sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

கத்தாரில் முத்தமிழ் மன்றத்தின் "இணையில்லா இளையராஜா" விழா

/

கத்தாரில் முத்தமிழ் மன்றத்தின் "இணையில்லா இளையராஜா" விழா

கத்தாரில் முத்தமிழ் மன்றத்தின் "இணையில்லா இளையராஜா" விழா

கத்தாரில் முத்தமிழ் மன்றத்தின் "இணையில்லா இளையராஜா" விழா


ஜூன் 08, 2025

Google News

ஜூன் 08, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கத்தார் முத்தமிழ் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம் என தமிழ்மொழியின் இயல், இசை, நாடகம் சார்ந்த விழாக்களை வெகு நேர்த்தியாக நடத்திவருகிறது. அந்த வகையில் 'ஒரு கலைஞனை பெருமை படுத்துவது என்பது அவர் வாழும் காலத்திலே நல்விழா எடுத்து கொண்டாடுவது' என்கிற சிந்தனையில் தன் வித்தியாசமான இசை பாணியால் பலகோடி மக்களின் மனதை கொள்ளையடித்த இளையராஜாவின் அற்புதமான படைப்புகளை கொண்டாடும் முயற்சி, ஒரு கனவாக ஆரம்பமாகி, பிறகு நினைவுகளை மென் தூறலாக பொழிந்த பெரிய இசை கத்தாரில் உள்ள 'அட்ரியம்' அரங்கில் மலர்ந்து உருவம் பெற்றது. நிஜமாகவே அது ஒரு ரோலர்கோஸ்டர் சவாரி செய்த அனுபவமாகத் தான் இருந்தது.


இந்திய மற்றும் கத்தார் தேசிய கீதங்களுடன் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் முழங்கிட, தமிழகத்தின் பாரம்பரிய குத்துவிளக்கு -தீபம் ஏற்றும் நிகழ்வுடன் அட்ரியம் அரங்கில் அதிரடியும் மெலடியும் தொடங்க இசைராஜா அவரது படைப்பின் வாயிலாக நிகழ்வில் இணைந்தார்.


திரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முத்தமிழ் மன்றத்தின் குருஸ்ரீ கருவாக்கி உருவாக்கிய காணொலி வர, அதில் வள்ளுவனும், ஔவையும், பாரதியும், பாரதிதாசனும் வரிசைக்கட்டி வந்தனர், அனைவரையும் வரவேற்றனர்.


பெருவிழாவின் ஒவ்வொரு பகுதியும் ராஜா ரசிகர்களின் நினைவுகளை உலுக்கி, தட்டி எழுப்பி, தாளம் போட வைக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. மேஸ்ட்ரோவால் உருவாக்கப்பட்ட சினிமா முத்துக்களிலிருந்து எந்த முத்துக்களை முங்கி எடுப்பது என்பது விழாவை வடிவமைத்த குழுவுக்கு பெரும் சவாலாக இருந்தது.


கல்யாணி ராகத்தில் ராகதேவன் வழங்கிய கீதங்கள் சிலவற்றை கர்நாடக சங்கீத பாடகி ரஞ்சனி ரமேஷ் தனது குழுவினரோடு பாடினார். 'சிந்து பைரவி' என்கிற தலைப்பு, ஆனாலும் அரங்கில் சௌந்தர்ய லகரியாக கல்யாணி தவழ்ந்து காற்றில் மிதந்தது.


அதைத்தொடர்ந்து, நாட்டிய ரத்னா டாக்டர் சூசன் மற்றும் குழுவினரின் 'சலங்கை ஒலி'யாக, 'நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்... ' எனத் தொடங்கியதும், இது மௌனமான நேரம் என்பதாக ரசித்த பார்வையாளர்கள், நாட்டிய ரத்னா மற்றும் குழுவினரின் அபிநய நடன சூறாவளியின் வேகத்தில் சிக்குண்டு சிலையாகி மெய்சிலிர்த்து மகிழ்ந்தனர்.


பின்னர் மாஸ்டர் வெங்கட் பிரபு மற்றும் குழுவினர் இசைஞானியின் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட 'நகரத்தின் காதல் - கிராமத்தின் காதல்' என்னும் கருப்பொருளில் நாடகம் போன்றதொரு நகைச்சுவை ஆட்டத்தை அரங்கேற்ற, 80_90களில் படாத பாடுபட்ட காதலை குழுவினர் கண்முன் நடித்தும் நடனமாடியதும் சிரிப்பொலியில் அரங்கம் அதிர்ந்தது.


அதன்பிறகு நடைபெற்ற சாதகக் குயிலினங்கள் இன்னிசைக்குழுவினரின் இசைவிருந்துக்கு பார்வையாளர்கள் மயங்கிக் களித்தனர். பூங்குழலி செந்தில் குமார் மற்றும் தென்றல் செந்தில்குமார், பிரதாப் ஸ்ரீதரன், Dr.சகாய பிரவின், சுஜாதா பிரகாஷ், லக்ஷ்மி ராஜேஷ், சுவாமிநாதன், மோகனப்ரியா சுவாமிநாதன், செல்வந்தினி செந்தமிழ் செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினரின் அட்டகாசமான இசை கச்சேரி எல்லோர் மனதையும் கொள்ளையடித்தது. இது இசைஞானியின் பாடல்களின் கலவையாக வெவ்வேறு வகைகளை கலந்து பாடி, பார்வையாளர்களையும் பாடவைத்தது. இதே குழுவினர் தமது அடுத்த பகுதியில் பாடகர் மகாதேவன் துரைராஜ் தனது பிரத்யேக நகைச்சுவை நடையில், கிட்டத்தட்ட கங்கை அமரன் போல கச்சேரியின் போக்கை வேறொரு சுவாரஸ்யமான வழியில் மடைமாற்ற, பாடகர்கள் வரிகளை எடுத்துக் கொடுக்க, திரையில் பாடல்வரிகள் ஓட, ஒட்டுமொத்த அரங்கமே எழுந்து நின்று பாடி, ஆடி கொண்டாடியது வேறு ஒரு மகிழ்ச்சிப் பிரவாகத்துக்கு கொண்டு சென்றது.


நூல் வெளியீடு


முத்தமிழ் மன்றத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் கவிஞர் மனோ கௌதம் படைப்பில் உருவான 'பெண் வண்ணத் தூரிகை' என்ற காதல் உணர்வுகளைக் கவிதையாகப் பேசும் நூல், மற்றும் 'ஐந்தலப் பாமாலை' என்கிற சிவத்தலங்கள் பெருமையைப் பேசும் தேனிலாவிய திருவருட்பதிகமாக செதுக்கப்பட்ட ஆன்மிகப் பதிக நூலும் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் நிர்மல், புத்தகங்களை வெளியிட முத்தமிழ் மன்றத்தின் நிர்வாகக் குழுவினர் அனைவரும் பெற்றுக் கொண்டனர். முன்னதாக கவிஞர் மனோகௌதம் குறித்து ஒரு புகழாரத்தை கவிதை வடிவில் சிவசங்கர் வழங்க, அதைத் தொடர்ந்து எழுத்தாளர் நிர்மல் வாழ்த்துரை வழங்கினார். ஏற்புரையில் கவிஞர் மனோ கௌதம் முகம் மலர உரையைத் தொடங்கி, நூல்கள் இரண்டும் வெளிவரக் காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி கூறி, அகம் நெகிழ முடிக்கும் போது நெகிழ்ச்சியுரையாக நிறைவு செய்தார்.


இந்த பருவத்தில் முத்தமிழ் மன்றத்தின் தமிழ்ச்சேவையாக தன்னார்வத்துடன் கத்தார் வாழ் பிள்ளைச் செல்வங்களுக்கு அடிப்படைத்தமிழ் வகுப்பு எடுத்துவரும் தமிழாசிரியை ரெங்கநாயகி கிருஷ்ணமூர்த்தி இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார்.


அதே மேடையில் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பில் தமிழ்ப்பாடத்தில் 100க்கு100 மதிப்பெண் பெற்ற வெற்றி மாணவியர்களான ரம்ய லட்சுமி, ராஜஸ்ரீ சிவதாசன் மற்றும் அவர்களின் வெற்றிக்கு ஊக்கமாக இருந்த தமிழாசிரியைகளான வாசுகி சத்யபாபு, அலர்மேல் செல்வி, வாணீஸ்வரி மோகன்குமார் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.


பிறகு 'கரகாட்டக்காரன்' பெயர் கொண்ட நிகழ்வில் இசைராஜாவின் நாட்டுப்புறப் பாடல்களை கிராமிய நடன ஆசான் முத்துலெட்சுமி தனது குழுவினரோடு, தெம்மாங்கு, ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், காடுவேட்டையாட்டம் என்று கலந்துகட்டி கிராமிய விருந்து படைத்தார். இதில் ஆரூத்ரா கலைக்கூடத்தின் சிலம்ப ஆசான் சரவணன் தனது அணியோடு தத்ரூபமாக இசைஞானி பாடலுக்கு சண்டையிட்ட காட்சி ரசிகர்களின் விசில் சத்தத்தோடு பாராட்டப்பட்டது. அதேபோல முத்தமிழ் மன்றத்தின் பல்கலை வித்தகர் விஜய் ஆனந்த் சக கலைஞரான கீர்த்தி வர்ஷாவுடன் ஆடிய கரகாட்டமும் அதைத் தொடர்ந்து அவரின் தனித்துவமான, ஆக்ரோஷமான சுடலைமாடசாமி ஆட்டத்தைப் பார்த்த அனைவருக்கும் கிராமத்தில் சில நிமிடங்கள் பயணித்த உணர்வை உண்டாக்கியது.


இசைமேடையை அதிரடி 'ரெட்ரோ' துள்ளாட்டத்தினால் தெறிக்க விட்டனர் வி.எஸ்.கே. நடனக்குழுவினர். இந்திரா வரதராஜன், விஷ்ணு செல்வக்குமார், தனுஷியா ஆகியோரின் நடன வடிவமைப்பில் அட்டகாசமான எண்பதுகளின் டிஸ்கோ ஆட்டம் அத்தனை பேரையும் வயது வித்தியாசமின்றி ஆடி ஆர்ப்பரிக்கச் செய்தது.


பிறகு வந்த பறையிசையில் எழுத்தாளர் நிர்மல், கவிஞர் ராஜமாணிக்கம், இலங்கை சுதாகர், தட்சிணாமூர்த்தி மற்றும் குழுவினர் சேர்ந்து பண்ணைப்புறக் கலைஞனின் இசைக் கோர்ப்புகளை பறையிசையில் வேறு பரிமா ணம் காட்டி இசைத்து அடிக்க, அங்கே மக்களின் ஆட்டம் அதிவேகமெடுத்ததை சொல்லத் தான் வேண்டுமா?


இணையில்லா இளையராஜா நிகழ்வில் இணைந்து பெருமை செய்த ஐ.சி.சி. பெருந்தகைகள்: ஷாந்தனு தேஷ்பாண்டே- (துணைத் தலைவர்), அபிராம் ஜோசப் -(பொதுச் செயலாளர்), ராகேஷ் வாக் (மனிதவள தலைவர்), ரவீந்திர பிரசாத் -(இணைப்பு தலைவர்), வெங்கப்பா பகவதுலா -(உள்ளக செயல்பாடுகள் தலைவர்), சாதிக் பாச்சா- (ஆலோசகர் உறுப்பினர்).


மற்றும் ஐ.சி.பி.எஃப். பெருந்தகைகள் விபரம்: ஷானவாஸ் பாவா - (தலைவர்), ரஷீத் அஹ்மத் (-துணைத் தலைவர்), தீபக் ஷெட்டி- (பொதுச் செயலாளர்), ஜாஃபர் தாயில் -(செயலாளர்), நிர்மலா குருஸ்ரீ - (நிதி மற்றும் சிறைத்துறை), மினி சிபி (மருத்துவ முகாம் தலைவர்), மணிபாரதி (காப்பீடு தலைவர்), கே.வி. போபன் (நிகழ்ச்சி குழு தலைவர்). மற்ற மூத்த சமூக தலைவர்கள் மோகன் குமார், இராமசெல்வம், இப்ராஹிம், ஹுசைன் ஆகியோரும் இசைவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மாறன் - அட்ரியம் அரங்க மேற்பார்வையாளர், சவுண்ட்- காணொலி அமைப்புக் குழு, மற்றும் இசை ரசிகர்களுக்கு சுண்டல், தேநீர், தண்ணீர் வழங்கிய அல்டிமேட் உணவகத்தின் நிர்வாகிகள் சக்திவேல், யாழினி குமார் மற்றும் உடனிருந்தவர்கள், தன்னார்வலர்கள் என அனைவரையும் அன்புடன் நன்றி பாராட்டினார் முத்தமிழ் மன்றத்தின் முதன்மை நிர்வாகி குருஸ்ரீ.


நிகழ்ச்சியை துளிகூட தொய்வில்லாமல் நேரமேலாண்மையோடு தொகுத்து வழங்கிய நிர்வாகக்குழு உறுப்பினரான ரெஜினா கோபால்சாமி மற்ற நிர்வாகக் குழுவினர்களான குருஸ்ரீ, நிர்மலா குரு, கிருஷ்ணவேணி, வசந்தி நகுலன், சிந்து தமிழ், விஜய் ஆனந்த், கவிஞர்கள் மனோ கௌதம், சிவசங்கர். எஸ் ஆகியோரின் பங்களிப்பு நிகழ்வின் வெற்றியை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டதென பார்வையாளர்களும் இசை ரசிகர்களும் பாராட்டினர். விழாவில் பங்களித்த ஒவ்வொரு கலைஞருக்கும் இசைஞானி முகம் கொண்ட பரிசுக் கேடயமும், சான்றிதழும் முத்தமிழ் மன்றம் சார்பாக வழங்கப்பட்டது.


ஆனந்த அலைகளை பரவச்செய்து, நினைவலைகளை இசையால் உசுப்பி விடும் இது போன்றதொரு முழுநீள கொண்டாட்ட நிகழ்வு இனி எப்போது வருமென ஆவலோடும் ஏக்கத்தோடும் கத்தார் வாழ் இசை ரசிகர்களும் இளையராஜா விசிறிகளும் கேட்டதே இந்த விழாவின் வெற்றிக்கு சான்றானது.


- நமது செய்தியாளர் எஸ். சிவ சங்கர்




Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us