எதிர்க்கட்சிகளை கலங்கடித்த அரசியல் சட்ட திருத்த மசோதா!
எதிர்க்கட்சிகளை கலங்கடித்த அரசியல் சட்ட திருத்த மசோதா!
PUBLISHED ON : செப் 01, 2025 12:00 AM

அரசியல் சட்டத்தின், 130வது திருத்த மசோதா சமீபத்தில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பிரதமர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என, அரசு நிர்வாக பதவியில் இருக்கும் எவரும், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்தால், அவர்கள் பதவி வகிக்கும் தகுதியை இழப்பர் என்கிறது, இந்த சட்ட திருத்த மசோதா.
அதாவது, பிரதமரின் ஆலோசனையின் பேரிலோ அல்லது நேரடியாகவோ அமைச்சர்கள் மற்றும் பிரதமரை, ஜனாதிபதி பதவிநீக்கம் செய்யலாம். மாநில அமைச்சர்களை முதல்வரின் ஆலோசனைப்படி கவர்னர் நீக்கலாம் அல்லது மாநில முதல்வரை கவர்னர் நேரடியாக பதவி நீக்கலாம் அல்லது அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பது உட்பட பல விதிமுறைகள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
அதனால், 'இம்மசோதா அரசியலில் நல்லாட்சி யையும், ஒழுக்கத்தையும் வலுப்படுத்த உதவும்' என்று, ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்டாலும், 'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட, இந்த மசோதா பெரிதும் உதவும்' என, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பொது வாழ்வில் இருப்பவர்கள் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் தான். அதே நேரத்தில், பழிவாங்கும் நடவடிக்கையாக ஒருவர் மீது பொய் புகார்கள் கூறப்படும் போது, அதுபற்றி தீர விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும். அதற்கு பதிலாக, உரிய நடைமுறையை தவிர்த்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வது சரியானதல்ல.
அது மட்டுமின்றி, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், எதிர்க்கட்சிகள் மற்றும் அந்தக் கட்சிகளின் அமைச்சர்களை குறிவைக்க, மத்திய அரசின் கைகளில் கிடைத்த மற்றொரு ஆயுதமாகவே இருக்கும். சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் என்றும் புகார் கூறப்படுகிறது.
தற்போதுள்ள சட்டங்களும், அதை அமல்படுத்த பின்பற்றப்படும் நடைமுறைகளும், பொது வாழ்வில் உள்ளவர்களை குறிப்பாக, மத்திய, மாநில அரசுகளில் உயர் பொறுப்பு வகிக்கும் அரசியல்வாதிகளை பாதுகாப்பதாக உள்ளது. ஆனால், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அரசியல் சட்ட திருத்த மசோதா, அனைத்து விதமான பாதுகாப்புகளையும் நீக்கி, அரசியல் ரீதியாக யாரையும் பழிவாங்கும் நோக்கத்துடன் தடுப்புக் காவலுக்கு ஆளாக்க முடியும் என்பதும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
தற்போதைய மத்திய பா.ஜ., ஆட்சியில் மட்டுமின்றி, முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது உண்டு. இந்த இரண்டு அமைப்புகளும், மத்திய அரசின் கைப்பாவையா க செயல்படுகின்றன.
குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்க பயன்படுத்தப்படுகின்றன என்று, தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. அதற்கேற்ற வகையில், சமீப நாட்களில், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும், கடும் விமர்சனத்திற்கும் அமலாக்கத்துறை ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கலைக்க, முந்தைய காங்கிரஸ் அரசு, அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை பலமுறை பயன்படுத்தியதையும் யாரும் மறுக்க முடியாது. அதுபோன்ற நிலைமையை மத்திய அரசின் புதிய சட்ட திருத்தம் உருவாக்கி விடும் என்பதே பலரின் அச்சம்.
ஆனாலும், பொதுவாழ்வில் நேர்மையை பேணிக்காக்க வேண்டியது அவசியம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டுவதையும் உறுதிசெய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான், இந்த அரசியல் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய மசோதாவில், தேவையெனில் முறையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.