PUBLISHED ON : ஆக 25, 2025 12:00 AM

துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜக்தீப் தன்கர், மருத்துவ காரணங்களைக் கூறி, திடீரென ராஜினாமா செய்தார். அதனால், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அரசியல் சட்ட பதவியான இதற்கு, புதிதாக ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
லோக்சபா துணை சபாநாயகர் பதவி போல, துணை ஜனாதிபதி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்பதால், விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், இரண்டு முறை எம்.பி.,யாக பதவி வகித்தவரும், தற்போது மஹாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகிப்பவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓட்டு போட்டு தான், துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர். அதன்படி பார்த்தால், இரு சபைகளிலும் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு போதிய பலம் உள்ளது. எனவே, அந்தக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.
இருப்பினும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம் பெற்ற, 'இண்டி' கூட்டணி சார்பில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் ஒரு நீதிபதியாக எந்த விதமான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர்; சட்டத் துறையை சேர்ந்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் நபர்.
நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் மதசார்பற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருபவர். உச்ச நீதிமன்ற பதவியில் இருந்து, 14 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றது முதல் இதுவரை, எந்த அதிகார பதவிகளையும் வகிக்காத நபர். அதனால் தான், அவரை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்துள்ளன.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கனவு கண்டு வரும் பா.ஜ., மேலிட தலைவர்கள், சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்ததன் வாயிலாக, வரும் சட்டசபை தேர்தலில், தங்களுக்கு தமிழக மக்களின் அமோக ஆதரவு கிடைக்கும்.
அதுமட்டுமின்றி, தமிழகத்தை ஆளும் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படும் என்றும் நம்பினர். ஆனால், இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் தன் முடிவை தெளிவாக தெரிவித்து விட்டார். இண்டி கூட்டணி அறிவித்துள்ள வேட்பாளருக்கே தன் ஆதரவு என்று உறுதியாக கூறியுள்ளார்.
தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் ராதாகிருஷ்னனை ஆதரிக்க வேண்டும் என்ற, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
மேலும், தே.ஜ., கூட்டணி சார்பில், தமிழகத்தை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தை சேர்ந்த ஒருவரே இண்டி கூட்டணி சார்பிலும் வேட்பாளராகவும் அறிவிக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்தன. ஆனால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுதர்ஷன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது, தென்மாநிலங்களை சேர்ந்த இருவரே களம் காணும் சூழல் உருவாகி உள்ளது.
அத்துடன், சுதர்ஷன் ரெட்டியை ஆதரிக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை போன்றே, தே.ஜ., கூட்டணி வேட்பாளரான ராதாகிருஷ்ணனை ஆதரிக்கப் போவதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், அம்மாநில எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியும், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்தவர் என்பதால், அவரை தேர்ந்தெடுத்ததன் வாயிலாக, அந்த இயக்கத்தையும் பிரதமர் மோடி திருப்திபடுத்தி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி; அதில், வியக்கத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படாது என நம்பலாம்.
ஆனாலும், ஜனநாயக ரீதியான போட்டி இருக்க வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளன. இருப்பினும், தே.ஜ., கூட்டணி வேட்பாளராக ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டது தமிழகத்திற்கு பெருமையே.