/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கும்மி குலவைப்பாட்டு நாயகி ப்ரியா
/
கும்மி குலவைப்பாட்டு நாயகி ப்ரியா
ADDED : ஆக 31, 2025 07:21 AM

ஏற்கனவே இறையன்பர்கள் எழுதிய பாடலை பாடுவதோடு, நானும் நிறைய பாடல்களை எழுதியுள்ளேன். அதிகாலை நேரத்தில் அம்மனைப் பற்றி நினைக்கும் போது வார்த்தைகள் அம்மனின் வடிவைப் போல அழகாய் அருவியாய் கொட்டும். அம்மனை நினைத்தால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகை வர்ணிக்க வார்த்தைகளுக்கு பஞ்சமாகி விடுமா... நினைக்க நினைக்க வார்த்தைகள் ஊற்றெடுக்கும். பாடச் செல்லும் கோயில்களில் முன்கூட்டியே சென்று அம்மனை பார்த்து விட்டு அதற்கேற்ப பாட்டெழுதுவேன்.
அப்பா முருகபூபதி ஆர்கெஸ்ட்ரா வைத்துள்ளார். அம்மா விருத்தாம்பிகை இல்லத்தலைவி. சிறுமியாய் இருக்கும் போதே அப்பா பாடுவதை கேட்டு வளர்ந்தேன். அந்த ஆர்வத்தில் மதுரை சங்கீத சத்குரு வித்யாலயத்தில் பி.ஏ., மியூசிக் முடித்தேன். அதன்பின் ஆர்கெஸ்ட்ராவில் அப்பாவுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தேன். திருமணத்திற்கு பின் சிறிது இடைவெளி விட்ட நிலையில் கணவர் ஹேமந்த் குமார் தந்த உற்சாகத்தில், சொந்தமாக 'நிலாவின் நைட்டிங்கேல்' ஆர்கெஸ்ட்ராவை மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறேன்.
மெல்லிசை, கானா என கும்மி பாட்டில் பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப மெட்டமைத்து பாடுகிறேன். ஒரு கோயிலில் பாடினதையே திரும்ப பாடக்கூடாது என்பதால் தான் பாட்டெழுத ஆரம்பித்தேன்.
ஏற்கனவே மற்றவர்கள் இசையில் வந்த டியூனுக்கு ஏற்ப வார்த்தைகளை உருவாக்கி பாடுகிறேன். அம்மன் கோயில்களில் முளைப்பாரி வளர்க்கும் ஒரு வாரத்திற்கு தினமும் இரவில் கோயில் முன் கூடி கும்மி பாட்டு பாடுவர். அப்போது பெண்கள் கும்மியடிக்கும் போது பாடுவது தான் 'ஹைலைட்'. எனது இசைக்குழுவில் நிறைய மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்கிறேன்.
அம்மன் கோயிலாக இருந்தாலும் விநாயகரில் ஆரம்பித்து முருகன், ராகு, கேது தொடங்கி கருப்பு, முனியாண்டி என எல்லா சுவாமிகளின் பெயரில் பாடல் பாடி தொடங்குவது எங்கள் ஸ்டைல். 'முத்து முத்தா பல்வரிசை... முந்தி வந்து பாரு... முத்துநகை கொண்டதாலே முத்து மாரினு பேரு... என உற்சாகமாக பாடும் போது, நம்மைச் சுற்றியுள்ளோருக்கும் உற்சாகம் பரவும். அதேபோல திருவிளக்கு பூஜை நிகழ்விலும் பாடுகிறேன்.
துன்பம் என்பது தேவையற்ற எண்ணம். சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். அதுவே பாசிடிவ் எனர்ஜி தரும். மேடையில் பாடல்கள் பாடும் போது சிரித்துக் கொண்டே பாடுவேன். ரசித்துக் கொண்டே பாடும்போது அகமும் முகமும் எனர்ஜி தரும். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவேன் என்கிறார் ப்ரியா. அலைபேசி: 88700 13030.