/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
அமெரிக்காவின் திருப்பதியாக பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா கோவில்!
/
அமெரிக்காவின் திருப்பதியாக பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா கோவில்!
அமெரிக்காவின் திருப்பதியாக பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா கோவில்!
அமெரிக்காவின் திருப்பதியாக பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா கோவில்!
டிச 14, 2024

அமெரிக்கா பென்சில்வேனியா மாநிலத்தில் பிட்சபர்க்கில் இருக்கும் வெங்கடேஸ்வரா கோவில் தான் வாடா அமெரிக்காவின் முதல் கோவில். அந்த நாட்களில் எழுத்தாளர்கள் மணியனும் எழுத்தாளர் சுஜாதாவும் அங்கு விஜயம் செய்து நிறைய எழுதியிருக்கிறார்களாம். கோவிலின் வரதராஜ பட்டர்,கோபால் பட்டர் இருவரும் அதன் சிறப்புக்களை எங்களுடன் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டனர்.
அப்போதெல்லாம் அமெரிக்க இந்தியர்கள் தங்களுக்கு வழிபாடு தளங்கள் இல்லாததற்காக ஏங்கியதுண்டு. அந்த சமயம் எதோ ஒரு அன்பர் தனது வீட்டில் விநாயகர் சிலை வைத்து பூஜிக்க அக்கம் பக்கமெல்லாம் அங்கு வழிபட செல்ல ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் சேர்ந்து கணபதியை நமக்காக மட்டும் வைத்துக் கொள்ளாமல் பொதுமக்களும் வந்து தரிசிக்க ஒரு பொது இடம் தேடினர். அதற்கு பணம், பொருள் வேண்டும், இடம் வேண்டும் என்று கமிட்டி போட்டு, இந்தியாவிற்கு சென்று திருப்பதியில் உதவி கேட்டார்கள். அவர்களும் அதற்கு சம்மதித்தனர்.
அதன் பின் இடத்தை தேர்வு செய்து வாங்கி அந்த இடம் உள்ளபடியே ஒரு மலை பிரதேசம்.அப்புறம் நிதி திரட்டி,பெரும் செலவில் சீர் திருத்தம் செய்து இக் கோவில் கட்டப் பட்டது. தென்னிந்தியர்களுக்காக இது வடிவமைக்கப் பட்டது போல வட இந்திய பாணியிலும் பிட்ச்பர்கில் தனி கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. 1976 இல் சுவாமியை பிரதிஷ்டை செய்ததிலிருந்து அனைத்து பிரணாயங்கள் பூஜைகளும் 48 வருடங்களாக அங்கு தொடர்ந்து நடந்து வருகிறது. அங்குள்ள தங்க ரத்தமும் கூட விஷேசம்.
கோவிலில் அபிஷேகம், அர்ச்சனை மற்றும் அனைத்திற்கும் மெசினில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளவேண்டும். எல்லாம் டிஜிட்டல் மாயம்! 108 கலசங்கள் வைத்து சம்பஸ்சரா அபிஷேகம், திருவிழாக்கள், உற்சவங்கள் என எல்லாமே அங்கு சிறப்பு. (மூலஸ்தானத்தில் படமெடுக்க அனுமதியில்லை) அமெரிக்காவில் உருவான முதல் வெங்கடேஸ்வரா கோவில் என்பதில் இதற்கு தனி மகிமை உண்டு.ஆந்திர பிரதேசத்தை AP என்பார்கள்.அதை திருப்பி PA என்று போட்டால் அமெரிக்காவில் பென்சில்வேனியா ஆகிறது!
திருப்பதி போலவே அங்கும் ஏழு மலைகள் இருக்கின்றன. அங்கே ராத்திரி என்றால் இங்கே பகல் என இறைவன் உலகின் எல்லா இடங்களிலும் நாள் முழுக்க பக்தர்களுக்கு தரிசனம் தருவதாக பட்டார்கள் மகிழ்கிறார்கள். இக்கோவிலின் அருகே மூன்று நதிகள் சங்கமித்து ஜீவநதியாக ஓடுகின்றது.
இந்தக் கோவிலில் அப்படி என்ன விஷேச நம்பிக்கை?
ஆழ்வார் பாடல்களில் அகலயில்லை நிறையம் என்று கூறியது போல திருப்பதி பெருமான் லஷ்மியுடன் இருக்கிறார். நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அதனால் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. குழந்தை பிறப்பிலிருந்து திருமணம் வரை கோவிலில் வைத்து நடந்து கொண்டிருக்கிறது.
அது தவிர யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு, ஜனவரி ஒன்று வருடப்பிறப்பு,நவராத்திரி நேரத்தில் பிரம்ம உற்சவம்,மே மாதத்தில் வசந்த உற்சவம், கார்த்திகையில் பவித்ர உற்சவம் நடக்கின்றன. அந்தந்த வருடங்களில் வருடத்தில் நடக்கின்ற தவறுகளுக்கெல்லாம் பிராயச்சித்தமாக இது நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து முடி காணிக்கை கொடுத்து சுவாமிக்கு திருமண உற்சவம் செய்து வழிபடுவது மெய்சிலிர்ப்பு.
அமெரிக்காவின் 50 மாகாண பக்தர்கள் மட்டுமின்றி,ஆஸ்திரேலியா, துபாய், கனடா,மெக்ஸிகோவிலிருந்தும் அங்கு சென்று சுவாமிக்கு பிரார்த்தனை செய்து வேண்டுதல் செய்து செல்கிறார்கள். அமெரிக்காவில் நமது இந்து கோவில்களை நன்கு ஆதரிக்கிறார்கள். இந்த ஊரில் அநேகமாக அனைவரும் படித்தவர்கள். அனைவருக்கும் 100% கடவுள் நம்பிக்கை இருக்கிறது.
அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் இந்து மதத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்கக்கூடிய வகுப்புகள் இருக்கின்றன. அந்த மாணவர்களை அழைத்து வந்து கோவிலை சுற்றிக்காட்டி இந்து மதத்தை அவர்களுக்கு விவரிக்கிறார்கள். இந்திய மொழி, இந்திய கலாச்சாரத்திற்கு இப்போது அமெரிக்காவில் மதிப்பு கூடியிருக்கிறது. தீபாவளியை பார்லிமென்டிலும் கொண்டாடுகிறார்கள்! அத்துடன் தீபாவளிக்காக இங்கு விடுமுறையும்!
மேலும் இந்த கோயிலில் பரதநாட்டியம், குச்சுப்புடி, தமிழ் வகுப்பு தெலுங்கு வகுப்பு, கன்னட வகுப்பு வார இறுதி நாட்களில் சொல்லிக் கொடுக்கிறார்கள். மொழிகளை மாணவர்கள் மறக்கக்கூடாது என்பதற்காக மொழி வகுப்புகளும் அங்கு நடக்கின்றன.
அங்கு கோயிலுக்கு தேவையான பூஜை பொருட்கள் இந்தியாவிலிருந்து கப்பலில் வந்து விடுகிறது. அதனால் ஐதீகம் குறையாமல் எல்லாம் செவ்வனே நடக்கிறது. கோவில் குருக்களுக்கு விசா, போக்குவரத்து,தங்கும் வசதி எல்லாம் கோயில் மூலம் செய்து கொடுக்கப் படுகிறது. அதற்கு எந்த தடையுமில்லை. அதே போல கோவில் நிர்வாகம் மூலம் பல தர்ம மற்றும் சேவைகளும் அமெரிக்கா மட்டுமில்லாது ஊரிலும் செய்து வருகிறது.
வசதியில்லா ஏழைகளுக்கு மாதத்திற்கு ஒரு முறையோ இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ இங்கு சமைத்து உணவு கொடுக்கிறார்கள்.அதற்க்கான சமையல் கட்டு முதல் எல்லாம் இங்கு உள்ளன. அத்துடன் பக்தர்களுக்கு இங்கு சுவாமி பிரசாதம் என்று சாப்பிடும் வகையில் புளியோதரை, தயிர் சாதம், சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கல், சுண்டல் என எல்லாமே அங்கு தினமும் உண்டு. அங்குள்ள ரெஸ்டாரண்டில் உணவுகளுக்கு மலிவு விலை!
இந்த கோவிலுக்கு அமெரிக்கா வரும் விஐபிகள்அவசியம் இங்கும் விஜயம் செய்கிறார்கள். சிவாஜி கணேசன்,மேஜர் சுந்தர்ராஜன்,விசு, போன்று இங்கு தரிசனம் செய்தவர்களின் பட்டியல் பெரிது.
- என்.சி.மோகன்தாஸ் with P.சரவணன்; பட தொகுப்பு: வெ.தயாளன்