PUBLISHED ON : ஆக 18, 2025 12:00 AM

நம் நாட்டில் தெரு நாய்கள் தொல்லை அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. அதுவும், தலைநகர் டில்லியில் இந்தப் பிரச்னை தீவிரமானதால், சமீபத்தில் இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, 'டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை எட்டு வாரங்களில் அப்புறப் படுத்தி, காப்பகங்களில் அடைக்க வேண்டும். 5,000 தெரு நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்க வேண்டும்.
'இனிமேல், 'ரேபிஸ்' பாதிப்பால் யாரும் உயிரிழக்கக் கூடாது' என, கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்தது. டில்லி மாநில அரசுக்காக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை, மற்ற மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டிய அவசியம் உருவாகும் என்றும் கூறப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு, விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டில்லி உட்பட பல நகரங்களில் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தெரு நாய்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமைத்தார்.
வழக்கை விசாரித்த அந்த அமர்வு, 'அதிகாரிகளின் அலட்சியத்தால் தான், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, அரசு தரப்பிலோ, டில்லி மாநகராட்சி தரப்பிலோ, இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
'தெரு நாய்கள் பிரச்னைக்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்' என, தெரிவித்தது. ஆனாலும், இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எந்த தடையும் விதிக்காமல், தீர்ப்பு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில், நாடு முழுதும், 37 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், நாள் தோறும், 10,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவதாக, உலக சுகாதார நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களின் சுகாதாரத்திற்கு மட்டுமின்றி, குழந்தைகள், முதியவர்கள், வேலைக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் வீடு திரும்புவோர் போன்றவர்களுக்கு, தெரு நாய்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை.
டில்லியில் மட்டும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றுக்கு எல்லாம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடுவுக்குள், காப்பகங்கள் அமைப்பது எளிதான காரியம் அல்ல.
இடப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, பயிற்சி பெற்ற ஆட்கள் பற்றாக்குறை என, பல பிரச்னைகளை மாநில அரசு சந்திக்க நேரிடும். அதனால், உத்தரவை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் தேவைப்படலாம்.
எனவே, அதற்கு முன்னதாக, நாய்களின் உணவுக்கு மூல ஆதாரமாக உள்ள குப்பை தொட்டி களை சீரான இடைவெளியில் காலி செய்து சுத்தமாக வைத்திருப்பது, நாய்களுக்கு உணவு அளிப்போரை கட்டுப்படுத்துவது, இறைச்சி கடைகள், உணவகங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவு மற்றும் இறைச்சியை கொட்டுவதை முறைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அது மட்டுமின்றி, நாய்களுக்கு கருத்தடை செய்வது, தடுப்பூசி போடுவது போன்றவற்றை யும், குறிப்பிட்ட கால இடைவெளியில் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக, நாய்களை துன்புறுத்தாமல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
இவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரி கள் சரியாக செய்யத் தவறுவதால் தான், தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அத்துடன், பொதுமக்களும் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரிக்கும் வகையில், அவற்றுக்கு உணவு அளித்து ஊக்குவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அப்போது தான், பிரச்னைக்கு தீர்வு காண முடியும். உச்ச நீதிமன்ற உத்தரவால் மட்டும் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்பதே நிதர்சனம்.