/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
ஆக்லாந்தில் கர்நாடக இசை தேர்வு
/
ஆக்லாந்தில் கர்நாடக இசை தேர்வு

நியூஸிலாந்து கர்னாடிக் சொசைட்டி ஒவ்வொரு வருடமும் கர்நாடக இசை பயிலும் மாணவ மாணவிகளின் தேர்வுகளை நடத்தி வருகிறது. அவர்கள் வாய்ப்பாட்டு தவிர வாத்திய கருவிகளான வீணை. வயலின் மற்றும் கீபோர்டு ஆகியவற்றை இங்குள்ள ஆசிரியர்களிடம் பயிலுகிறார்கள். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆறு நிலைகளில் தேர்வு நடக்கிறது. சென்னையில் இருந்து புகழ் பெற்ற தேர்ந்த வித்வான்கள் வரவழைக்கப்பட்டு அவர்களை கொண்டு மாணவ மாணவிகளுக்கு தியரி மற்றும் பிராக்டிகல் தேர்வு முறைப்படி நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதில் ஆஸ்திரேலியா, வெலிங்டன் மற்றும் ஆக்லாந்தில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். இதுவரை சசிகிரண், ஸ்ரீதர் சாரி, பிரமீளா குருமூர்த்தி ஆகியோர் தேர்வாளர்களாக வந்து தேர்வு நடத்தியுள்ளனர். இம்முறை ரெங்கநாதன் சர்மா தேர்வுகளை நடத்திக் கொடுத்தார். அவர் மாணவ, மாணவிகளுக்கு ராகங்களை பிரித்து பாடி விளங்கங்கள் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் சந்தேகங்களுக்கும் விடையளித்தார்.
இந்த ஆண்டு மொத்தம் 150 தேர்வுகள் நடந்ததாக சொசையிட்டியின் செயலாளர் ரவி நாகராஜன் தெரிவித்தார். இத்தேர்வு ஆக்லாந்தில் உள்ள சாந்தி நிவாஸ் அரங்கத்தில் இரண்டு நாட்கள் 13/7/25 மற்றும் 20/07/25 நடைபெற்றது. காலை 10.30 மணியளவில் தொடஙகி மாலை 4 மணி வரை தேர்வு நடைபெற்றது. 13/7/25 அன்று காலை தருண் முரளீதர் வாய் பாட்டு கச்சேரி நடைபெற்றது. அவர் 5 கட்ட தேர்விலும் தேர்வு பெற்று இந்த ஆண்டு ஆறாவது நிலைக்கு உண்டான தேர்வை செய்தார். அவருடன் இணைந்து ராமன் ஈஸ்வரன் மிருதங்கமும் பவண் மணி வயலினும் வாசித்தனர். தருண் தேர்வுக்கு மிகவும் அருமையான ராகங்களை தேர்ந்தெடுத்து கீர்த்தனைகளை பாடினார். குறிப்பாக ஈஸ்வரன் இயற்றிய சாம கான லோலனே என்ற ஆபேரி ராகத்தை நன்றாக ஆலாபனை செய்து பாடியது சபையோரை கவர்ந்தது. அவர் மற்றும் கௌளை, வசந்தா ஷண்முகப்ரியா. போன்ற ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளை மிக நேர்த்தியாக பாடி சபையோர்களின் கைதட்டலை பெற்றார். வயலினும் தனி ஆவர்தனமும் கச்சேரிக்கு சிறப்பு சேர்த்தது.
அவரைத் தொடர்ந்து ஐந்தாம் நிலை தேர்வுக்கு கபிலன் மாணிக்கத்தின் கீபோர்டு வாசிப்பு சிறப்பாக இருந்தது, அவருடன் தருண் மிருதங்கம் வாசித்து இணை கொடுத்தார். அவரைத் தொடர்ந்து ரித்திகா ராமானுஜத்தின் வாய்ப்பாட்டு கச்சேரி சிறப்பாக நடந்தது.
20/7/25 ஆண்டு ஐந்தாம் நிலைக்கு நான்கு மாணவ மாணவிகள் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு அனன்யா தர்மராஜனின் வாய்ப்பாட்டு நடைபெற்றது. சிறந்த ராகங்களை தேர்வு செய்து பாடியது சிறப்பாக இருந்தது. அவரைத் தொடர்ந்து ஆகாஷ் ஆனந்தின் வீணை நிகழ்ச்சியும் அனன்யா லகோட்டியின் வாய்ப்பாட்டு நடைபெற்றது. இறுதியாக ஸ்ரீதா ஒருகன்டியின் வாய்ப்பாட்டு தேர்வுடன் இந்த ஆண்டு தேர்வு முடிவடைந்தது.
மைதிலி அசோக்குமார், பிரியா ரவி, திவாகர், சுரேஷ் ராமச்சந்திரா, யசோதா, பவானி, செல்வி ஆகியோர் தேர்வாளர்களாக அமர்ந்து மாணவ மாணவிகளின் நிகழ்ச்சியை மதிப்பீடு செய்தனர்.
தேர்வில் பங்கேற்ற அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement