
'ப சுமையும், பாரம்பரியமும்...' இந்த வார்த்தை தான், கடந்த சில நாட்களாக அரசுப்பள்ளிகள் தோறும் ஒலித்த வாசகம். பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளிகள் தோறும் நடந்த கலை விழாவில் முன்வைக்கப்பட்ட தலைப்பு தான் இது. இயற்கையும், அது சார்ந்த வாழ்வியல் சூழலும் தான், நலமான சமுதாயத்தின் அடையாளம் என்பதை வலியுறுத்தும் வகையில், கலை விழாவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன; ஏராளமான மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர்.
'இயற்கையை பேணி பாதுகாக்க வேண்டும்' என்ற கருத்து, பள்ளி மாணவ, மாணவியர் பதிய வைக்கும் வகையிலான நோக்கில் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர் ஆசிரியர்கள். இப்படித்தான், காங்கயம் அருகே காடையூர், கல்லாங்காட்டுப்புத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
''பசுமை, பசுமைன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே... அப்படின்னா என்ன?'' என தன் வகுப்பாசிரியரிடம் வெள்ளந்தியாய் கேட்டார், 2ம் வகுப்பு மாணவி தன்யவர்ஷினி. ''நாம இருக்கிற இடத்துல மரங்கள் வளர்க்கணும்; அப்போ தான் அந்த இடம் முழுக்க பசுமையா இருக்கும்; சுத்தமான காத்து கிடைக்கும். நீயும் உங்க வீட்ல நிறைய மரக்கன்று நட்டு வளர்க்கணும்' என ஆசிரியை மகேஸ்வரி சொல்ல, அடுத்த நொடி, ''எங்க வீட்ல தான் மரக்கன்று நடறதுக்கு இடமே இல்லையே'' என, மழலை மொழியில் யதார்த்தம் சொன்னாள் அந்த சிறுமி.
''அப்படின்னா... நீ மரக்கன்றுகளை எடுத்துட்டு வா; நம்ம பள்ளியில நடலாம்''ன்னு ஆசிரியை சொல்ல, தன் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார், தன்யவர்ஷினி. தன் மகளின் ஆர்வத்துக்கு தடை போடாத பெற்றோரும், 150 சவுக்கு மரக்கன்றுகளை வாங்கி, சிறுமியின் வாயிலாக பள்ளியில் ஒப்படைத்தனர். அந்த சிறுமியின் பிறந்த நாளான நேற்று, அவரது கையால் மரக்கன்று நட ஏற்பாடு செய்தனர் பள்ளி ஆசிரியர்கள். அந்த வகையில், சிறுமியின் பெற்றோர், ஆசிரியர்கள் முன்னிலையில், சிறுமி தன்யா வர்ஷினி மரக்கன்று நட்டார்.
ஆசிரியைகள் சாவித்ரி, மகேஸ்வரி ஆகியோர் கூறியதாவது: ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித்துறை வாயிலாக நடத்தப்படும் கலைத்திருவிழாவில் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுவதுடன், அவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் சார்ந்த எண்ணங்களும் வளர்கிறது. நடப்பாண்டு, 'பசுமையும், பாரம்பரியமும்' என்ற சொல்லை செயலாக்கிய சிறுமியின் செயல் பாராட்டுக்குரியது. ஏற்கனவே, இந்த மாணவி எழுதிய 'குருவி முட்டை' என்ற கதை, பள்ளிக்கல்வித்துறையின் வாசிப்பு இயக்கத்தால் தேர்வு செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.