உங்கள் குழந்தை பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் கண்டறிவது எப்படி?
உங்கள் குழந்தை பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் கண்டறிவது எப்படி?
PUBLISHED ON : ஆக 31, 2025

பெற்றோர், சற்று கவனமாக இருந்தால் தங்களது குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் நடக்கிறதா என்பதை அறிந்து, பாதுகாக்க முடியும்.
* பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் குழந்தைகளின் செயல்பாடுகளில், ஏதேனும் ஒரு மாற்றம் இருக்கும். வழக்கத்துக்கு மாறாக அமைதியாக மாறுவது, தனிமையாக இருப்பது மட்டுமல்ல; அதிக சேட்டை செய்தாலும், கோபம், கத்துவது என்று இருந்தாலும் உடனடியாக கவனிக்க வேண்டும்.
* குளிப்பாட்டும்போது 'குட் டச்', 'பேட் டச்' குறித்து இயல்பாக பேசி, சிறு வயது முதலே புரிய வைக்க வேண்டும். யாராவது 'பேட் டச்' செய்தால் அது உன் தவறு இல்லை; அவர்கள் தவறானவர்கள் என்று தெளிவுபடுத்த வேண்டும்.
* குழந்தைகள் ஏதேனும் ஒரு இடத்துக்கு, உறவினர்கள் வீட்டுக்கு, பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்தாலோ, தனியாக செல்ல மாட்டேன் என்று மீண்டும் மீண்டும் கூறினாலோ, கட்டாயப்படுத்தாமல் என்ன என்று அமர்ந்து பேசுங்கள்.
*குழந்தைகளுக்கு அடிக்கடி சாக்லேட் வாங்கித் தருபவர்கள், வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும், கண்காணிக்க வேண்டியது அவசியம்.
* தினமும் குழந்தைகளுடன் அமர்ந்து இன்று யாரை எல்லாம் பார்த்தீர்கள், என்ன விளையாட்டு விளையாடினாய் என்று இயல்பாக கேட்க வேண்டும்.
* கண்டிப்பான தோரணையில் இருந்தால், மனம் விட்டு பேச மாட்டார்கள். யாரேனும் தவறாக நடந்தால், தைரியமாக சொல்ல வேண்டும் என்பதை, வெளிப்படையாக கூறுங்கள்.
* என்ன நடந்தாலும் நான் இருக்கிறேன் என்கிற தைரியத்தையும், சூழலையும் குழந்தைகளுக்கு தந்தால், பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
- டாக்டர் சண்முகையா மனநல மருத்துவர்
கோவை அரசு மருத்துவமனை
பாலியல் குற்றவாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்களே!
திடீரென கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளை காட்டிலும், தெரிந்தவர்கள் வாயிலாக, வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளே அதிகம். பல வழக்குகளில், பாலியல் சீண்டல்களாக முதலில் துவங்கி, எதிர் தரப்பில் எவ்வித எதிர்ப்பும், அச்சுறுத்தல் வராத சூழலில், வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர். குழந்தைகளுடன் பெற்றோர் நல்ல சுமூகமான புரிதலுடன் செயல்பட்டால், இதுபோன்ற காமுகர்களிடம் இருந்து ஆரம்பத்திலேயே காப்பாற்ற முடியும்.
- பிரீத்தி ராகவேந்திரன் வக்கீல்