sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

கெட்டும் அமெரிக்கா சேர் (அமெரிக்கா அழைக்கிறது! - 1)

/

கெட்டும் அமெரிக்கா சேர் (அமெரிக்கா அழைக்கிறது! - 1)

கெட்டும் அமெரிக்கா சேர் (அமெரிக்கா அழைக்கிறது! - 1)

கெட்டும் அமெரிக்கா சேர் (அமெரிக்கா அழைக்கிறது! - 1)


டிச 08, 2024

டிச 08, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“அமெரிக்கா பொன் விளையும் பூமி! அங்கு பாலும், தேனும் ஆறாகப் பெருகி ஓடுகிறது. வருபவர் அனைவரையும் வாழவைக்கும் நாடு அது!” என்பதே உலகமக்கள் அனைவரின் எண்ணமும். அந்தக் கருத்துக்கு அதன் அண்டை நாடுகளாகிய கனடாவும், மெக்சிகோவும்கூட விலக்கல்ல.

அதுபோலவே, அமெரிக்காவின் நாணயமான டாலரும் உலகப் பொருளாதாரத்தில் கோலோச்சி வருகிறது. அதன் மதிப்பு உயர்ந்தால், தங்கத்தில் விலை குறையும்; அது தாழ்ந்தால் தங்கத்தின் விலை ஏறும். டாலர் தங்கத்தின் மதிப்புடன் பிணைக்கப்படவில்லை, இருந்தபோதிலும், தங்கத்தின் விலை டாலரின் மதிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாகத் தங்கமே உலகத்தில் மதிக்கப்படுகிறது.


அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் இருக்கும் இயற்கை, செயற்கை வளங்களும் பார்த்து அனுபவிக்க வேண்டியவை. அவற்றை வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் சென்று கண்டு களித்துவிட வேண்டும் என்று எண்ணுபவர் பலர். அதனால்தான் ஆண்டுக்கு ஏழரையிலிருந்து எட்டு கோடிப்பேர் அமெரிக்காவுக்குச் சுற்றுலாப் பயணிகளாக விஜயம் செய்கின்றனர்.

2.68 லட்சம் இந்திய மாணவர்கள்


“அங்கு கல்வி மிகவும் சிறந்து விளங்குகிறது. அங்கிருக்கும் கல்விக்கூடங்களில் பயின்றால், நல்ல வேலை கிடைக்கும். நிறையப் பொருள் ஈட்டி வாழ்வில் குறையில்லாது வாழலாம்,” என்று தங்கள் வாழ்நாள் சேமிப்பைக் கொடுத்துத் தங்கள் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கவைக்க அனுப்புவோரும் அதிகம்.

அதனால்தான் அமெரிக்கக் கல்லூரிகளில் பத்து லட்சத்துக்கும் மேலான வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்து படிக்கிறார்கள். 2022/23ல் 10 லட்சத்து ஐம்பத்தேழாயிரம் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள். அதில் இந்தியாவிலிருந்து 2,68,000 மாணவர்கள் அமெரிக்காவிலுள்ள 23 பல்கலைக் கழகங்களில் சேர்ந்துள்ளனர். இது அமெரிக்காவுக்குப் படிக்கவந்த மாணவர்களில் கால் பங்கு.


எனவே, படிப்பதற்கு என்று சட்டரீதியாக வரும் மாணவர்களை அமெரிக்கா அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு எப்படி வரவேண்டும் என்பதைப் பின்வரும் கட்டுரையில் அறிந்துகொள்வோம்.

சட்ட விரோத குடியேற்றம்


'பெரிய வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; அமெரிக்காவில் கிடைக்கும் எடுபிடி வேலைகூடத் தங்கள் நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைவிட எத்தனையே மடங்கு மேலானது; கள்ளத்தனமாகவாவது அமெரிக்காவில் நுழைந்து, ஒரு வேலையைத் தேடிக்கொண்டு, அதில் சிறிது சேமித்துத் தங்கள் பெண்டு, பிள்ளைகளுக்கு அனுப்பும் பணம் அவர்களின் வாழ்வாதாரத்து உதவும்,' என்று சட்டவிரோதமாக இதுவரை அமெரிக்காவில் நுழைந்திருப்பவரின் எண்ணிக்கை ஒருகோடியே பத்துலட்சத்துக்கும் மேல் என்று அமெரிக்க அரசின் உள்நாட்டுப் பாதுகாப்பு கணக்கீட்டு அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது. மேலும், ஓர் ஆண்டில் ஆறு லட்சத்து முப்பதாயிரம் பேர் சட்டவிரோதமாக நுழைகிறார்கள் என்றும் அது தெரிவிக்கிறது.

“எங்கள் நாட்டில் வசித்தால் எங்கள் சொத்துக்கும், உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. அடக்குமுறை தலைவிரித்து ஆடுகிறது. எங்களுக்கு அடைக்கலம் வேண்டும்!” என்று உலகிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு வருகின்றனர். இவர்களில் அரசியல் கருத்து வேறுபாட்டால் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை (இந்தியா உள்பட) என்பவரும் அடக்கம். இவர்களில் பெரும்பாலோனோர் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்று வருபவர்களே!


2022ல் மட்டும் நாலு லட்சத்துத் தொண்ணுற்று இரண்டாயிரம் பேர் அடைக்கலம் கேட்டு உள்ளே நுழைந்துள்ளனர். ஆனால், அமெரிக்கா ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் பேர்களுக்கு மட்டும் அடைக்கலம் கொடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளது. இவர்களின் மனு பரிசீலிக்கப்பட்டு, முடிவு சொல்லப்படும்வரை இவர்கள் அமெரிக்காவில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“கெட்டும் அமெரிக்கா சேர்!”


' கெட்டும் பட்டணம் சேர்!” என்று ஒரு பழமொழி உண்டு. இப்பொழுது அதைச் சிறிது மாற்றி, “கெட்டும் அமெரிக்கா சேர்!” என்று இந்தியர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட முப்பது லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவுக்குக் குடியேறியுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இவர்களுக்கு இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகளையும், தாற்காலிகமாக வேலை செய்ய வந்த இந்தியர்களையும் சேர்த்து 52 லட்சம் இந்தியர்கள் உளர். அதாவது, புதுச்சேரி, கோவா, சண்டிகர், சிக்கிம், அந்தமான் நிக்கோபார் இந்த யூனியன் பிரதேசங்களில் உள்ளவர்களின் மொத்த மக்கள்தொகைக்குச் சமமாகும்.

இங்கு படித்து, வேலை கிடைத்து, நிரந்தரமாகத் தங்கிவிட்ட இந்தியக் குடும்பங்களின்சராசரி வருட வருமானம் 2022ல், $1,45,000; அதாவது கிட்டத்தட்ட ஒரு கோடியே இருபத்தி இரண்டு லட்சம் ரூபாய்கள். இத்தோடு ஒப்பிட்டால், அது மற்றக் குடியேறிகளின் குடும்ப வருமானம் (வந்தேறி என்று சொன்னால் சரியல்ல) $78,000யையும், இங்கேயே இருக்கும் மற்றவர்களின் குடும்ப வருமானம் $77,600யும் விட கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.


இந்தியர்கள் குடியேற்றம்

இந்தியர்கள் அமெரிக்காவுக்கு 1960களிலிருந்து குடியேறத் தொடங்கினாலும், அதிகமாகக் குடியேறத் தொடங்கியது 2000லிருந்துதான். இதற்கு நாம் பில் கேட்ஸின் ஒய்2கேக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அதைச் சரிப்படுத்த கணிணி மென்பொருள் கல்வி பயின்றோர் (ஐ.டி படித்தவர்) தேவைப்பட்டனர். அமெரிக்காவில் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மிகவும் குறைவாக இருந்ததால், அதில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் எளிதாக அமெரிக்காவுக்கு வர வாய்ப்புக் கிடைத்தது.


டாட்டா, இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் நிறையப் பேரைத் தாற்காலிக விசா (எச்1) மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பின. நமக்கு வேலைக்கு ஆள் தேவையென்றால் எடுப்போம். வேலை முடிந்தால் போகச் சொல்லிவிடுவோம் அல்லவா? அதைத்தான் அமெரிக்காவும் செய்கிறது. இது போலவே,ஐ.டி. படித்துவிட்டுத் தாற்காலிகமாக வேலைக்கு வந்தவரைத் தேவை முடிந்ததும் வேண்டாம் என்று சொல்லிவிட்டது.

இவர்கள் அமெரிக்கக் கம்பெனிகளின் அலுவலர் அல்லர். டாட்டா, இன்ஃபோசிஸ் கம்பெனிகளின் ஊழியர்கள். எனவே, வேலையில்லாவிட்டாலும்,அந்த நிறுவனங்கள் அவர்களுக்குச் சம்பளம் கொடுத்து, அடுத்த வேலை வரும்வரை 'பெஞ்ச்' செய்து வைத்துவந்தன.


இவர்களில் நன்றாக வேலை செய்தவரை, அந்த அமெரிக்க நிறுவனங்கள், நிரந்தரமாக வேலைக்கு வைத்துக் கொள்வதாக அமெரிக்கக் குடியேற்ற இலாகாவுக்கு (USCIS) விண்ணப்பித்தன.. அனுமதி கிடைத்தால், அவர்கள் நிரந்தரக் குடியேறிகள் ஆகலாம். அதற்கு பல ஆண்டுகள் ஆகும். நவம்பர் 2024 தொடக்கம்வரை, ஜனவரி 2013ம் ஆண்டுவரை அனுமதி கிடைத்தவருக்கு மட்டுமே குடியேற்றச் சீட்டு (Green Card) கிடைத்திருக்கிறது.

மற்றவரின் கதி என்ன? வரும் கட்டுரைகளில் தெரிந்து கொள்வோமே!


(தொடரும்)

- நமது செய்தியாளர் ஒரு அரிசோனன்







      Dinamalar
      Follow us