sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நிஜக்கதை/இதயத்தால் பணக்காரர்கள்

இதயத்தால் பணக்காரர்கள்

இதயத்தால் பணக்காரர்கள்


PUBLISHED ON : மே 23, 2026 09:15 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2026 09:15 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அவரவர் வாழ்க்கையை ஓட்டுவதே இன்றைய காலகட்டத்தில் பெரும்பாடாக உள்ளது. அடுத்தவருக்கு உதவ இங்கே நேரமும் இல்லை; பலருக்கு மனமும் இல்லை' - இதுதான் இன்றைய எதார்த்த உலகத்தைப் பற்றி நாம் அடிக்கடி உதிர்க்கும் பொதுவான அங்கலாய்ப்பு. ஆனால், 'மனிதநேயம் இன்னும் செத்துவிடவில்லை, அது இரக்கமுள்ள மனிதர்களின் இதயங்களில் இன்னும் ஈரமாகவே வாழ்கிறது' என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறார்கள் கர்நாடக மாநிலம் விஜயபுராவைச் சேர்ந்த எளிய மனிதர்கள்.

ஆடம்பர பங்களாக்களில் வாழும் கோடீஸ்வரர்களால் செய்ய முடியாத ஒரு உன்னதச் செயலை, அன்றாடக் காய்ச்சிகளான கூலித் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு ஏழை விதவைத் தாய்க்குச் செய்து காட்டியுள்ளனர்.Image 1579753விஜயபுரா நகரின் ஷஹாபேட்டை பகுதியில் வசிப்பவர் கஸ்தூரி ருகடி (35). இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரியின் கணவர் திடீரென இறந்துபோக, ஒட்டுமொத்தக் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்தது. இடிந்து விழும் நிலையில் இருந்த ஒரு சிறிய சிதிலமடைந்த குடிசைக்குள்ள்தான் இவர்களது வாழ்க்கை நகர்ந்தது. பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கஸ்தூரி அடுத்தவர் வீடுகளில் பாத்திரம் கழுவும் வேலைக்குச் செல்லத் துவங்கினார்.

விதியின் விளையாட்டு அங்கேயும் நிற்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, கஸ்தூரி திடீரெனப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். நடமாடக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், ஒரு சொட்டுத் தண்ணீருக்கும் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கும் கொடூரமான சூழ்நிலை உருவானது.

தாயின் நிலையை கண்டு கலங்கிய கஸ்தூரியின் 14 வயது மூத்த மகன், வேறு வழியின்றித் தன் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டான். தன் பிஞ்சுத் தோள்களில் குடும்பப் பொறுப்பைச் சுமந்து கொண்டு, கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினான். அங்கு கிடைக்கும் சொற்பக் கூலியைத் தன் தாயின் மருத்துவத்திற்கும், தங்கைகளின் பசி ஆற்றுவதற்கும் பயன்படுத்தி, அந்தக் குடும்பத்தின் ஒற்றைத் தூணாக மாறினான்.

அவர்கள் வாழ்ந்த குடிசை வீடோ எந்த நேரமும் இடிந்து விழலாம் என்ற அபாயத்தில் இருந்தது. மழைக் காலங்களில் ஒழுகும் அந்த வீட்டிற்குள் பயத்துடனேயே அவர்கள் வாழ்ந்து வந்தனர். வீட்டைச் சரிசெய்யும் வசதி அவர்களிடம் கனவிலும் சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது.

கஸ்தூரி குடும்பத்தின் இந்த அவல நிலையை அந்தப் பகுதியில் வசிக்கும் சக கூலித் தொழிலாளிகள் கவனித்தனர். ஏழ்மையின் வலி என்னவென்று தெரிந்த அந்த உள்ளங்கள், தங்களால் இயன்ற உதவியைச் செய்யத் துடித்தன. உடனே, 'விஜயபுரா யூத் கவரேஜ்' என்ற உள்ளூர் தொண்டு அமைப்பின் உதவியுடன் கஸ்தூரியின் குடும்பத்திற்காக நிதி திரட்டத் தொடங்கினர்.

அவர்கள் திரட்டிய பணத்தைக் கொண்டு செங்கல், மணல், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் வாங்கப்பட்டன. இதில் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அந்த அமைப்பில் இருந்த மேஸ்திரிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் பகல் முழுக்கத் தங்கள் சொந்த வேலைகளை முடித்துவிட்டு, மீதி நேரத்தில் கஸ்தூரியின் குடும்பத்திற்காகத் தங்களின் உழைப்பை முற்றிலும் இலவசமாகத் தந்து , அந்தப் புதிய வீட்டைத் கட்டி முடித்தனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் உறுப்பினர் மெஹபூப் பக்வான் நெகிழ்ச்சியுடன் கூறியபோது:

'கஸ்தூரி குடும்பத்தின் துயரமான நிலையை எங்களால் சும்மா கடந்து போக முடியவில்லை. எங்கள் அமைப்பில் பெரிய பணக்காரர்கள் யாரும் இல்லை; ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள், தினக்கூலிகள், பெயிண்டர்கள், மெக்கானிக்குகள் என அனைவரும் எளிய உழைப்பாளிகள்தான். ஆனால், அவர்கள் அனைவரும் இதயத்தால் பணக்காரர்கள்!

நாங்கள் ஒரு அறக்கட்டளை அமைத்து, மாதந்தோறும் தலா 100 ரூபாய் வீதம் உறுப்பினர்களிடம் நிதி திரட்டுகிறோம். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஐந்து ஏழை குடும்பங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை, மனிதநேயத்தைத் தவிர வேறு எந்தப் பேதமும் முக்கியமில்லை. அனைத்துச் சமுதாய மக்களும் எங்களுடன் கைகோர்த்துள்ளனர். நாங்கள் எந்தப் பிரசாரத்திற்காகவும் அல்லது விளம்பரத்திற்காகவும் இதைச் செய்யவில்லை; சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த நன்மைகளைச் செய்ய வேண்டும், அவ்வளவுதான்!' என்றார் கம்பீரமாக.

பணக்காரர்கள் தர்மம் செய்வதை விட, ஏழைகள் தங்களின் பசியிலும் மற்றவர்களின் பசி அறிந்து செய்யும் தியாகம்தான் உலகிலேயே ஆகப் பெரிய கொடை. விஜயபுரா தொழிலாளர்களின் இந்தச் செயல், இன்றைய சுயநல உலகில் மனிதநேயத்தின் முகவரியை மீண்டும் நமக்கு காட்டியுள்ளது.

-எல்.முருகராஜ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us