/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
3 கிராமங்களை மாற்றிய முதுமைத்தோழிகள்
/
3 கிராமங்களை மாற்றிய முதுமைத்தோழிகள்
ADDED : ஆக 24, 2025 04:16 AM

எ ண்ணங்கள் இளமையானால் வயது வெறும் எண் தான். பொது நலத்திற்கு பாடுபட இளமை, வலிமை தேவையில்லை. அனுபவம், அறிவு, திறமையுடன் ஆர்வம் இருந்தால் போதும். தள்ளாடும் வயதிலும் தளராமல் தேசத்தையே தாங்கலாம்.
அந்த வகையில் 75 வயதை தாண்டிய இருபெண்கள் ஆதரவற்றோருக்கு அடைக்கலம், இலவச கல்வி, தையல், இயற்கை வேளாண்மை என செயல்பட்டு மாணவர், பெண்கள் விவசாயிகளின் வாழ்வு மேம்படச் செய்து வருகின்றனர். இதுபற்றி நீங்கள் அறிய மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் துவரிமானுக்குத்தான் செல்ல வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட நீதிபதியின் உதவியாளராக இருந்தவர் முத்துசுகுணா 76. நீதிகேட்டு வரும் ஏழைகளின் பிரச்னைகளை எண்ணி மனம் வெதும்புவார். விவாகரத்து வழக்குகளில் ஜீவனாம்சம் பெற அலைந்து திரியும் அபலைகளுக்காக வருந்துவார்.
அம்மாவட்டத்தின் காந்திகிராமம் சேவிகாசிரம பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்தவர் விஜயலட்சுமி 81. ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான பள்ளி என்பதால் இரக்க தன்மை அதிகம். அடிக்கடி நீதிமன்றம் செல்கையில் பழக்கமானதால் இவருக்கு 40 ஆண்டாக தோழியாக இருக்கிறார் முத்துசுகுணா.
தன்னார்வ ஓய்வு பெற்ற முத்துசுகுணா திண்டுக்கல்லில் சரோஜினிநாயுடு கிராமநலம் மற்றும் கல்வி அறக்கட்டளை துவக்கினார். ஆதரவற்ற முதிய பெண்களுக்கு இலவசமாக அடைக்கலம் தந்தார். தண்ணீர், போக்குவரத்து வசதியுடன் இல்லம் துவக்க மதுரை துவரிமான் வந்தார்.
கணவர் முன்னாள் ராணுவவீரர். 2 மகள்கள். அவரவர் பணிகளை அவர்களே கவனிக்க, தோழி விஜயலட்சுமியுடன், முத்துசுகுணா பொதுநல சேவையை தொடர்ந்தார். ஓய்வூதியம், நன்கொடையால் பணிகளை தொடர்ந்தனர். விஜயலட்சுமி வி.ஆர்.எஸ்., கொடுத்து வந்துவிட்டார்.
இருவரும் காப்பகத்தில் பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களைக் கொண்டு இலவச டியூஷன், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கின்றனர். இவரது பணியை 'சோகோ' ஐ.டி.,. நிறுவனம் பாராட்டி உள்ளது. மேற்கண்ட சேவையுடன் திருப்தியடையாமல், விவசாயிகளுக்காக வேடர்புளியங்குளத்தில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தை துவக்கினர். வேடர்புளியங்குளம், தென்பழஞ்சியில் பூ, அச்சம்பத்தில் வாழை, வெற்றிலை, அகத்தியில் ரசாயன சாகுபடி செய்யும் விவசாயிகள் சிலரை இயற்கை விவசயத்திற்கு மாற்றினர்.
தனது நிலத்திலேயே மண்புழு உரம் தயாரித்து கிலோ ரூ.2க்கு கொடுத்தார். எருக்கு, தும்பை, சோற்றுக்கற்றாழை பயன்படுத்தி மருந்து தயாரித்து லிட்டர் ரூ.2க்கு வழங்கினார். பல ஆயிரம் செலவழித்து பயன்தராத பயிர்கள், முத்துசுகுணா உதவியால் பசுமையாக மிளிர்ந்தது. 3 கிராமங்களிலும் 100க்கும் மேலான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.
தோழியர் இருவருக்கும் 75 வயதை தாண்டிவிட்டது. 81 வயதை கடந்த விஜயலட்சுமி திண்டுக்கல்லில் இருந்து எப்போதாவது வருகிறார். முத்துசுகுணாவிடம், 'தினமும் பண்ணைக்கு சென்று பணிகளில் எப்படி ஈடுபட முடிகிறது' என்று கேட்டால் 'ஆர்வம்' என பதில் தருகிறார். நம்மால் முடிந்ததை நாலு பேருக்கு செய்ய வேண்டும் என்பதே ஆசை என்று வியப்பூட்டுகிறார்.
இவர்களை பாராட்ட94425 11530