/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளுக்கான பிரத்யேக அமைப்பு உதயம்
/
கத்தாரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளுக்கான பிரத்யேக அமைப்பு உதயம்
கத்தாரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளுக்கான பிரத்யேக அமைப்பு உதயம்
கத்தாரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளுக்கான பிரத்யேக அமைப்பு உதயம்
பிப் 25, 2025

சங்ககாலத்து அருமையான பாரம்பரிய விளையாட்டுகளுக்கு உயிர்கொடுக்கவும், இன்றைய குழந்தைகளுக்கு அவைகளை அறிமுகம் செய்து பயிற்சி அளிக்கவும், அவர்கள் விளையாடிக் களிக்கவும் வசதியாக QTTS (Qatar Tamilar Traditional Sports) எனும் 'கத்தார் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்' என்கிற அமைப்பு கத்தாரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகத்தின் கீழ் செயல்படும் இந்திய விளையாட்டு மையத்தின் அங்கீகாரத்துடன் இந்த அமைப்பானது இணைப்பு அமைப்பாக உருவாக்கப்பட்டது. இதன் ஆரம்பவிழா பிப்ரவரி 21ம் தேதி அல் அஷ்பால் சர்வதேச பள்ளியின் வெளியரங்கத்தில் நடந்தது. அதுவே தமிழர் பாரம்பரிய விளையாட்டுத் திருவிழாவாகவும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தமிழர்கள் அகநானூறு காலம்தொட்டு விளையாடியதும், கிராமம் முதல் பெருநகரம் வரை பல்கிப்பெருகியிருந்த பல்வேறு அழகியலும் கலையும் சார்ந்த விளையாட்டுகளும் இன்று பெயர் அளவில் புத்தகங்களில் மட்டுமே இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. உறங்கிக்கிடக்கும் உன்னத ஆட்டங்களை உயிர்ப்பிக்கும் வகையில் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணியிலிருந்தே அல் வுகைர் முதல் அல் கோர் வரை கத்தாரின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடும்ப சகிதமாக மக்கள் அரங்கத்திற்குள் வந்து ஆர்வத்துடன் பதிவு செய்ய ஆரம்பித்தனர், அதுவே விழாவின் முதல் வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
பாரம்பரிய விளையாட்டுக்கள்
தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக் கலைகளான பல்லாங்குழி, கோ கோ, பம்பரம், வில்வித்தை, கோலிகுண்டு, கபாடி, உறியடி போன்றவைகளை கொண்ட விளம்பரப் பதாகைகள் அரங்கின் சுவர்களை அலங்கரித்திருந்தது, மக்களின் ஆர்வத்தை தூண்டியது.
விளையாட்டு திடல் முழுக்க தமிழரின் பாரம்பரிய விளையாட்டு உபகரணங்களான பல்லாங்குழி, பரம்பதம், கல்லாங்காய், மிதிவண்டி வட்டைகள், கரலாக்கட்டை, வில் அம்புகள் மற்றும் அதற்கான இலக்கு அட்டைகள், பம்பரம், கோலிகுண்டுகள், 7 கற்கள் ஆகியவை மக்கள் விளையாடி மகிழ வைக்கப்பட்டிருந்தது. அதேபோல, ஓவியமாக வரையப்பட்ட சிலம்பம் முதல் மான்கொம்பு செய்தல் வரை தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் மனதைக் கொள்ளையடித்தது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இந்திய விளையாட்டு மையத்தின் பொதுச்செயலாளர் நிஹாத் அலி, இந்திய கலாச்சார மையத்தின் பிரதிநிதிகளான மோகன் குமார், ரவீந்திர பிரசாத், இந்திய சமூகநல அமைப்பின் பிரதிநிதிகளான நிர்மலா குரு, இராமசெல்வம், கத்தார் தமிழர் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ராஜ விஜயன், மணிபாரதி, இந்நாள் தலைவர் முனியப்பன் மற்றும் துணைத்தலைவர் ரமேஷ் பரமசிவம், கலாச்சார செயலாளர் புருஷோத்தமன், தமிழர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும், கத்தார் 'எழுமின்' அமைப்பின் தலைவர் மற்றும் அல்டிமேட் நிறுவனர், தலைவர் சக்திவேல் மகாலிங்கம், மகாராஷ்டிரா மண்டல் அமைப்பின் தலைவர் உஷா சந்தீப் பட்டீல், கத்தார் முத்தமிழ் மன்றத்தின் நிர்வாகிகளான குருஸ்ரீ, விஜய் ஆனந்த், மனோ கௌதம், சிவசங்கர், வெளிநாடு தமிழர் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் தாஹிர், மனிதநேய கலாச்சார பேரவையின் பொதுச்செயலாளர் ஹூசைன், கத்தார் தமிழ் இளைஞர்கள் விளையாட்டுகள் அமைப்பின் தலைவர் சத்தியராஜ், யாழினி வணிக நிறுவனர் குமார், சோழன் உணவக நிறுவனர் சதிஷ், இட்லி ஸ்டேஷன் நிறுவனர் கார்த்திக் ஜெயராம், வெல்கம் ட்ரேடிங் நிறுவனர் பாலா, கத்தார் தமிழர் மகிழ்வரங்கத்தின் வரதராஜன், ஆந்திர கலா வேதிகா அமைப்பின் தலைவர் வெங்கப்பா மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கத்தார் சிங்கப் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், இன்டர்நேஷனல் தமிழ் என்ஜினீயரிங் ஃபெடரஷன் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு விழாவுக்கு சிறப்பு செய்தனர்.
அறிமுக விழாவாக ஆரம்பித்து திருவிழாவாக உருமாறிய நிகழ்வை வெகு நேர்த்தியாக தொகுத்து வழங்கிய கீதா பாலகிருஷ்ணன் தமிழரின் பாரம்பரிய கலைகளின் சிறப்பு குறித்து எளிமையாக விளக்கினார். தமிழ்த்தாய் வாழ்த்து, கத்தார் மற்றும் இந்திய தேசிய கீதம் பாடப்பட்டதும் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இந்திய கலாச்சார முறைப்படி குத்துவிளக்கு ஏற்றினர்.
புதிய அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் வெங்கட் பிரபு வரவேற்புரை ஆற்றினார். தலைவர் பழனிக்குமார் குருசாமியின் உரையை, துணைத்தலைவர் பிரேம் கலா சரவணன் வாசித்தார். அதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் சிலம்பம் சரவணன் QTTS அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான முகமது கம்ருதீன் (இணைச் செயலாளர்), நிர்மல் சந்திரபோஸ்(பொருளாளர்), சீனிவாசன் (தலைவர் - பாரம்பரிய விளையாட்டு), வசந்த் (விளையாட்டு செயலாளர்), வெங்கட் பிரபு (தலைவர்-கலை மற்றும் கலாச்சாரம்), தக்ஷினாமூர்த்தி(செயலாளர்-கலை மற்றும் கலாச்சாரம்), மணிமாலா இளமுருகன்(தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஊடக செயலாளர்), துரை (நல்கை செயலாளர்) ஆகியோரை சபையில் அறிமுகப் படுத்தினார்.
மேலும் சரவணன் தனது உரையில், 'கத்தாரில் முதன்முதலில் ஆருத்ராவின் சிலம்பக்கலை பயிற்சிப் பட்டறை துவங்கப்பட்டதும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் கத்தாரில் இருந்து சிலம்பம் போட்டிகளில் ஆருத்ரா அணியும் கலந்து கொள்ள வேண்டும் என முடிவானதும், இந்தியா, மலேசியா நாடுகளில் நடைபெறும் சர்வதேச சிலம்பப் போட்டி போல கத்தாரிலும் நடத்த வேண்டும் என்ற சிந்தனை தோன்றியதும் இந்தப் பாரம்பரிய விளையாட்டு தொடக்க விழா நடைபெறும் இதே அல் அஷ்பால் அரங்கில் தான்' என்று கூறினார்.
அதுமட்டுமின்றி நமது பாரம்பரிய சிலம்பக்கலை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும் என்று தன் மகனை கத்தாரில் முதல் சிலம்ப மாணவராக்கிய பெருமை இவ்வமைப்பின் தலைவர் பழனிக்குமார் குருசாமியையே சேரும் என்று பாராட்டினார்.
இந்த அற்புதமான அமைப்பின் வருங்காலத் திட்டமாக ஏப்ரல் 25ம் தேதி முதல் சர்வதேச சிலம்ப போட்டியை கத்தாரில் நடத்துவதும், வளையப்பந்து என்ற தமிழர் விளையாட்டுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு சர்வதேச நிகழ்வில் அதற்கான போட்டிகள் நடத்தப்படும். தவில் மற்றும் நாதஸ்வரம் முழங்க சர்வதேசப் போட்டி விழா களைகட்டும், அதற்கான இசைக்கருவிகளோடு வித்வான்கள் தமிழகத்தில் இருந்து வரவழைக்கப் படுவர். அப்படியே தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று சரவணன் கூறினார்.
2025ம் ஆண்டுக்கான சர்வதேச சிலம்ப போட்டியின் விளம்பர பதாகை சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது. பொருளாளர் நிர்மல் சந்திர போஸ் நன்றியுரையை வழங்கினார். பறை இசை முழங்க சிறப்பு விருந்தினர்கள் விளையாட்டுத் திடலுக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். ஆருத்ரா சிலம்ப மாணவர்களின் சிலம்ப நிகழ்வை தொடர்ந்து வில் அம்பு விளையாட்டு, கரலாக்கட்டை, மிதிவண்டி வட்டை ஓட்டுதல், பம்பரம், கோலி குண்டு, பல்லாங்குழி, பரமபதம், கல்லாங்காய், உறியடி, கோகோ போன்ற விளையாட்டுகளை வந்திருந்த விருந்தினர்கள் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். விளையாட்டின் நடுவில் 70, 80 களின் தேன் மிட்டாய், பொரி உருண்டை, நூல் மிட்டாய், எலந்தவடை, கை காத்தாடி, ஆரஞ்சு மிட்டாய், புளிப்பு மிட்டாய் போன்ற நாம் மறந்த, இக்காலத்து சின்னஞ்சிறார் அறிந்திராத பண்டங்களும், விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
சுமார் 7 மணிநேரம் நடைபெற்ற இவ்விழாவின் இறுதியில் மீண்டும் பறையிசை ஓங்கி முழங்க, குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் உற்சாகமிகுதியில் துள்ளாட்டம் போட்டு மகிழ்ந்தனர். கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்ட விளையாட்டு விழா உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தந்தது; இதுபோன்ற திருவிழா இனி அடிக்கடி நிகழ வேண்டும் எனவும், அடுத்த பாரம்பரிய விளையாட்டுக் கூடல் எப்போது வருமென்கிற ஆர்வத்தோடு காத்திருப்பதாகவும் கூறி விடைபெற்றனர் கத்தார் வாழ் தமிழர்கள்.
- நமது செய்தியாளர் எஸ். சிவ சங்கர்
Advertisement