sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

ஹார்வர்ட் தமிழிருக்கைக்குழு தலைவர் மற்றும் செயலாளருடன் ஒரு நேர்காணல்

/

ஹார்வர்ட் தமிழிருக்கைக்குழு தலைவர் மற்றும் செயலாளருடன் ஒரு நேர்காணல்

ஹார்வர்ட் தமிழிருக்கைக்குழு தலைவர் மற்றும் செயலாளருடன் ஒரு நேர்காணல்

ஹார்வர்ட் தமிழிருக்கைக்குழு தலைவர் மற்றும் செயலாளருடன் ஒரு நேர்காணல்


டிச 09, 2024

டிச 09, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹார்வர்ட் தமிழிருக்கைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலையும் இவ்விருக்கையின் தற்போதைய நிலையையும் கொண்டு சேர்க்கும் வாய்ப்பாக இந்த நேர்காணல் அமையும் என்று நம்புகிறேன். அமெரிக்காவில் வாழும் தமிழனாக, தமிழை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் தமிழ் அமைப்புகளோடு தொடர்பில் இருக்கும் எனக்கு தமிழிருக்கைப் பற்றி பல கேள்விகள் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழிருக்கைக்கு நிதி திரட்டும் பணிகள் பற்றிப் பல பிரபலங்கள் பேசிய காணொளிகளைக் கண்டிருக்கிறேன். பலர் அதனை ஆதரித்தும் சிலர் ஹார்வர்ட் தமிழிருக்கைப் பற்றி அவதூறு பரப்பியதையும் படித்திருக்கிறேன். ஹார்வர்ட் தமிழிருக்கையில் உள்ள பல சந்தேகங்களையும் தற்போதைய நிலை பற்றியும் தமிழிருக்கைக்குழு தலைவர் மருத்துவர் விஜய் ஜானகிராமன் மற்றும் அதன் செயலாளர் முனைவர் சொர்ணம் சங்கருடன் நேர்காணல் செய்ததை ஒரு கட்டுரையாக இங்கு எழுதுகிறேன்.


'முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள் பாரி', 'மயிலுக்கு போர்வை போர்த்திய பேகன்' என்று நாம் படித்திருக்கிறோம். பாரி எதற்காகத் தேரை நிறுத்தி முல்லைக் கொடி வளர வழி வகை செய்ய வேண்டும்? ஒரு பந்தல் போட்டிருக்கலாமே! பேகன் ஏன் தன் விலையுயர்ந்த போர்வையை மயிலுக்குக் கொடுக்க வேண்டும்? மயில் என்ன போர்த்திக் கொண்டாத் தூங்கப் போகிறது? இப்படி பலர் கேட்டதுண்டு. பாரிக்கும் பேகனுக்கும் மட்டும்தான் தெரியும் அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று. இது அவர்கள் உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்று. அவர்கள் நினைத்த நம்பிய ஒன்றிற்காகச் அப்படி செய்திருக்கலாம். இன்றும் அவர்கள் வள்ளல்களாகப் போற்றப்படுகிறார்கள்.

ஹார்வர்ட் தமிழிருக்கை உருவாக இரண்டு மருத்தவர்கள் சேர்ந்து 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு ஏன் கொடுத்தார்கள்? மேலும் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்ட ஏன் பாடுபட வேண்டும்?



மருத்துவர் ஜானகிராமன் (வடகண்டம், திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்) பென்சில்வேனியாவில் இருதய சிகிச்சை நிபுணராக இருந்தவர். 1975 முதல் அமெரிக்காவில் வசிக்கிறார். மருத்துவர் சம்பந்தம் (தஞ்சாவூர் திருக்குடந்தையைச் சேர்ந்தவர்) கிரான்ஸ்டன், ரோட் தீவில் வசிக்கும் புற்றுநோயியல் நிபுணர் மற்றும் 1971 முதல் அமெரிக்காவில் இருக்கிறார். இவர்கள் இருவருக்குமே தமிழ் மொழிக்கென தன் வாழ் நாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. இவர்களுக்கு வைதேஹி ஹெர்பர்ட் தமிழ் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்குகிறார். வைதேகி 18 சங்க நூல்கள், 7 பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், முதல்ஆயிரம், பாண்டிக்கோவை ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தாகூரின் கீதாஞ்சலியையும் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். வைதேகி, மருத்துவர் ஜானகிராமனிடம் ஹார்வர்ட் இருக்கை அமைப்பதின் தேவை பற்றிக் கூறி அங்குத் தமிழ் இருக்கை அமைந்தால் தமிழின் வளர்ச்சி அனைவரையும் சென்றடையும் என்று கூறியிருக்கிறார். மகாகவி பாரதி எழுதியது போல் 'அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்' என்று வைதேகி சரியான இடத்தில் தீப்பொறி வைத்தற்கிணங்க, மல்லிகா ஜானகிராமன், மருத்துவர் ஜானகிராமன், விஜயலட்சுமி சம்பந்தம் மற்றும் மருத்துவர் சம்பந்தம் ஆகியோர் ஹார்வர்டில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை அணுகி 2015 ஜூலையில் தமிழ் இருக்கையை நிறுவ ஒப்புதல் பெறுகின்றனர். அதே நேரத்தில் உடனே பணம் செலுத்தி அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் அவர்கள் இருவரும் $500,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஹார்வர்டு பல்கலைக்கழகம் கேட்ட 6 மில்லியன் டாலர்கள் திரட்ட உலகத் தமிழர்களை அணுகினர்.

இதற்கு முன் அமெரிக்காவில் வேறு எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உள்ளது?



கலிபோர்னியாவில் தமிழ்ச் சமூகத்தின் தீவிர முயற்சியினால் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் நவம்பர் 1996 இல் டாக்டர் ஜார்ஜ் ஹார்ட் தலைமையில் 'தமிழ் இருக்கை' முறையாகத் தொடங்கப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


தமிழ் இருக்கை என்றால் என்ன?

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் குறிப்பிட்ட ஒரு துறை அல்லது மொழிக்கென தனித்துறைகள் இருக்கும். இதில் இருக்கை என்பது வித்தியாசமானது. ஒரு துறையுடன் இது இணைக்கப்பட்டிருக்கும் என்றாலும், அதற்கென தனித்த அடையாளமும், உயர் கவுரவத்தையும் பெற்றிருக்கும். ஒரு மொழிக்கான இருக்கையில், அந்த மொழியைப் பிரத்தியேகமாகக் கற்பிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் என ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவார். இந்த பேராசிரியர் மூலம் ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகளும் நடத்தப்படும். இதுபோன்ற இருக்கைகள், மற்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்மொழியின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியின் தரம் மேம்படுத்தப்படுவதோடு, அந்த மொழி வரலாறு தொடர்பான ஆய்வையும் மேற்கொள்ள முடியும்.



பணம் செலுத்தினால் பல்கலைக்கழகங்கள் எந்த மொழிக்கும் இருக்கையை ஒதுக்குகின்றனவா?

பணம் மட்டும் செலுத்தினால் மொழிக்கென இருக்கையை பல்கலைக்கழகங்கள் ஒதுக்காது, செம்மொழி சிறப்பும் வேண்டும். செம்மொழி சிறப்பு கொண்ட கீழ்க்கண்ட பண்புகளில் குறைந்தது ஏழு தகுதிகளாவது இருக்கவேண்டும். அவைகள், 1. தொன்மை, 2. தனித்தன்மை, 3. பொதுமைப்பண்பு, 4. நடுநிலைமை, 5. கிளைமொழிகளின் தாய், 6. பட்டறிவு இலக்கியங்கள், 7.பிறமொழித்தன்மை, 8. சமயச் சார்பு, 9. உயர்சிந்தனை, 10. கலை, 11. மொழிக் கோட்பாடுகள் என்பனவாகும். தமிழ்மொழிக்கு மட்டும் தான் இந்த 11 சிறப்புகளும் உண்டு.



இவ்வளவு பணம் செலவு செய்து தமிழுக்கு இப்படியொரு அங்கீகாரம் தேவைதானா?

தமிழ் ஏற்கனவே உலகில் பல நாடுகளில் பேசப்பட்டாலும் இன்றைய தமிழர்கள் தமிழின் மொழியியல் நுணுக்கங்கள், அதன் வரலாறு போன்றவற்றை இன்னும் முழுமையாக அறிந்து வைத்திருக்கவில்லை எனலாம். என்றோ தோன்றிய நம் தமிழ் மொழி அன்றே ஒலி அறிவியல், உடல் கூறு அறிவியல் எனப் பல நுட்பங்களை தன்னகத்தே கொண்டு தான் இன்று நம்மை அடைந்திருக்கிறது. அதன் பெருமை, ஆழம், வரலாறு என்பவற்றை மேலும் அறிந்து கொள்ளக் கண்டிப்பாக இப்படியான ஒரு தமிழ் இருக்கை தேவைதான். அதுவும் சகல வசதிகள் தொழில்நுட்ப சாத்தியங்கள் கிடைக்கக் கூடிய, அவற்றைப் பயன்படுத்தும் அங்கீகாரம் உடைய ஒரு இடத்தில் இருப்பது இன்னும் சிறந்தது.



ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ஏன் 6 மில்லியன் டாலர்கள் செலவிட வேண்டும்? பெர்க்லி பல்கலைக்கழகத்தில் அமைத்த போது மிகவும் குறைவாயிற்றே?


இதற்கு நாம் ஹார்வார்டு பற்றி அறியவேண்டும். ஹார்வார்டு பல்கலைக்கழகம் உலகின் முதன்மைப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று. 387 ஆண்டுகள் பழமையான இது அமெரிக்காவின் மிக மூத்த பல்கலைக்கழகம். நோபல் பரிசு போன்ற மதிப்பு வாய்ந்த பரிசுகளைப் பெற்ற பல அறிஞர்களையும், பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் உருவாக்கி வழங்கிய பெருமை இப்பல்கலைக்கழகத்துக்கு உண்டு. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு உலக அளவில் பெரிய மதிப்பும், அங்கீகாரமும் உள்ளன. இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று இருப்பது மதிப்புக்குரிய ஒன்றாக இருப்பதுடன், தமிழாய்வின் தரத்தையும், வீச்செல்லையையும் உலக மட்டத்துக்கு உயர்த்துவதற்கு உதவும். மேலும் தமிழ், தமிழர்கள் தொடர்பான ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்தவும், குறித்த ஆய்வுகள் உலகால் அங்கீரிகப்படும் நிலையை உருவாக்கும்.


இதுவரை ஒட்டுமொத்த இந்தியா 12 நோபல் பரிசுகளைத்தான் வாங்கி உள்ளது. ஆனால் ஹார்வார்டு பல்கலைக்கழகம் மட்டுமே 50 நோபல் பரிசுகளை வாங்கி உள்ளது. இப்பொது ஹார்வார்டு பற்றிய புரிதல் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பதற்கு முன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கப் பட்டதா?

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் உள்ள 10 பல்கலைக்கழகங்களிலும் 101 என்று சொல்லப்படும் அடிப்படை நிலையில் தமிழ் கற்பிக்கப்பட்டது. பொதுவிதி என்னவெனில் ஓராண்டில் ஒருநிலையில் ஏதேனும் ஒரு பாடத்தைப் பயில எத்தனை மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அப்பாடம் அந்தாண்டில் கற்பிக்கப்படுமா இல்லையா என்று தெரியும். ஒரு குறிப்பிட்ட மாணவர் எண்ணிக்கையை விட குறைந்தால், அப்பாடம் அந்த ஆண்டில் இராது. ஒரு துறையில் நிதி நிலைமை நன்றாக இருந்தால் அப்பாடம் நிறுத்தப்படாமலே கற்பிக்கப்படும். எனவே குறைந்த பட்ச மாணவர்கள் பதிவு செய்யாவிட்டால் அவர்கள் சில ஆண்டுகளில் தமிழ் கற்பிக்காமலே போகலாம். ஹார்வர்ட் தமிழ் இருக்கையினால் கண்டிப்பாகத் தமிழ்ப் பாடமும் ஆய்வுகளும் தடையின்றி நிரந்தரமாக மேற்கொள்ளப்படும். தமிழ் இருக்கை பல்கலைக்கழகத்தில் நிலையாக இருக்கும். அதற்கு முடிவே கிடையாது.



ஹார்வர்ட் தமிழ் இருக்கையின் தற்போதைய நிலை என்ன?

ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தமிழிருக்கைக்காக பேராசிரியை முனைவர் மார்த்தா செல்பி தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம் பணியைத் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று இப்போது இரண்டாம் ஆண்டில் தொடர்கிறார். மேலும், தம்முடன் பணிசெய்ய 2 முனைவர் பட்ட மாணவர்களைத் தெரிவுசெய்ய ஏற்கனவே அறிவிப்புகள் செய்திருக்கிறார்கள். அதற்காக 6 சிறந்த மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிகிறது. முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களாகவும், முதுமுனைவர் ஆராய்ச்சியாளர்களாகவும் தெரிவு செய்யத் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழ்த்தாயகங்களிலுள்ள மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமென்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.



முதுமுனைவர் ஆராய்ச்சிக்காகத் தமிழர் தாயகங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்களை அழைப்பது குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் பேசி விதிமுறைகளை ஏற்படுத்தியபின் அறிவிப்புகள் வெளியாகலாம். ஆனால் அவர்களுடைய ஆராய்ச்சி ஊதியத்தைத் தமிழிருக்கைக் குழுவும், பிற புரவலர்களும் ஏற்க வேண்டியிருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அடிப்படைத் தமிழ்மொழியை இளங்கலை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஜோனாதன் இரிப்லி மாணவர்களிடையே தமிழ்மொழியைக் கற்கும் ஆர்வம் தமிழிருக்கையினால் அதிகரித்து வந்துகொண்டிருப்பதை குறிப்பிடுகிறார். தமிழிருக்கையின் அழைப்பின் பேரில் தமிழ்நாட்டிலிருந்து வந்து ஒரு மாதம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து பேராசிரியை செல்பியுடன் ஆய்வில் இறங்கியிருக்கும் தமிழ் எழுத்தாளர் சிவகாமி மொழிபெயர்ப்புத் திட்டங்கள் எப்படி தமிழிலக்கியங்களை உலகறியச்செய்யும் என்பதை எழுதுகிறார். தமிழிருக்கை செயல்படும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தென்னாசியவியல் துறையின் தலைவரான முனைவர் பரிமள் பாட்டீல் தமிழிருக்கையின் செயல்பாடுகளிலும், வளர்ச்சியிலும் தமக்கும் அக்கறையிருப்பதாகக் கூறுகிறார்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைத்த பின் வேறு பல்கலைக்கழகங்கள் தமிழ் இருக்கை அமைத்தனவா?



ஆம், கனடாவின் டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப் பட்டுள்ளது. ஹார்வர்டின் மதிப்பு மற்றும் செல்வாக்கு உலகளவில் தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் குரல்களைப் பெருக்கவும் மற்றும் உலகளவில் நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுடன் தொடர்புகளை வளர்க்கவும் ஹார்வர்ட் தமிழ் இருக்கை ஒரு தளத்தை வழங்குகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் மேலும் இந்தியாவின் புகழ் பெற்ற பனாரஸ் உட்படப் பல பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்கப் போவதாகப் பேசுகிறார்கள். தமிழ் பல உலகத் தலைவர்களிடம் பேசு பொருளானதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.

இந்த நேர்காணலின் வாயிலாக, இவ்விருக்கை அமைய தன் ஒரு நாள் வருமானத்தை அல்லது சேமிப்பின் சிறு பகுதியை நன்கொடையாக அளித்த பல சாமானிய தமிழ் மக்களுக்கு தங்களின் நன்கொடை செம்மொழியான தமிழ் மொழிக்கு மேலும் சிறப்படைய உதவிக் கொண்டிருக்கிறது என்பதில் ஒரு ஐயமும் இல்லை எனலாம்.



“நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்! கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்!” என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க மருத்துவராக ஜானகிராமனும், சம்பந்தமும் அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்தாலும் தமிழனாக ஒரு நல்ல மனிதர்களாக அவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு எடுத்த முயற்சிகள் அவர்களின் வாழ்நாளிலேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. அவர்களோடு பல உலகத் தமிழர்களும் சேர்ந்து கொடை அளித்தது மேலும் சிறப்பு!

இந்த நேர்காணல் அமைய எனக்கு உதவிய தமிழிருக்கைக்குழு செயலாளர் முனைவர் சொர்ணம் சங்கருக்கு என் மனமார்ந்த நன்றிகள்! வளர்க தமிழ்!



- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்






      Dinamalar
      Follow us