
அ ழகுக்கு மறுபெயர் பெண்ணா என்றால் இவரை காண்போர் ஆம் என ஒத்துக்கொள்ளவே செய்வர். அழகுக்கு அழகு சேர்க்கும் இவர், 'மிஸ் தமிழ்நாடு' பட்டம் வென்றார் என்றால் ஆச்சரியம் இருக்க முடியாது. இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர் மாடலிங் துறையில் அசத்தி வரும் அனன்யா அனு.
இறைவன் படைத்த யாருமே திறமையற்றவர்கள் கிடையாது. முயற்சித்தால் முடியாதது ஏதுமில்லை. விரும்பிய துறையில் வெற்றி பெறலாம் என்ற அனன்யா அனு, தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து இனி...
பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை. அப்பா வெளிநாட்டில் வேலை செய்ததால் என்னையும், சகோதரியையும் அம்மா தான் வளர்த்தார். எதிர்காலத்தில் மாடலிங் ஆக ஆசையெல்லாம் சிறுவயதில் இருந்தது இல்லை. பள்ளி படிப்பை முடித்த கையுடன் கல்லுாரியில் சேர்ந்தேன். கல்லுாரி காலங்களில் கலைநிகழ்ச்சிகளில் தோழிகளுடன் பங்கேற்பதுண்டு. 12 வயதிருக்கும் போது அம்மா என்னை பரதம், கதக் கற்று கொள்ள வைத்தது கலைநிகழ்ச்சிகளில் கலக்க உதவியாக இருந்தது. கல்லுாரி கலைநிகழ்ச்சிகளில் பல பரிசுகளையும் பெற்றிருக்கிறேன்.
இந்த நிலையில் தான் கல்லுாரி பேராசிரியைகளும், தோழிகளும் உனக்கு என ஒரு சிறப்பு தோற்றம் இருக்கிறது என்று மாடலிங் செய்ய ஐடியா கொடுத்தனர். அப்படி தான் 18 வயதில் மாடலிங் துறைக்கு வந்தேன். தொடர்ந்து ரேம்ப்வாக், கேட் வாக், ஆங்கரிங் செய்து வந்தேன்.
2021ல் நடந்த மிஸ் தமிழ்நாடு போட்டியில் முதல் முறையாக பங்கேற்றேன். அதில் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றதை வாழ்க்கையில் மறக்க முடியாது. அந்த வெற்றி, நடுவராகவும் என்னை உயர்த்தியது. கல்லுாரிகள், தனியார் நிறுவன கலைநிகழ்ச்சிகளில் நடுவராக தற்போது சென்று வர காரணமாகவும் அமைந்தது.
பொதுவாக மாடலிங் மற்ற துறைகளிலிருந்து வித்தியாசமானது. இத்துறைக்கு வரும் எவருமே போராடி தான் வர வேண்டும். பெரிய அழகியாக இருந்தாலும் போராடினால் தான் சாதிக்க முடியும்.
ஆண்களை காட்டிலும் பெண்கள் இத்துறைக்கு வருவது சவாலான விஷயம். பெண்கள் அடம் பிடித்தால் வேண்டியதை பெறலாம். வீட்டில் ஆண்களுக்கு வேண்டிய சுதந்திரம் கிடைக்கும். ஆனால் பெண் குழந்தைகளை பொறுத்தவரையில் அவர்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என பெற்றோர் சுதந்திரமாக விடுவதில்லை.
பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார். அதை பயன்படுத்தி நான் மாடலிங் துறையை தேர்வு செய்தேன். அம்மாவுக்கு முதலில் தயக்கம். அப்பாவோ வெளிநாட்டில் இருந்ததால் முதலில் ௨ ஆண்டுகளுக்கு நான் மாடலிங் செய்வதே அவருக்கு தெரியாது. தெரிந்த பிறகு இரண்டு ஆண்டுகள் வரை அவர் என்னிடம் பேசாமல் இருந்தார்.
ஆனால் மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற பிறகு நிலைமையே தலைகீழாக மாறியது. நான் சரியான பாதையில் விரும்பிய துறையில் செல்கிறேன் என புரிந்து ஊக்கம் கொடுக்க துவங்கினார்.
சுற்றியுள்ளவர்கள் எங்களை தவறாக பேசி விடுவார்களோ என அச்சம் பெற்றோரிடம் இருந்தது. அப்படி யாருமே சொல்லாதபடி நான் நடந்து கொண்டதும் அவர்களுக்கு மிகழ்ச்சி.
என்னை பொறுத்தவரை அழகுக்கும், கலைக்கும் அழிவில்லை. வயதாகி விட்டால் அழகு போய் விட்டது என ஒதுங்கி விடக்கூடாது.
சீரியல், சினிமா வாய்ப்புகளும் வரத்தான் செய்கின்றன. ஏதாவது கேரக்டர் செய்யலாம் என நினைத்திருந்தால் என்னை சின்னத்திரை, வெள்ளித்திரையில் இந்த நேரம் பார்த்திருக்கலாம். மனசுக்கு பிடித்த கேரக்டர் செய்ய வேண்டும் என வந்த வாய்ப்புகளை தவிர்த்து வருகிறேன். வரும் காலங்கள், வாய்ப்பை உருவாக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றவாறு நம்மிடமிருந்து விடை பெற்றார் அனன்யா அனு.