sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரைக் கேளுங்கள்

/

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்


PUBLISHED ON : அக் 19, 2025

Google News

PUBLISHED ON : அக் 19, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.கனகலட்சுமி, மதுரை: குழந்தைகள் பிறந்தவுடன் காது சரியாக கேட்கிறதா என கண்டுபிடிப்பது எப்படி?

பிறந்த குழந்தைகளுக்கு செவித்திறன் பரிசோதனை செய்வது பிறவியிலேயே ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது. இது ஆயிரம் குழந்தைகளில் 1 முதல் 3 பேரைப் பாதிக்கிறது. ஆரம்பநிலையில் கண்டறியாவிட்டால் செவித்திறன் குறைபாட்டிலும் பேசுவதிலும் தாமதம் ஏற்படலாம். இதனைக் கண்டறிய இரண்டு முக்கிய பரிசோதனை முறைகள் உள்ளன.

ஒலியியல் உமிழ்வு (ஓ.ஏ.இ.,) பரிசோதனை மூலம் குழந்தையின் காதில் ஒரு சிறிய கருவியை வைத்து ஒலிகளை அனுப்பி உள்காதில் (சுருள் குழாய்) இருந்து வரும் எதிரொலிகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் எழுப்பப்படும் எதிரொலியின் மூலம் செவித்திறனின் செயல்பாட்டை கண்டறிய முடியும்.

அடுத்ததாக தானியங்கி செவித்திறன் மூளைத்தண்டு செயலாக்கம் (ஏ.ஏ.பி.ஆர்.,) பரிசோதனை. இதில் குழந்தையின் தலையில் மின்முனைகள் பொருத்தப்பட்டு காதுக்குள் 'கிளிக்' என ஒலி அனுப்பப்படும். இதன் மூலம் மூளையின் செயல்பாட்டைப் பதிவு செய்து செவி நரம்பு, மூளைத்தண்டு பாதைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா எனக் கண்டறிய முடியும்.

குழந்தை பிறந்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்வது சிறந்தது. இதில் குறைபாடு கண்டறியப்பட்டால் 3 மாதங்களுக்குள் மீண்டும் ஒருமுறை கட்டாயம் பரிசோதனை செய்யவேண்டும்.

-டாக்டர் பி. மீனா பிரியதர்ஷினி, காது, மூக்கு, தொண்டை மருத்துவ சிறப்பு நிபுணர், மதுரை

பாண்டி, வடமதுரை: சமீபத்தில் எனது உடலை பரிசோதனை செய்தபோது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளதாக முடிவு வந்தது. எனது உடல் பருமனாக இல்லாதபோதும் கொலஸ்ட்ரால் அதிகமானது எப்படி. இதை குறைக்க வழி கூறுங்கள்?

ரத்த கொலஸ்ட்ரால், உணவு கொலஸ்ட்ரால் (Dietary cholesterol) இரண்டும் வெவ்வேறு வகை சொற்கள், தாக்கங்கள் கொண்டவை. உடல் பருமனுக்கு எல்லா நேரமும் கொலஸ்ட்ரால் நேரடி காரணம் இல்லை. ரத்த கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் (முக்கியமாக கல்லீரல்) உருவாகும் கொலஸ்ட்ரால். இது செல்களை நோக்கி ரத்தம் வாயிலாக செல்கிறது. உணவின் மூலம் பெறப்படும் கொலஸ்ட்ரால் என்பது முட்டை மஞ்சள் கரு, இறைச்சி, பாலாடைக்கட்டி, எண்ணெய் பண்டங்கள் போன்ற உணவுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால் பலருக்கு உணவில் கிடைக்கும் கொலஸ்ட்ராலை விட உடலும் அதிகமாக தயார் செய்யும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தமனிகளில் கொழுப்பு படிமங்கள் உருவாகி மாரடைப்பு, பக்கவாதத்திற்கு அடிகோலும்.

உடல் பருமன் சரியாக இருந்தாலும், இந்தியருக்கு உடல் கொழுப்பின் சதவிகிதம் அதிகமாக இருக்கும். எனவே தான் உங்களுக்கு இவ்வாறு உள்ளது. ரத்த கொழுப்பு அளவை குறைக்க உணவில் உப்பு, அதிகமான எண்ணெய், மாவுச்சத்து, துரித உணவுகளை குறைக்க வேண்டும்.

சீரான உடற்பயிற்சி, புகை, மதுப் பழக்கங்கள் வேண்டாம். முறையான மாத்திரைகள் எடுத்து கொண்டால் மாரடைப்பு, பக்கவாதம் வராமல் பாதுகாக்க முடியும்.

-- டாக்டர் ஜே.சி.சேகர், மூத்த பொது மருத்துவர், வடமதுரை

எஸ்.புவனா, சுருளிப்பட்டி: எனது தந்தை புற்று நோயால் பாதித்து வலியால் அவதிப்பட்டு வருகிறார். வலியில்லாமல் இருக்க என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?

புற்றுநோய் பல வகை உள்ளது. மரபணு முறையிலும் ஒரு சில புற்றுநோய்கள் தோன்றுகிறது. ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரியாது. முற்றிய நிலையில் தெரியும். நமது கெட்ட பழக்க வழக்கங்களால் பெரும்பாலான புற்று நோய்கள் ஏற்படுகிறது. புற்று நோயாளிகளுக்கு வரும் வலி, மரண வலியாக இருக்கும். எனவே, அரசு நோயாளிகளுக்கு வலி இல்லாமல் செய்ய, மார்பின் மாத்திரைகளை இலவசமாக வழங்குகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மார்பின் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த வகை மாத்திரைகளை பெற நோயாளிகள் தங்களின் 'பயாப்சி மற்றும் ஸ்கேன்' விபரங்களை கொடுத்தால் போதும். வலிக்கு ஏற்ப மாத்திரை வழங்கப்படும். புற்றுநோயாளிகள் வலி இல்லாமல் இருக்க இது உதவுகிறது.

- டாக்டர் டி. பாரதி, புற்றுநோய் சிறப்பு மருத்துவர், கம்பம்

சந்தியா, ராமநாதபுரம்: கடந்த ஓராண்டாக ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுகிறேன். இதனால் எந்த வேலையிலும் என்னால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. இதற்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உள்ளதா?

நடைமுறை வாழ்வில் மன அழுத்தம், சைனஸ் போன்ற காரணங்களால் ஒற்றைத் தலைவலி அதிகம் ஏற்படுகிறது. வெளிப்புற காரணியாக காலநிலை மாற்றத்தால் சிலருக்கு இந்த பிரச்னை வரும். இதற்கு சித்த மருத்துவத்தில் வலி நிவாரணி மாத்திரையும், 'சாந்த சந்திரோதயம்' எனும் மாத்திரையும் பரிந்துரைக்கப்படுகிறது. அனு தைலம் எனும் டானிக் மூக்கு வழியாக எடுக்க வேண்டும்.

பெரும்பாலும் நொச்சி தைலம், அரக்கு தைலம் ஆகியவற்றை உடல் முழுவதும் தேய்த்து வாரம் ஒரு முறை வெந்நீரில் குளித்து வந்தால் நல்ல பலன் கொடுக்கும். இதனை குறைந்தது 6 மாதம் தொடர்ந்து செய்ய வேண்டும். சிலர் ஓரிரு நாட்கள் மருந்து உட்கொண்டு குணமடைந்தவுடன் விட்டு விடுகின்றனர். இதனால் மன அழுத்தம், சைனஸ் போன்ற பிரச்னையின் போதெல்லாம் ஒற்றைத் தலைவலி வருவதுண்டு.

- டாக்டர் சுகந்தி, சித்த மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராமசாமிபட்டி



க.பாலமுருகன்,சிவகங்கை: எலிக்காய்ச்சல் எதனால் பரவுகிறது. அறிகுறி என்ன?


எலிகள் நீரில் சிறுநீர் கழிப்பதன் மூலம் பரவுகிறது. எலிகளின் கடி அல்லது கீறல் மூலமாகவும் பரவலாம். எலிகளின் சிறுநீர் கலந்த தண்ணீரில் நடக்கும்போது கால்கள் வழியாக பாக்டீரியா உடலுக்குள் நுழையும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், வயிற்றுவலி, வயிறு வீக்கம், பாதிக்கப்பட்டவரின் சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவை அறிகுறிகள்.

எனவே சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க வேண்டும். குடிநீர் குழாய்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புறத்தை எலிகளின் தொல்லை இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவு பொருட்களை சரியாக மூடி வைக்க வேண்டும். காய்ச்சல், தசை வலி, தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டரை அணுகவேண்டும். எலிக்காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவாது.

- டாக்டர் சோனாபிரியா, பொதுநல மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

ஜெயராஜ், அருப்புக்கோட்டை: முதுகுப்பகுதி, கழுத்துப் பகுதியில் வலி இருக்கிறது. எதனால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன?

பொதுவாக முதுகுப்பகுதி, கழுத்து பகுதியில் வலி சில காரணங்களால் ஏற்படுகிறது. முதலில் வாயு கோளாறாக இருக்கலாம். நீண்ட துாரம் டூவீலரில் பயணம் செய்யும் போது முதுகு தண்டுவட பகுதி தேய்மானம் ஏற்பட்டு வலி ஏற்படலாம். தசைப்பிடிப்பாக இருக்கலாம். கட்டி உருவாகி வலி ஏற்படுத்தலாம். என்ன பிரச்னை இருக்கிறது என்பதை டாக்டரை அணுகி தெரிந்து கொள்வது நல்லது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

- டாக்டர் காராளமூர்த்தி, காரியாபட்டி






      Dinamalar
      Follow us