PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

குரங்காபிமானம் பேசும் சரணாலயம்
மிசிசிப்பி மாநிலத்தின் பெர்கின்ஸ்டனில் அமைந்துள்ளது கல்ஃப் கோஸ்ட் பிரைமேட் சரணாலயம்.
மனிதர்களால் பாதிக்கப்பட்ட குரங்கினங்களுக்கு மீண்டும் வாழ்வளிக்கும் ஒரு அற்புதமான இடம். இங்கு பாதுகாப்பான சூழலில் குரங்குகளின் பல வகைகள் மற்றும் வனவிலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.
இன்றைய உலகில், வன அழிவு மற்றும் மனிதர்களின் அத்துமீறல் காரணமாக வனவிலங்குகள் தங்கள் இயற்கை வீடுகளை இழந்து வருகின்றன.அதோடு, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மற்றும் பரிசோதனை மையங்களில் விலங்குகள் பயன்படுத்தப்படுவது போன்ற கொடூரங்களும் தொடரத்தான் செய்கிறது.இதில் அதிகம் பாதிக்கப்படுவது குரங்கினமே.
இங்குள்ள இனங்களில் ஸ்பைடர் குரங்கு தனித்துவமானது இதன் உலகமே அலாதியானது.மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் அடர்ந்த மழைக்காடுகளில் வாழ்கின்றன. நீண்ட வால், நீளமான கைகள், நெகிழ்வான விரல்கள் கொண்டவை, இவை அனைத்தும் அவற்றை மரத்தின் விழுதுகள் மற்றும் கிளைகளில் பாய்ந்து விளையாட தேவையான வல்லமை தருகின்றன. அவற்றின் வால் ஒரு மூன்றாவது கை போலவே செயல்படுகிறது. கிளையில் தொங்குவதற்கு கைகள் தேவையில்லை; வாலே போதுமானது. இயற்கையின் இந்த அற்புத வடிவமைப்பு, காடுகளில் அவற்றின் வாழ்க்கையை சுலபமாக்குகிறது.இதன் இத்தகைய செயல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்திழுக்கிறது.
சரணாலயத்தில் குரங்குகளுக்கு உருவாக்கப்பட்டிருக்கும் சூழல், அவற்றின் இயற்கை வாழ்வை ஒத்திருக்க வேண்டும். காடுகளில் விளையாடி பாய்ந்து திரியும் குரங்குகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் சலிப்படையாமல் இருக்க, கயிறு ஏணிகள், ஸ்விங், கிளைகள் போன்ற செயற்கை அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவைகளின் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க,மன அழுத்தத்தை குறைக்க,விளையாட்டை ஊக்குவிக்க உதவுகிறது.
இந்த கல்ஃப் கோஸ்ட் பிரைமேட் சரணாலயம் , மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பை தருகின்றன.இங்கு வரும் பயணிகள், விலங்குகளை தொந்தரவு செய்யாமல், அவற்றின் இயற்கையான நடத்தையைப் பார்வையிடுவதன் மூலம் வனவிலங்கு பாதுகாப்பின் அவசியத்தை உணர்கிறார்கள்.
நாம் எல்லோரும் இணைந்து இயற்கையை, விலங்குகளை பாதுகாத்தால், உலகம் இன்னும் அழகாகும்.
-எல்.முருகராஜ்.