PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

தாலிக்கயிறு, தமிழர் வாழ்க்கைமுறை மற்றும் திருமண மரபுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
இது வெறும் கயிறல்ல; நம்பிக்கையின், பாசத்தின், குடும்ப உறவின் புனித மிகு அடையாளமாகும்.
இந்தக் கயிறை தயாரிக்கும் பாரம்பரியக் கலைஞர்களில் ஒருவர்தான் தர்மராஜ். அவர் வடசென்னை கேகேடி நகர், அகத்தியர் தெருவில் வசிக்கிறார்.
தாலிக்கயிறு வேறு, அரைஞான் கயிறு வேறு, கோவில்களில் இலவசமாக தாலிக்கயிறைப் போலக் கொடுக்கப்படும் மஞ்சள் கயிறு வேறு.
அசல் கயிற்றில் தங்கத் தாலி மட்டுமின்றி பவளம், குண்டு, குழல் போன்ற பலவற்றையும் சேர்ப்பர். அவற்றின் எடையையும் தாங்கும்வகையில் நாங்கள் தயாரிக்கும் தாலிக்கயிறு இருக்கும்.
வெளியூரிலிருந்து இதற்கென தனி நூல் வரவழைத்து, அதை நெசவு போல நேர்த்தியாக பிரித்து பின்ன வேண்டும். பின்னியதை தரமான மஞ்சளில் முழ்கவைத்து காயவைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் காய்ந்த பிறகு, வெவ்வேறு அளவுகளில் வெட்டி மொத்த விற்பனைக்கடைகளுக்கு கொடுத்து விடுவோம்; அவர்கள் அதை விற்பர்.
எவ்வளவு சரக்கு தயாரித்துக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வர். ஆகவே வருடம் முழுவதும் தாலிக்கயிறு தயாரிப்பில் ஈடுபடுவோம். மழை நேரத்தில் காயவைக்க சற்று சிரமம் இருக்கும். ஆடி மாதத்தில் எங்கள் சரக்குக்கு மிகவும் அதிகமான தேவை இருக்கும்; அப்போது டீ குடிக்க கூட நேரமின்றி உழைப்போம்.
இது கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டிய தொழில். எங்கள் குடும்பத்தில் தாத்தா, அப்பா, இப்போது நான் — இப்படியாக இந்த தாலிக்கயிறு தயாரிப்பில் இருக்கிறோம். என் பிள்ளைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்கள் என் தொழிலைத் தொடர்ந்து செய்வார்களா என்பது காலம்தான் சொல்ல வேண்டும்.
படங்கள்: லட்சுமணன்