PUBLISHED ON : மே 23, 2026 04:50 PM

ஜம்மு-காஷ்மீரின் பனி படர்ந்த மலைச்சிகரங்களுக்கு இடையே, இந்திய ராணுவத்தின் ரத்தமும் சதையுமான அசாத்திய வீரத்தையும், எல்லையைக் காக்க அவர்கள் செய்த தியாகங்களையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில் ஒரு புதிய வரலாற்றுப் பொக்கிஷம் திறக்கப்பட்டுள்ளது. அதுதான், இந்திய - பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு மிக அருகில் இந்திய ராணுவத்தால் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'சௌர்யா காதா' தேசபக்தி நினைவிட வளாகம்!



இந்த நினைவிடம் வெறும் ராணுவத்தின் வீரத்தை மட்டும் பேசவில்லை; எல்லையோரப் பகுதிகளில் வாழும் காஷ்மீரி மக்களின் தியாகங்களையும் இங்கு பதிவு செய்துள்ளது. பல இக்கட்டான சூழ்நிலைகளில் இந்திய ராணுவத்திற்குத் துணையாக நின்ற உள்ளூர் மக்களின் பங்களிப்பையும், ராணுவத்திற்கும் அவர்களுக்குமான தொப்புள்கொடி உறவையும் போற்றும் வகையில் சிறப்புப் பகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரின் எல்லையோரப் பகுதிகளைப் பாதுகாப்பான சுற்றுலாத் தலங்களாக மாற்றும் முயற்சிகளை அரசு தற்போது தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சாதனா கணவாய் வழியாகப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய மையமாக இந்த 'சௌர்யா காதா' வளாகம் மாறத் தொடங்கியுள்ளது.
கடுமையான குளிர், ஆக்சிஜன் பற்றாக்குறை, உறைய வைக்கும் பனிப்பொழிவு மற்றும் அண்டை நாட்டின் அச்சுறுத்தல்களுக்கு இடையே, நமது நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் எவ்வாறு கண்ணிமைக்காமல் காக்கிறார்கள் என்பதைப் பொதுமக்கள் நேரில் கண்டு உணரும் உன்னத வாய்ப்பை இந்த நினைவிடம் வழங்குகிறது. சுருக்கமாகச் சொன்னால், 'சௌர்யா காதா' என்பது வெறும் செங்கல், காரைகாரைக் கட்டிடம் அல்ல; அது இந்தியத் தாயகத்தைக் காக்கத் தம் இன்னுயிரைத் தந்த மாவீரர்களின் வாழும் ஆவணம்!
-எல்.முருகராஜ்
