PUBLISHED ON : நவ 09, 2025

நீண்டநேரம் நின்றும், அமர்ந்தும் பணிபுரிபவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள்
மத்தியில் வெரிகோஸ் வெயின் என்னும் நரம்பு சுருட்டு பாதிப்பு ஏற்படுகிறது.
இதன் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது என்கிறார் டாக்டர்.
வெரிகோஸ் வெயின் நோய் என்பது என்ன?
இப்பாதிப்பு கால் பகுதிகளில்
ஏற்படுகிறது. கால்களில் உள்ள ரத்த நாளங்கள் சருமத்திற்கு நெருக்கமாகவும்,
பெரிய நரம்புகள் எலும்புக்கு நெருக்கமாகவும் இருக்கும். தவிர, இவை
இரண்டையும் இணைக்கும் இணைப்பு நாளங்கள் என, மூன்று வகை நாளங்கள் உள்ளன.
அசுத்த ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் விரிவடைந்து, புடைத்து
காணப்படுவதே வெரிகோஸ் வெயின் என்கிறோம்.
இப்பாதிப்பின்
அறிகுறிகள் என்னென்ன?
காலின் நரம்புகள் புடைத்து காணப்படுவது முக்கிய
அறிகுறி. தவிர, காலில் அரிப்பு, வீக்கம் ஏற்படுவது, தோலின் நிறம் மாறுதல்,
காலில் புண் மற்றும் ரத்த கசிவு, ஆறாத புண் போன்றவை பொதுவான அறிகுறி.
இந்நோய் வராமல் தடுக்க முடியுமா?
அதிக நேரம் தொடர்ந்து நின்றபடி வேலை
செய்வதை தவிர்ப்பதும், உடல் பருமன் இன்றி எடை சரியான அளவில்
வைத்துக்கொள்வதும், உடற்பயிற்சி செய்வது, ஊட்டச்சத்து உணவு
எடுத்துக்கொள்வதும் அவசியம். இப்பாதிப்பு பரம்பரையாக வரும் என்பதால்,
பரம்பரையில் யாருக்காவது இருந்தால், குறிப்பிட்ட கால இடைவெளியில் தாமாக
முன்வந்து பரிசோதனை செய்வது நல்லது.
சிகிச்சை முறைகள்
பற்றி கூறுங்கள்...
பாதிப்பு எதுவாக இருந்தாலும், ஆரம்ப நிலையில்
சிகிச்சைக்கு செல்வது அவசியம். பெரும்பாலும், இந்நோய் முற்றி ரத்தக்கசிவு,
புண் ஏற்பட்ட பின்னரே சிகிச்சைக்கு வருகின்றனர். ஆரம்ப நிலையில்
கண்டறிந்தால், பெரும்பாலான பின்விளைவுகளை முழுமையாக தடுக்கமுடியும்.
டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் எனும் பரிசோதனை வாயிலாக, துல்லியமாக கண்டறிந்து
விடலாம்.
தற்காலிகமாக காலுறை அணிவது, பாதிப்பு அதிகரிக்காமல்
இருக்க உதவும். முன்பு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என இருந்தது.
தற்போது, அறுவை சிகிச்சை இல்லாமல், நுண்துளை சிகிச்சை வாயிலாக முழுமையாக
குணப்படுத்த இயலும்.
-டாக்டர் வெங்கடேஷ்வெரிகோஸ் வெயின் மற்றும் கதிரியல் சிகிச்சை நிபுணர்87548 87568.

