/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
சப்பான் தமிழ்ச்சங்கச் சார்பில் பொங்கல் விழா
/
சப்பான் தமிழ்ச்சங்கச் சார்பில் பொங்கல் விழா
பிப் 23, 2025
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக சித்த மருத்துவர் கு.சிவராமன் கலந்துகொண்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் சப்பானில் வாழும் தமிழர்கள் மற்றும் சப்பானிய நாட்டைச்சேர்ந்த பெரியவர் மற்றும் சிறியவர்களின் ஆடல்பாடல்கள் இடம்பெற்றது. குறிப்பாக தமிழர்களின் பராம்பரிய பறையிசையை சப்பானிய நாட்டைச்சேர்ந்த தாயோகாவின் நிருத்தியாஞ்சலி குழுவினர் சிறப்பாக இசைத்துக்காட்டினர்.
விழாவின் முத்தாய்ப்பாக உலகெங்கிலுமுள்ள பல்வேறு நாடுகளுக்கு சென்று சித்த மருத்துவக்கருத்துக்களையும் சூழலியல் சார்ந்த கருத்துக்களையும் பரப்பிவரும் கு.சிவராமனுக்கு போதிதருமர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
திருக்குறளை சிறப்பாக சப்பானிய மொழியில் மொழி பெயர்த்தமைக்காக கா.பாலமுருகன், பிரசன்னா வாசுதேவன், ப.கலைச்செல்வன், சுமித்ராதேவி, கவிதா ஆகியோருக்கு “திருக்குறள் மாமணி” விருதும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை சப்பானிய மொழியில் மொழிபெயர்த்தமையைப் பாராட்டி சுமித்ராதேவிக்கு “மணிமேகலை”விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நாள் விழாவில் சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக கலந்து கொண்டு உலகளவிலான பேச்சுப்போட்டியில் இரண்டாமிடம் பெற்ற கவின் அகரனுக்கு “கீழப்பழுவூர் சின்னசாமி “விருது வழங்கி பாரட்டப்பெற்றது.
சிறப்புவிருந்தினர் கு.சிவராமனின் தமிழர் வாழ்வியல் இன்றைய காலகட்டத்தில் நாம் பின்பற்றவேண்டிய உணவுமுறைகள் மற்றும் நோயற்ற வாழ்விற்கு நாம் எடுக்கவேண்டிய மெனக்கெடல்கள் குறித்து சிறப்பான பயனுள்ள உரை இடம்பெற்றதுடன் “கு.சிவராமனிடம் சிலகேள்விகள்” என்கிற கேள்விபதில் நேரம் இடம்பெற்று விழாவின் சுவையை பன்மடங்காக்கியது.
விழாவின் இறுதியாக சப்பானில் நடத்தப்பெற்ற திருக்குறள் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள், தமிழிசை வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் விழாவின் தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்து.
தமிழர்தம் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கொண்டாடப்பெற்ற இவ்விழாவின் நெறியாள்கை செய்த ராம் பிரகாசு, ரேவதி ஆகியோர்க்கும், தன்னார்வலர்கள், நடன ஒருங்கிணைப்பாளர்கள், முழு ஒத்துழைப்பையும் அளித்து விழாவினை பெரு வெற்றி பெறச்செய்த தாய்த்தமிழுறவுகள் அனைவருக்கும் சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
- தினமலர் வாசகர் சே.சதீசு, நிறுவனர், சப்பான் தமிழ்ச் சங்கம்
Advertisement