sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

தலையங்கம்

/

தினமலர் தலையங்கம்: போலீஸ் காவல் மரணங்கள் தடுப்பது காலத்தின் கட்டாயம்!

/

தினமலர் தலையங்கம்: போலீஸ் காவல் மரணங்கள் தடுப்பது காலத்தின் கட்டாயம்!

தினமலர் தலையங்கம்: போலீஸ் காவல் மரணங்கள் தடுப்பது காலத்தின் கட்டாயம்!

தினமலர் தலையங்கம்: போலீஸ் காவல் மரணங்கள் தடுப்பது காலத்தின் கட்டாயம்!

7


PUBLISHED ON : ஜூலை 07, 2025 12:00 AM

Google News

7

PUBLISHED ON : ஜூலை 07, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேமடப்புரத்தில், கடந்த மாதம் 28ம் தேதி, நகை திருடியதாக கூறி, போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், 29, போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார். இச்சம்பவம், நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'கொல்லப்பட்ட காவலாளி ஒன்றும் ஆயுதம் தாங்கிய தீவிரவாதி அல்லவே' எனக்கூறி, போலீசாரின் செயல்பாட்டை விமர்சித்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இச்சம்பவம், 2020 ஜூன் 22-ம் தேதி அரங்கேறியது. அதன்பின், தமிழகத்தை உலுக்கியுள்ள சம்பவம் காவலாளி அஜித்குமார் மரணம்.

'விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்படுவோர் இறந்தால், அது ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்படி காவலில் ஒருவர் அடித்துக் கொல்லப்படுவது, அவருக்கு எதிராக இழைக்கப்படும் கொடூர குற்றம் என்பதுடன், மனிதாபிமானத்திற்கு எதிரான தாக்குதலாகும். இப்படிப்பட்ட காவல் மரணங்கள், அரசியல் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு உள்ள, வாழ்வதற்கான உரிமைக்கு எதிரான அத்துமீறல்' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்து உள்ளது.

இருந்தும், போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோர், அடித்துக் கொல்லப்படுவது அவ்வப்போது நடப்பது வருத்தம் தருகிறது. கடந்த 2022ல், நம் நாட்டில், 73 போலீஸ் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அதில், 14 மரணங்களுடன் குஜராத் மாநிலம் முதலிடத்திலும், 11 மரணங்களுடன் மஹாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், ஐந்து மரணங்களுடன் தமிழகம் ஆறாவது இடத்திலும் இருப்பதாக, தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தமிழகத்தை சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, 2022ல் நடத்திய ஆய்வில், 17 வயது சிறுவன் உட்பட, 11 போலீஸ் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தி.மு.க., அரசு அமைந்த பின், நான்கு ஆண்டுகளில் மட்டும், 24 போலீஸ் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக, சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதேநேரத்தில், லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலில், தமிழகத்தில், 2020 முதல், 2023 வரையிலான மூன்று ஆண்டுகளில், 13 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மாறுபட்ட தகவல்களுக்கு, போலீஸ் காவல் மரணம் தொடர்பாக, முறையான விபரங்கள் சேகரிக்கப்படாததே காரணம்.

தமிழகத்தில் போலீஸ் சித்ரவதையை தடுப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில், கேரளாவில், 2011ம் ஆண்டு காவல் துறை சட்டத்தில் இதுதொடர்பாக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், போலீஸ் காவல் மரணங்கள் தொடர்பாக புகார்கள் எழும்போது, பெரும்பாலும் கீழ்மட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேல்மட்ட அதிகாரிகள் குற்றம் புரிந்திருந்தாலும் தப்பி விடுகின்றனர். இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தற்போது போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால், அரசு தரப்பில் முறையான வாதங்களை முன்வைத்து தண்டனை பெற்றுத்தர வேண்டியது அவசியமாகும்.

தமிழகம் பல்வேறு வகையிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அப்படிப்பட்ட சூழலில், போலீஸ் அத்துமீறல்களும், காவல் மரணங்களும் தொடர்ந்தால், அது பல வகையிலும் மாநிலத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில், தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பது அவசியம். தேவையெனில், சட்ட திருத்தங்களும் மேற்கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us