/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ஒரு நாள் ரூ.100... கேரளா டூ மணாலி... பயணம் ட்ராவல் அரசன் முத்தரசு
/
ஒரு நாள் ரூ.100... கேரளா டூ மணாலி... பயணம் ட்ராவல் அரசன் முத்தரசு
ஒரு நாள் ரூ.100... கேரளா டூ மணாலி... பயணம் ட்ராவல் அரசன் முத்தரசு
ஒரு நாள் ரூ.100... கேரளா டூ மணாலி... பயணம் ட்ராவல் அரசன் முத்தரசு
ADDED : செப் 14, 2025 05:37 AM

இ ன்று நாடு முழுக்க பயணம் செய்யும் பல இன்ஸ்டாகிராம் டிஜிட்டல் கிரியேட்டர்கள், யுடியூபர்கள் உருவாகி வருகின்றனர். இவர்களில் ட்ராவல் அரசன் முத்தரசு தனித்துவமாக தெரிகிறார். பக்கத்து வீட்டுப் பையன் போல் இருக்கும் உடல்வாகோடு எளிதாக எல்லோருடனும் நண்பராகிறார். ஒரு நாள் ரூ.100 மட்டும் செலவழிக்க வேண்டும் என்ற வகையில் வீட்டில் இருந்து ரூ.12 ஆயிரத்துடன் கேரளா டூ மணாலி பயணத்தை துவக்கி தற்போது ஜம்மு காஷ்மீரில் இருக்கிறார்.
மதுரை பாசம் விட்டு போகாத அவர் கூறியதாவது...
சொந்த ஊர் மதுரை மேலுார் வெள்ளலுார் நாடு புலிமலைப்பட்டி. 20 வயது வரை கிராமத்திற்குள் தான் இருந்தேன். எங்கள் வீட்டை சுற்றி சிறிய சிறிய மலைகள் இருக்கும். அவற்றில் ஏறுவது, மேலே உறங்குவது போன்றவை பிடிக்கும். 20வயதுக்கு பிறகு வெளி உலகத்திற்கு செல்லும் போது இப்படி ஒரு உலகம் இருக்கிறதா என வியந்தேன். அருகில் உள்ள மலைகள் செல்ல விரும்பினேன். கேரளா, கொடைக்கானல் மலைகளுக்குசென்றேன். ஒரு நாள் எவரெஸ்ட் மலை பற்றி தெரிந்துக் கொண்டேன். அப்போது அங்கே செல்ல வேண்டும் என எண்ணம் தோன்றியது. அதற்கு நிறைய பணம் தேவைப்படும்.
பின் பொருளாதார தேவைக்காக மலேசியாவில் சென்று பணிபுரிந்தேன். சொந்த ஊர் திரும்பி அண்ணன் கவியரசிடம்,குடும்ப பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ரூ.12 ஆயிரத்துடன் தினசரி ரூ.100 செலவு செய்ய வேண்டும் என தீர்மானித்து கேரளா டூ மணாலி செல்ல முடிவு செய்தேன். இடுக்கி மாவட்டம் குட்டிக்கானத்தில் துவங்கினேன்.இந்தப் பயணம் எனது எவரெஸ்ட்டை அடையும் லட்சியத்தை நோக்கியது.
எவரெஸ்ட்டை எவ்வாறு அடைய வேண்டும் என எனக்குத் தெரியவில்லை அதனால் வழிகளை தேட ஆரம்பித்தேன். சராசரி வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்து எனது லட்சியத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்தேன்.
இந்தப் பயணம் மூலம் நான் கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல், ஆகிய மாநிலங்களிலும் டாமன், டையூ, லடாக்,ஜம்மு காஷ்மீர்ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் கால் பதித்து விட்டேன். தற்போது காஷ்மீரில் உள்ளேன்.நான் 10 ஆயிரம் கி.மீ.,க்கு மேல் பயணிக்கிறேன். இந்தப் பயணத்தின் முடிவில் நான் மலையேற்றம் செய்ய தகுதியானவன் என்று எனக்கும் மற்றவர்களுக்கும் நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு நாள் ரூ.100 மட்டும் செலவு செய்யும் நோக்கத்துடன் செல்கிறேன். ஆனால் எல்லா நாட்களும் அது நிறைவேறுவதில்லை. ஒருநாள் செலவே இல்லாமல் இருக்கும். மற்ற மனிதர்களின் உதவியால் சில நாள் அதிகமாகவும் செலவாகும்.
இந்தப் பயணத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டது மலைகளை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். இன்னும் மனிதநேயம் உயிருடன் தான் இருக்கிறது என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.நிறைய நண்பர்களையும், உறவினர்களையும் இந்த பயணத்தில் சம்பாதித்தேன்.இந்தப் பயணத்தில் பலவிதமான கலாசாரங்கள், மொழிகளை அறிகிறேன். ஒரு மாநிலங்களுக்குள் மூன்று, நான்கு மொழிகள் பேச்சு வழக்கத்தில் உள்ளது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எனது லட்சியத்திற்காக எனது குடும்பக் கடமைகள் அனைத்தையும் எனது அண்ணன் கவியரசிடம் ஒப்படைத்து விட்டு, நான் ஓடிவந்துள்ள ஒரு சுயநலவாதி என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
நான் ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி அடைவேன். அந்த வெற்றியை எனது அண்ணனுக்கு சொந்தமாக்குவேன் என்ற நம்பிக்கையில் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.