PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதயில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான கான் யூனிஸ் நகரம் பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது.
அங்கு குண்டு வீச்சுக்கு அன்றாடம் பலர் பலியாகிவந்தாலும் அது பற்றிய படத்தை, செய்தியை அதுதரும் துயரத்தை உலகிற்கு உணர்த்தி வந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பலியானதுதான் பெரும் சோகம்.
அவரது பெயர் மரியம் டக்கா,காசாவில் பிறந்து வளர்ந்தவரான அவர் தன்னைச் சுற்றி நடக்கும் சமூக அநீதிகள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் சந்திக்கும் துயரங்களை,போரின் தாக்கங்களை குறைக்க போக்க துயர்துடைக்க ஒரு ஆயுதமாக பத்திரிகை துறையைத் தேர்ந்தெடுத்தார்.
அவர் நினைத்தபடியே போர் தரும் அவலத்தை உலகிற்கு சர்வதேச ஊடகங்கள் மூலம் உரத்துச் சொன்னார்.
மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற சர்வதேச போர் நடைமுறை ஒப்பந்தங்களை கடைபிடிப்பார்கள் என்று கருதி மருத்துவமனை அருகே முகாம் அமைத்து பணியில் இருந்தனர்.ஆனால் அந்த நடைமுறை துாக்கிப் போட்டுவிட்டு குண்டு வீசப்பட்டதில் மரியம் டக்கா உள்ளீட்ட பலர் இறந்து போயினர்.
உயிரைப் பொருட்படுத்தாமல், மக்களின் குரலாகத் இருந்த மரியம் டக்கா என்ற செய்தியாளரும் இன்று செய்தியாகிவிட்டார்.
அவரது மரணம், போரில் உண்மையைச் சொல்லும் பத்திரிகையாளர்களின் ஆபத்தான நிலையை உலகிற்கு நினைவூட்டுகிறது. அவர் காட்டிய தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் மறக்க முடியாதது.
அவர் எழுதிய வார்த்தைகள், அனுப்பிய புகைப்படங்கள், பதிவு செய்த கதைகள் — எல்லாம் உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டே இருக்கும்,இருகட்டும்.
-எல்.முருகராஜ்