
யாதும் ஊரே; யாவரும் கேளிர் எனும் பொருண்மையில் டொனேகால் தமிழர் விழா 2024 கடந்த 13 ஏப்ரல் 2024 சனிக்கிழமை அன்று. அயர்லாந்தின் லெட்டர்கென்னி நகரத்தில் உள்ள Regional Cultural Centre (RCC) அரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில் அயர்லாந்து இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் முருகராஜ் தாமோதரன், லெட்டர் கென்னி - மில்ஃபோர்டு துணைமேயர் போரிக் மெக்கார்வி, லெட்டர்கென்னி - மில்ஃபோர்டு மேனாள் மேயர் டோனல் மேன்டி கெல்லி, டொனேகால் பன்முகக் கலாச்சார முன்னெடுப்பின் ஒருங்கிணைப்பாளர் பால் கெர்னன், Aontu கட்சியின் டொனேகால் பிரதிநிதி மேரி ஸ்வீனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
150 தமிழ் உறவுகள் மகிழ்வுடன் பங்கேற்ற இவ்விழாவில் தமிழ்க் கலாச்சாரத்தையும், தமிழ்த் தொன்மக் கலைகளையும் சிறப்பிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
மாருதி, அதிதி தேவராஜனின் இசை நிகழ்ச்சியும், ஆர்யா & ஸ்ரேயாவின் பரதமும், நேயா & ஒப்பில்லாவின் கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டமும், ஈஸ்டரின் நகைச்சுவை நிகழ்வும் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து, மதுரை வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபுக் கலாச்சார ஆய்வு மையக் கலைக்குழு நேரலையில் வழங்கிய தமிழ் மரபுக் கலை நிகழ்ச்சியும் நடை பெற்றது.
நிகழ்ச்சியை ராம், நேகா டெபோரா ஆகியோர் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஐரிஷ் மொழிகளில் தொகுத்து வழங்கினர்.
டொனேகால் தமிழர் விழா 2024 மூலம் திரட்டிய €1400, லெட்டர்கென்னியில் மக்களுக்காகத் தன்னார்வத் கொண்டு புரியும் Donegal Hospice என்ற தொண்டு நிறுனத்திற்குக் கொடையாக வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை Donegal Hospice அமைப்பின் உறுப்பினர் ஜெசிகா பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்விற்கான ஏற்பாட்டுச் செலவினங்கள் அனைத்தையும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கூட்டாக ஏற்றுக்கொண்டனர்.
பிரித்விராஜ் பத்மநாபன், சாய்சங்கர் சண்முகவேலு, ஜான் ரிச்சர்டு, ராமமூர்த்த்தி மற்றும் ஆர்த்தி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தனர்.
டொனேகால் தமிழர்கள் குறித்த தகவல்கள்:
டொனேகால் அயர்லாந்தின் வடமேற்கில் உள்ள கவுண்டி. டொனேகாலின் முதல் தமிழ்க் குடியேற்றம் 22 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. தற்போது, ஏறத்தாழ 40 தமிழ்க்குடும்பங்களும், இங்குள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணாக்கரும் வசிக்கின்றனர்.
அயர்லாந்து தமிழ்ச் சங்கம் லெட்டர்கெனியில் 2009 இல் ஆறு குடும்பங்களால் உருவாக்கப்பட்டது. பின்னர் அது டப்ளின் நகருக்கு மாறி, இன்றும் தொடர்ந்து இயங்கி வருகிறது.
அயர்லாந்தின் முதல் தமிழ் குறும்படம் சகுரா பூக்கள் 2019 இல் லெட்டர்கெனியில் படமாக்கப்பட்டது.
நவீனத்துவ தமிழ்க் கவிதைகள் அடங்கிய அயர்லாந்தின் அட்லாண்டிக் கரையிலிருந்து என்ற அயர்லாந்தின் முதல் தமிழ்க் கவிதை நூல் லெட்டர்கெனியில் வசிக்கும் தமிழர் எழுதியது.
டொனேகல் தமிழர்கள் 'யாதும் ஊரே யாவரும் கேளிர் - என்ற சிந்தனையை உள்ளத்தில் ஏந்தி, தக்க சமயங்களில் நிதி திரட்டி சமூகப் பணிக்கு வழங்கும் பணியை தொடர்ந்து ஆற்றி வருகின்றனர்.
- நமது செய்தியாளர் ரமேஷ்நாதன்
Advertisement