sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

கொடிகட்டிப் பறக்கும் இந்தியக் குடியேறிகள் (அமெரிக்கா அழைக்கிறது!- 2)

/

கொடிகட்டிப் பறக்கும் இந்தியக் குடியேறிகள் (அமெரிக்கா அழைக்கிறது!- 2)

கொடிகட்டிப் பறக்கும் இந்தியக் குடியேறிகள் (அமெரிக்கா அழைக்கிறது!- 2)

கொடிகட்டிப் பறக்கும் இந்தியக் குடியேறிகள் (அமெரிக்கா அழைக்கிறது!- 2)


டிச 12, 2024

டிச 12, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்ற பகுதியில்பொதுவாக அமெரிக்காவுக்கு உலக மக்கள் ஏன் குடியேற விரும்புகிறார்கள், அது சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும் நடக்கிறது என்பதையும் சுருக்கமாகக் கண்டோம். அங்கிருக்கும் இந்தியப் பூர்வீக மக்கள் எப்படிச் சிறந்து விளங்குகிறார்கள் என்பதையும் அறிந்தோம்.

சுந்தர் பிச்சை போன்றவர்கள் மிகப் பெரிய நிறுவனமான கூகுள் நிறுவனத்துக்கே தலைமை அதிகாரியாக இருப்பது இந்தியர்களுக்குப் பெருமைதரும் விஷயமாக இருக்கிறது. மேலும், அமெரிக்கச் சட்ட மன்றத்துக்கு இந்த நவம்பர் தேர்தலில் வென்ற இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து ஆறாக உயர்ந்திருக்கிறது என்பது அமெரிக்கா இந்தியக் குடியேறிகளையும், அவர்களின் வம்சாவளிகளின் அரசியல் திறனையும் அறிந்து அவர்களைச் சரிசமமாக தேர்ந்தெடுக்கிறது என்பதும் புலனாகிறது.


விவேக் ராமசுவாமி அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்டார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டானால்ட ட்ரம்ப் அவரை இலான் மஸ்க்குடன் இணைந்து அரசுச் செலவை மட்டுப்படுத்தவும், அதன் செயல்திறனை அதிகரிக்கவும் தனி இலாகாவுக்கு நியமிக்கப் பரிந்துரைத்தார். அது இந்திய வம்சாவளியினரின் திறமையை அமெரிக்க அதிபரும் மதிக்கிறார் என்பதையே காட்டுகிறது அல்லவா?


இது போக நீதித் துறையிலும் வாஷிங்டன் fடி.சி. அப்பீல் கோர்ட்டின் தலைமை நீதிபதி (ஸ்ரீ ஸ்ரீனிவாசன்) உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் இந்திய அமெரிக்கர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.


மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டால், அமெரிக்காவில் இருக்கும் பத்து லட்சம் மருத்துவர்களில் 5.9% (59000 பேர் ) இந்தியர். நர்ஸாகப் பணியாற்றுவோர் 32,000. பொறியியல் வல்லுனர்களும், விஞ்ஞானிகளும்பத்துலட்சம்பேர் .


இதற்குக் காரணம் இந்தியக் குடியேறிகளும், அவர்களின் வம்சாவளிகளும்பெற்றகல்விதானே!


ஆகவே, இப்பகுதியில் அமெரிக்காவுக்குக் கல்வி கற்க வரும் வழிமுறைகளைச் சுருக்கமாக இப்பகுதி விளக்குகிறது.


அமெரிக்காவுக்குப் படிக்கப் போவோமா?


அமெரிக்காவுக்கு கல்லூரிப் படிப்புக்காக உலக மக்கள் எவரும் வரலாம். அதுதொடக்க நிலையாகவோ (Bachelor), மேல்பட்டப் படிப்புக்காகவோ (Masters), முனைவர் ஆவதற்காகவோ (Ph.D) இருக்கலாம். அதற்காக அமெரிக்காவின் கல்லூரிகளுக்கோ, பல்கலைக்கழகங்களுக்கோ மனுச் செய்ய வேண்டும். அதற்கான தகுதி உள்ளது என்பதற்கு தாம் படித்த கல்லூரிகளிலிருந்து மதிப்பெண் சான்றுகளையும், பேராசிரியர்களிடமிருந்து பரிந்துரைகளையும் அந்தந்தக் கல்லூரிகளுக்கு மனுவுடன், அதற்கான கட்டணத்தையும் (டாலர்கள்) அனுப்ப வேண்டும்.


அதுமட்டும்போதாது. அமெரிக்காவில் ஆங்கிலத்தில் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுவதால், ஆங்கிலத்தில் தேர்ச்சி உண்டு என்பதற்கான TOEFL (Test of English as Foreign Language) என்ற தேர்விலும் அதிகமான மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்தத் தேர்வு படித்தல், கேட்டல், பேசுதல், எழுதுதல் என்ற நான்கிலும் இருக்கும். இத் தேர்வு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடக்கும். இந்தத் தேர்வுகளை எழுதப் பயிற்சி தரும் நிறுவனங்கள் பல உள்ளன.


எவ்வளவு செலவு?


இதை ஒருமுறை எழுதுவதற்கு இந்தியாவில் $120 (ரூ.10,200/-) கட்ட வேண்டும். இந்தத் தேர்வின் மதிப்பெண்கள் இரண்டு ஆண்டுவரை செல்லுபடியாகும்.


இந்தத் தேர்வு முடிவுகளையும் எந்தெந்தக் கல்லூரிகள்/பல்கலைக் கழகங்களுக்கு மனுச் செய்கிறோமோ, அவற்றிற்கு மனுக்கட்டணத்துடன் அனுப்பவேண்டும். கீழ்க்கண்ட சுட்டியில் எல்லா விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்:


https://studyabroad.careers360.com/articles/toefl-exam-pattern


அப்பாடா என்று மூச்சு விடாதீர்கள்! உயர்நிலைப் பட்டப் படிப்பு படிக்க ஜி.ஆர்.இ. (GRE) என்ற தேர்வையும் எழுத வேண்டும். இதை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றால்தான் பிரபலமான பல்கலைக் கழகங்கள் அனுமதி மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும். இதற்கு ரூ.22550 கட்டவேண்டும். இந்தத் தேர்வும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடக்கும். எழுதியவர்களில் 90% பேர்களுக்கும் மேலாக மதிப்பெண்கள் எடுத்தால்தான் அனுமதி கிட்டும். இந்தத் தேர்வை பொறியியல்(Masters in Engineering), நிர்வாகத் துறை (MBA) இவற்றில் மேல்படிப்பு படிக்க விரும்புபவர்கள் எழுதுவர். இதன் மதிப்பெண்கள் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும்.


இவ்வளவு பணம் செலவழித்து படிக்க அனுமதி வாங்கினால் மட்டும் போதாது. அங்கு சென்று படிக்கப் பணமும் வேண்டும்.


அமெரிக்கக் கல்லூரிகள் ஒரு ஆண்டுக்குக் குறைந்த பட்சம் $11000 (ரு. 9,34,000 ) முதல் அதிக பட்சம் $43,500 (ரூ.36,92,000 ) வரை ஆகும். இதுபோக, அங்கு சென்றுவர, உண்ண, உடுக்க, தங்கவும் செலவு செய்யவேண்டும்.


சொத்து முழுவதும் காலியாகிவிடும் போலிருக்கிறதே என்ற அச்சம் தோன்றி அடிவயிற்றைக் கலக்குகிறது அல்லவா? முதல் நிலைக் கல்லூரிப் படிப்பிலும், மேற்கண்ட தேர்வுகளிலும் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கல்லூரிகள் உதவித் தொகை அளிக்கும். சில சமயம் படிப்புக்கான முழுக் கட்டணத்துக்கும் விலக்கு கிடைக்கலாம்.


படிக்க அனுமதிக் கடிதம் கிடைத்த பின்னர், அமெரிக்கத் தூதுவர் அலுவலத்திற்கு படிக்கச் செல்வதற்கான விசா வேண்டி மனுச் செய்யவேண்டும். இந்த விசாவுக்கு எ.ஃப்-1 (F-1) விசா என்று பெயர். இதற்கு $180 (ரூ.18,300) கட்டணம் செலுத்தவேண்டும்.


என்னடா இது, பிடிக்குப் பிடி நமச்சிவாயமாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? ரோஜாப் பூவைப் பறிக்கவேண்டும் எனில் முள்ளுக்குப் பயந்தால் முடியுமா?


செலவு பண்ணினாலும் பயனிருக்காதா?


தேவையான எல்லாச் சான்றுகளுடன் மனுச் செய்தால், இப்பொழுது சென்னை அமெரிக்கத் தூதர் அலுவலத்தில் நான்கைந்து நாள்களில் நேர்காணல் (interiew) கிடைக்கும்.


தேவைப்பட்டால், அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லும் மாணவர் படிப்பை முடித்துவிட்டுத் திரும்பி வருவாரா என்பதை உறுதி செய்ய அமெரிக்கத் தூதர் சில கேள்விகளையும் கேட்பார். கொடுக்கும் பதில் அவருக்கு நிறைவாக இருந்தால், விசா கொடுப்பார். இல்லையேல் மறுத்துவிடுவார். திரும்ப மனுச் செய்து நேர்காணல் வாங்கவேண்டும்


என்னது? இவ்வளவு செலவு செய்தும், விசா மறுக்கப்படக்கூடுமா?ஆம்! அதற்கான காரணங்கள் கீழே:


• மனு சரியானபடி பூர்த்தி செய்யப்படவில்லை


• கல்வியில் சரியான மதிப்பெண்கள் இல்லை.


• படிக்கச் செல்லத் தேவையான நிதி (உதவி உள்பட) உள்ளது என்று காட்டப்பட வில்லை.


• படிப்பு முடிந்ததும் திரும்பி வருவதற்காகச் சரியான காரணங்கள் இல்லை.


• ஆங்கிலத்தில் சரியான தேர்ச்சி இல்லை (தூதர் கேட்கும் கேள்விகளைப் புரிந்துகொண்டு சரியானபடி விளக்கமோ, பதிலோ கொடுக்கவில்லை).


• நேர்காணலில் சரியானபடி விளக்கம் அளிக்கவில்லை.


• குற்றம்புரிந்த வரலாறு (அமெரிக்காவுக்கு வருபவர்கள் குற்றம் புரிந்தவரா இல்லையா என்று எளிதில் அவர்கள் கண்டுபிடித்துவிடுவர். இந்திய அரசாங்கப் பாதுகாப்பு இலாகாவிடம் அந்தத் தகவலைப் பெற்றுக் கொள்வர். உதாரணமாக, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர், கம்யுனிஸ்ட் அனுதாபி, சிறைசென்றவர் என்றால் கண்டிப்பாக விசா மறுக்கப்படும்).


• முன்பு விசா கிடைத்து, அதன் விதிமுறைகளை மீறியவர் , அல்லது சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழைந்து திரும்ப அனுப்பப் பட்டவர்.


இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்பவரில் பெரும்பாலானோர் திரும்பி வருவதில்லை என்று அமெரிக்கத் தூதருக்குத் தெரியும். இருப்பினும், மேற்கண்ட காரணம் எதுவும் இல்லாவிட்டாலும், சிலரின் விசா மனுவை அவர் மறுத்தே ஆகவேண்டும். நம்மிடம் அனைத்துத் தகுதிகள் இருப்பினும், துரதிருஷ்ட வசமாக விசா மறுக்கப் படுபவர்களில் ஒருவராக நாம் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.


வேறென்ன வழி?


கல்வி கற்கச் செல்ல, எஃப்-1 விசா தவிர், ஜே-1 (J-1)விசா என்று ஒரு விசாவும் இருக்கிறது. இது மாணவர் பரிமாற்றத்திற்காகக் கொடுக்கப்படுவது. அதாவது இந்த விசாவில் படிக்கச் செல்பவர் திரும்பி வந்தே ஆகவேண்டும் என்பதால், இவ்வித விசா பொதுவாக மறுக்கப்படுவதில்லை.


படித்து முடித்ததும், இரண்டு ஆண்டுகள்வரை தொழில் நிறுவனங்களில் பயிச்சிபெற அனுமதி உண்டு. இதற்குப் பயிற்சி விசா (Optional Training Visa) என்று பெயர். அதுவும் அனைவருக்கும் கிடைப்பதில்லை. கிடைத்தால், இப்படிப் பயிற்சி பெறும்போது, அந்த நிறுவனங்கள் விரும்பினால், அந்த மாணவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்வதாக மனுச் செய்து நிரந்தர விசா பெற வழிவகுக்கும்.


எனவே, மாணவராகக் கல்வி கற்க அமெரிக்காவுக்கு வருவதற்கு என்னென்ன தடைகள் உள்ளன, எத்தனை நெளிவு சுளிவுகள் உள்ளன, எவ்வளவு மெனக்கேடுகள் உள்ளன, எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்துகொண்டோம்.


அடுத்தபடியாக, சுற்றுலாப் பயணி விசாக்களையும், சட்டரீதியாக வருபவர்கள் எப்படி சட்டத்தை மீறினால், சட்டவிரோதக் குடியேறிகளாவர் என்பதையும், சட்டவிரோதக் குடியேறிகள் நிலவரத்தையும் காண்போம்.


(தொடரும்)


- நமது செய்தியாளர் ஒரு அரிசோனன்







      Dinamalar
      Follow us