைப் பட்டிகையை ஜாய்ஸ் கிங்ஸ்லி அணிவித்தார். உறுப்பினர் சேர்க்கைத் தலைவராக சுந்தரி சாத்தப்பன் - இருப்பியல் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக முனைவர் லட்சுமி சொக்கலிங்கம் - சமூகப் பங்களிப்புத் தலைவியாக எழிலி கருணாகரன் - பொருளாளராக மீனா ஷங்கர் - செயலாளராக - இசக்கிசெல்வி துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். பலத்த கரவொலிக்கிடையே அப்த்துல் லத்தீப் மஹ்ஜபீன் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திறமை காட்டிய மாணவ, மாணவியர்
சிறந்த பட்டி மன்றப் பேச்சாளருக்கான தாரகை விருந்து இவ்வாண்டு நபீலாவுக்கு வழங்கி கவுரவிக்கப்படடடது. குளோபல் இந்தியன் பள்ளியல் ஏழாம் வகுப்பில் பயிலும் மாணவர்ஆதித்யா கார்த்திக் மிருதங்கம் வாசிக்க - செம்பவாங் தொடக்கப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ருதி சாத்தப்பன் புல்லாங்குழல் வாசிக்க - மாணவி ஜெயரக்ஷா முத்துக்குமார் பரத நாட்டியம் - நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் ரயன் ஜோஷ்வா கீ போர்டு வாசிக்க நாளைய நட்சத்திரங்களைப் பாராட்டும் கரவொலி அடங்க நெடுநேரமாயிற்று. புதிநிலா ஜஹாங்கீர் - ஜாய்ஸ் கிங்ஸ்லி முதலியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏழு வயதில் பேசத் துவங்கிய ஆடடிசம் மாணவர் ஆத்ரேயன் வெங்கடேஷ் பாடிய எழுச்சிப் பாடல் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. மனவளர்சிசி குன்றிய இரு குழந்தைகளுக்குச் சிறப்புச் செய்தமை பார்வையாளர்களது உள்ளங்களை நெகிழச் செய்தது.
பட்டி மன்றம்
முத்தாய்ப்பு அங்கமாக சொல்லருவி பட்டி மன்ற நடுவராக முனைவர் மன்னை க.ராஜகோபாலன் வீற்றிருக்க ' பிள்ளை வளர்ப்பில் பெற்றோருக்குப் பெரிதும் கை கொடுப்பது புகழுரைகளா - அறிவுரைகளா ? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. புகழுரைகளே அணியில் ஏ.எம்.கே.தொடக்கப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ரா.கமலிகா தொடர அமிழ்தினி உதயகுமார் பதிலடி கொடுத்து அசத்தினார். நகைச்சுவை ததும்ப பேசிய நான்காம் வகுப்பு மாணவன் ஜெயப் பிரகாசம் ஜோஷித்துக்கு நிதிஷ் சத்யன் சரியான பதிலுரை தந்து வாதாடினார். தொடக்க நிலை ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி கனிஷ்காவுக்கு மாணவர் வியாசர்பிரகன் தக்க பதிலுரை தந்தார்.
' நான் புத்தகம் பேசுகிறேன் ' என்ற அங்கத்தில் ஐம்பத்தேழுக்கு மேற்பட்டகுழந்தைகள் பங்கேற்றுப் பாராட்டுப் பெற்றனர். இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பாலசுப்பிரமணியம் ரமேஷ் - இப்ரஹீம் அஷ்ரத் அலி - சுப்பிரமணியம் முத்து மாணிக்கம் ஆகியோர் நடுவர்களாகப் பொறுப்பேற்று முடிவுகளைத் தெரிவித்தனர். நிகழ்வுகளிலும் போட்டிகளிலும் பங்கேற்றவர்களுக்குச் சிறப்புச் செய்யப்பட்டது. நிகழ்வினை மாணவி சனா கான் அழகு தமிழில் நெறிப்படுத்த நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement