PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

தற்போது பெங்களூரில் இருப்பவர் ஆனந்த்
இவர் பணி நிமித்தம் சென்னையில் இருந்த போது நாய் ஒன்று அடிபட்டு கிடப்பதை பார்த்து இருக்கிறார்.
இதை எடுத்துச் சென்று கால்நடை மருத்துவமனையில் காட்டியபோது, நாயின் முதுகெலும்பு உடைந்து இருக்கிறது, பிழைப்பதும் பிழைத்தாலும் நடப்பது சிரமம் என்று சொல்லிவிட்டனர், சரி அது வாழும் வரை வாழட்டும் என்று முடிவு செய்து இவரும் இவரது நண்பர் முரளியும் சேர்ந்து அந்த நாயை ரெமி என்ற பெயரிட்டு வளர்த்தனர்.
இதற்காகவே ரோர் (ரெமிஸ் ஆர்கனைசேஷன் பார் அனிமல் ரிேஹபிலிடேஷன்)என்ற அமைப்பை 2018 ல் கிருஷ்ணகிரியில் துவக்கி பாதிக்கப்பட்ட நாய்களை வளர்த்தோம், நாய்களின் எண்ணிக்கை அதிகமானதால் பராமரிக்க ஒருவரை நியமித்தோம்.நாட்கள் செல்லச் செல்ல நாய்களின் எண்ணிக்கை அதிகமாகியது, இடம் போதவில்லை ஆகவே பெங்களூரு தும்கூரு சாலையில் சொந்தமாக இடம் வாங்கி விரிவாக்கம் செய்தோம்.இந்த இடத்தில் பல்வேறு சமூக அமைப்புகளின் உதவியுடனும், நல்லவர்கள் தரும் நன்கொடைகளாலும் ஊனமுற்ற நாய்களின் மறுவாழ்வு மையமாக ரோர் அமைப்பு பல்வேறு வசதிகளுடன் விரிவு செய்யப்பட்டு தற்போது சிறப்பாக நடந்துவருகிறது.
நல்ல நிலையில் இருக்கும் நாய்களை பாரமரிப்பதே சிரமமான சூழ்நிலையில் உடலால் மனதால் காயம்பட்ட நாய்களை பராமரிக்கும் ரோர் அமைப்பு உள்ளபடியே வரவேற்க வேண்டிய அமைப்புதான் இதுபற்றி கூடுதல் விவரம் அறிந்து கொள்ள www.roarindia.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-எல்.முருகராஜ்