தினமலர் தலையங்கம்: கூட்டாட்சியின் முக்கியத்துவம் உறுதிப்படுத்திய சுப்ரீம் கோர்ட்!
தினமலர் தலையங்கம்: கூட்டாட்சியின் முக்கியத்துவம் உறுதிப்படுத்திய சுப்ரீம் கோர்ட்!
PUBLISHED ON : ஏப் 14, 2025 12:00 AM

தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய, 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் தராததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'சட்டசபையில், இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராததுடன், அதை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம். அதனால், தமிழக அரசு அனுப்பிய, 10 சட்ட மசோதாக்களுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு, 142ஐ பயன்படுத்தி ஒப்புதல் அளிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டனர்.
அதுமட்டுமின்றி, 'கவர்னருக்கு என வீட்டோ அதிகாரம் எதுவும் இல்லை' என்றும், மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னருக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாகவும், அதன்படியே அவர் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்ததுடன், சட்ட மசோதாக்கள் மீது கவர்னர் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவையும் நியமித்தனர்.
தற்போது, இணையதளத்தில் வெளியாகி உள்ள இந்த தீர்ப்பின் முழு விபரத்தில், 'மாநில அரசின் மசோதாக்கள் மீது, மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். எந்தக் காரணமும் சொல்லாமல் நிறுத்தி வைக்கக்கூடாது' என, ஜனாதிபதிக்கும் நீதிபதிகள் கெடு விதித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போது தான், இப்படிப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமிக்கும் மத்திய அரசுக்கு, ஒரு சரியான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
அத்துடன், கவர்னர் என்பவர் மாநில அரசுக்கு நண்பராக, ஆலோசனை சொல்பவராக, வழிகாட்டியாக இருக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை சீர்குலைக்கும், மத்திய அரசின் அரசியல் ஏஜென்டாக, பா.ஜ., அல்லாத மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுப்பவராக செயல்படக்கூடாது என்ற செய்தியும், தீர்ப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், முதல்வர் மற்றும் கவர்னர் இடையே மோதல் நிலவுவது, சமீபத்திய ஆண்டுகளாக வழக்கமானதாக மாறியிருந்தது. குறிப்பாக, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், பல்வேறு பிரச்னைகளில் கவர்னர்கள் மற்றும் முதல்வர்கள் இடையே கடும் மோதல் உருவாகி நிலைமை மோசமாகி இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அமைந்து உள்ளது.
மேலும், இந்த வழக்கின் தீர்ப்பானது, தமிழகத்திற்கு மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும், கவர்னர்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளதால், வழக்கு தொடர காரணமாக இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மாநிலத்தில் நல்லாட்சியும், நல்ல நிர்வாகமும் நடைபெற கவர்னரும், முதல்வரும் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேபோல, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதை விடுத்து, அரசியல் காரணங்களுக்காக, மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் இடையூறுகளை ஏற்படுத்துவது, அரசியல் சட்ட ரீதியான பொறுப்பு வகிப்பவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழகல்ல.
எனவே, மாநில அரசின் நிர்வாகத்தில் பிரச்னைகள் ஏற்படுத்தாமல், சுமுகமான முறையில் செயல்படும்படி, கவர்னர்களை மத்திய அரசு இனியாவது அறிவுறுத்த வேண்டும். அப்போது தான், மத்திய, மாநில அரசுகள் இடையே மோதல் போக்கு இல்லாமல், இணக்கமான உறவு தொடரும். மாநிலமும் முன்னேற்ற பாதையில் செல்லும்.
அசாதாரணமான சூழ்நிலைகளில், அசாதாரணமான தீர்வுகள் அவசியம் என்ற அடிப்படையில், கவர்னரின் ஒப்புதல் இல்லாமல், முதல் முறையாக, தமிழக அரசின், 10 மசோதாக்கள் சட்டமாகியுள்ளன. இதன் வாயிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே உயரியது; மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னர்கள் அல்ல என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிசெய்த முக்கியமான தீர்ப்பு இது.