PUBLISHED ON : ஆக 03, 2025

தாய்ப்பால் ஊட்டும் போது மூச்சு திணறி சில குழந்தைகள் உயிரிழக்கும் செய்திகள் வருவது அதிர்ச்சியளிப்பதாக என்னிடம் பலரும் சொல்கின்றனர். எந்த சூழ்நிலையில் இது ஏற்பட்டது என்பதை பார்க்க வேண்டும்.
தாய்ப்பால் தரும் போது, குழந்தைக்கும், தாய்க்கும் இயல்பாக ஏற்படும் பிணைப்பால் மன அழுத்தம் குறைந்து, இருவருக்குமே ஆழ்ந்த துாக்கம் வரும். அதனால், சில நேரங்களில் படுத்தபடியே தாய்ப்பால் தரும்போது, மார்பகம் அழுத்தி குழந்தைக்கு மூச்சு திணறலாம். அளவுக்கு அதிகமாக பால் சுரந்து, குழந்தையால் விழுங்க முடியாமல் புரை ஏறலாம்.
பொதுவாக குழந்தை பால் குடித்து முடித்த பின், முதுகில் தட்டும் பழக்கம் இருக்கிறது. அப்படி செய்யாமல், குழந்தை சிறிதளவு பால் குடித்ததும், மார்பில் போட்டு முதுகில் தட்ட வேண்டும். அதன்பின் மீண்டும் பால் தர வேண்டும். இப்படி சிறிது பால் குடித்ததும் முதுகில் தட்டிக் கொடுப்பது, மீண்டும் பால் தருவது என்று மாறி மாறி செய்வது முக்கியம்.
மூன்று மாதங்கள் வரை உட்கார்ந்து கொடுப்பது தான் குழந்தைக்கு பாதுகாப்பு. குறை பிரசவ குழந்தையாக இருந்தால், டாக்டர் சொல்லும் ஆலோசனைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகள், உணவுக் குழாய் மெல்லியதாக இருக்கும் குழந்தைகள், நாக்கு அன்னம் பிளவுபட்ட குழந்தைகளுக்கு, அதற்கேற்ற நிலையில் வைத்து தாய்ப்பால் தர டாக்டர்கள் ஆலோசனை தருவர்.
தாய்ப்பால் தருவது தானே, என் பாட்டிக்கு தெரியும்; அத்தை, அம்மாவுக்கு தெரியும் என்று இருக்காமல், மகப்பேறு டாக்டரிடம் ஆலோசனை பெற்று, சரியான நிலையில் தான் தருகிறோம் என்பதை உறுதி செய்த பின், 'டிஸ்சார்ஜ்' ஆவது இன்றைய சூழலில் பாதுகாப்பானது.
ஒரு நாளில்....
ஐம்பது நாட்களுக்குள் இருக்கும் குழந்தைக்கு நேரம் பார்த்து தாய்ப்பால் தர முடியாது. தொடர்ந்து இரண்டு மணி நேரம் துாங்கும் குழந்தைக்கு பால் தராமல் விட்டுவிட்டால், குழந்தை சோர்வாகி விடும்; ரத்த சர்க்கரை அளவு குறைந்து விடும்; நீர்ச்சத்து குறையும். எனவே, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுப்பி, தாய்ப்பால் தரச் சொல்லுவோம்.
50 நாளில்...
வளர்ச்சி, உடல் எடைக்கு ஏற்ப தாய்ப்பால் தரும் நேரம், தேவை மாறுபடும். இரண்டரை, மூன்று கிலோ சராசரி உடல் எடையுடன் பிறந்த குழந்தை, 50 நாளில் நான்கரை கிலோ எடை அதிகரித்தால், அதன்பின், பசிக்கு அழுதால் மட்டும் பால் தரலாம். காரணம், உடல் எடை சீராக அதிகரித்து, நான்கு மணி நேரம் தொடர்ந்து துாங்கும் குழந்தையை எழுப்பினால், அதன் துாக்கம் பாதிக்கும்.
மனதிற்கா, உடம்பிற்கா...
குழந்தைக்கு 10 - 20 நிமிடங்கள் தான் தாய்ப்பால் தர வேண்டும் என்பதில்லை; 30 - 40 நிமிடங்கள் கூட தரலாம். அவ்வப்போது முதுகில் தட்டிக் கொடுத்து தாய்ப்பால் குடிக்கச் செய்தால் குழந்தை நன்றாக குடிக்கும்.
முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பசிக்கு குழந்தை பால் குடிக்கும். அதன்பின் குடிப்பதெல்லாம் அதனுடைய வாயில் ஏற்படும் இதமான உணர்விற்காக. இந்த உணர்வு, குழந்தையின் மனதிற்கு மிகவும் விருப்பம். அதனால் தான் எவ்வளவு தாய்ப்பால் குடித்தாலும் வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு என்று எந்த பிரச்னையும் இல்லாமல் செரிமானமாகி விடுகிறது.
இதமான இந்த உணர்வு குழந்தைக்கு பயம், பதற்றம் இல்லாமல் பாதுகாப்பு உணர்வை தருகிறது.வயிறு சில நிமிடங்களில் நிரம்பி விடும். மனது நிரம்புவதற்கு அதிக நேரமாகும்.
டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன், மகப்பேறு மற்றும் தாய்ப்பாலுாட்டுதல் மருத்துவ ஆலோசகர், எம்.ஜி.எம்., மருத்துவமனை, சென்னை 044 - 4289 2222, 99625 99933info@mgmhcmalar.in

