PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

காலை சூரியன் வழக்கம் போல உதிக்க, ஸ்பெயின் நாட்டின் வாலென்சியா அருகிலுள்ள புன்யோல் என்ற சிறிய கிராமம் கலகலப்புடன் கண்விழிக்கிறது.
காரணம் அன்று நடக்கப் போகும் தக்காளித் திருவிழாக்காணவும்,கலந்து கொள்ளவும்.
ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்த கொண்டாட்டத்தில் நிறைவில் யாரையும் யாருக்கும் அடையாளம் கூட தெரியாது. அனைவரும் ஒரே மாதிரியாக தக்காளிகளில் குளித்தவர்களாக காணப்படுவர்.
ஒரு மணி நேரம் முடிந்ததும் அடுத்த சைரன் ஒலி எழும் அந்த ஒலி அறிவிப்புடன் விழா நிறைவு பெறுகிறது,அனைவரும் சிரித்துக் கொண்டே தக்காளி கலவையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விடுபடுகின்றனர்.தெருக்கள் தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தப்படுகிறது ,புன்யோல் மீண்டும் அமைதியான கிராமமாகிறது, பங்கேற்றவர்களின் மனது மட்டும் 'அழிக்க' முடியாத அந்த ஆனந்த நினைவுகளால் மகிழ்கிறது.
உலகம் முழுவதிலும் கவனத்தை ஈர்க்கும் இந்த தக்காளி திருவிழா பிறந்த கதை சுவராசியமானது.
1945களில் ஊர்வலத்தில் ஏற்பட்ட சிறு சண்டை ஏற்பட்டது, அருகிலிருந்த காய்கறிக் கடைகளிலிருந்த தக்காளிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் எறிந்து கொண்டனர் அப்படி வீசி எரிந்த தக்காளியால் நியாயப்படி கோபம் வந்திருக்க வேண்டும் ஆனால் தக்காளியை எறிந்தவருக்கும் சரி,எறிவாங்கியவருக்கும் சிரிப்பையே தந்தது.
இந்த சம்பவத்தை மையமாக வைத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இளைஞர்களும்,இளைஞிகளும் இந்த இடத்தில் தக்காளியை எறிந்து விளையாட நம்மூர் ஹோலி பண்டிகை போல தக்காளி எறிதல் நிகழ்வு விழாவாக மலர்ந்தது அசுர வளர்ச்சி பெற்று வளர்ந்தது.
இது தப்பு உணவுப் பொருளை வீணாக்குதல் கூடாது என்று அரசாங்கம் தடைபோட்டது ஆனால் தடை போட்டபிறகுதான் அதை உடைக்கவேண்டும் என்ற வேகம் மக்களுக்கு பிறந்தது, விண்ணப்பம், வேண்டுகோள், கோரிக்கை, ஆர்ப்பபாட்டம், போராட்டம் என மக்கள் முனைப்புடன் இருக்க அரசு மீண்டும் தக்காளித்திருவிழாவினை அனுமதித்தது. இந்த தக்காளி திருவிழாவில் பங்கு பெற விரும்புவர்களிடம் ஒரு கட்டணம் வாங்கப்படுகிறது அந்த கட்டணம் வீணாகும் தக்காளிக்கான விலையாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது,இப்பேது எல்லாம் இந்த விழாவிற்காக தனியாக தக்காளி விளைவிக்கப்படுகிறது.பெருகிவரும் ஆதரவு காரணமாகவும் ஜோடிகள் முத்தமிடும் புகைப்படங்கள், நண்பர்கள் தோளில் தூக்கி செல்லும் கலாட்டா காட்சிகள், இசை— இவை எல்லாம் சேர்ந்து இப்போது இந்த விழா சர்வதேச திருவிழாவாகிவிட்டது.
ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமையன்று நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து பயணியர் வருகின்றனர்,லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்து வந்தாலும் பத்தாயிரம் பேர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.பங்கேற்க இயலாதவர்கள் பார்வையாளர்களாக மாறி உற்சாகம் பெறுகின்றனர்.
நிகழ்வின் போது தக்காளி தவிர வேறு எந்த பொருட்களும் வீசிட அனுமதி கிடையாது,அந்த தக்காளியையும் நன்கு நசுக்கிய பிறகே எறிதல் வேண்டும்,கண்களை பாதுகாக்க தேவை எனில் கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.
சுற்றுலா பயணியர் வருகையால் உள்ளூரில் வருமானம் பலவிதங்களில் கூடுகிறது.
விழா நடக்கும் நாளில் புனோல் முழுவதும் இசை, நடனம், பாரம்பரிய உணவு, கொண்டாட்டம் என்று களைகட்டியிருக்கும்.
நாலு பேர் சந்தோஷமாக இருந்தால் நல்லதுதானே.
-எல்.முருகராஜ்