PUBLISHED ON : நவ 08, 2026

ஒரு நோயாளிக்கு, புரோஸ்டேட் கேன்சர் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானதும், 'அவ்வளவு தான் வாழ்க்கையே முடிந்து விட்டது' என்ற உச்சகட்ட பயத்தில் இருப்பர். இது போன்ற தருணத்தில், நுாற்றுக்கணக்கான ஆண்கள், அவர்களின் குடும்பத்தினருடனும் நான் இருந்திருக்கிறேன். தாமதிக்கமல் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்வதைக் காட்டிலும், இந்நோயைப் பற்றி, நோயாளி, குறிப்பாக அவரின் குடும்பத் தினருக்கு புரிய வைத்து விட்டால், உடனடியாக சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை புரிந்து கொள்கின்றனர்; பக்க விளைவுகளை எதிர்கொள்ள நோயாளியும் தயாராகி விடுகிறார்.
இது என்னுடைய 20 வருடத்திற்கும் மேலான மருத்துவ பயிற்சியில் நான் தெரிந்து கொண்டது.
புரோஸ்டேட் கேன்சர் பொதுவாக, மெதுவாகப் பரவக்கூடியது; ஆனால் எளிதில் குணப்படுத்த முடியும். பெரும்பாலும், 60 வயதிற்கு மேல் உள்ள ஆண்களை இந்நோய் அதிகம் பாதிக்கிறது. என்றாலும், மரபணு, உடல் பருமன் ஆகியவை முக்கிய ஆபத்து காரணிகளாக இருப்பதால், இளம் வயது ஆண்களையும் பாதிக்கலாம்.
சில வகையான புரதங்களையும், என்சைம்களையும் புரோஸ்டேட் சுரப்பி உற்பத்தி செய்கிறது. இதில், குறைந்த அளவு புரதம் மட்டும் ரத்தத்தில் கலக்கும். வயதிற்கு ஏற்ப ரத்தத்தில் கலக்கும் புரதத்தின் அளவு மாறுபடும். 40–-49 வயது ஆணுக்கு, 2.5 என்ஜி/மி.லி., என்ற அளவில இருக்க வேண்டும். 50–-59 வயதில், 3.5 என்ஜி/மி.லி., இருக்க வேண்டும்.
இந்த அளவை விட அதிகமாக புரோஸ்டேட் சுரப்பி சுரக்கும் புரதம் ரத்தத்தில் இருந்தால், புரோஸ்டேட் கேன்சர், சுரப்பி வீக்கம், தொற்று போன்ற பாதிப்புகள் இருக்கலாம். இதைக் கண்டறிய பிஎஸ்ஏ என்ற பரிசோதனை உள்ளது.
ஆண்டிற்கு ஒரு முறை உடல் பரிசோதனையுடன் சேர்த்து, பி.எஸ்.ஏ., பரிசோதனை செய்வது, ஆரம்பத்திலேயே கேன்சரை கண்டறிய உதவும். ‘இமேஜிங்’ மற்றும் ‘திசு’ பரிசோதனை மூலமும் கேன்சரை உறுதி செய்யலாம். புரோஸ்டேட் சுரப்பியில் மட்டும் கேன்சர் உள்ளதா, வெளியில் பரவியுள்ளதா என்பதை பொறுத்து, சிகிச்சை மாறுபடும்.
புரோஸ்டேட் கேன்சர் உறுதியானவுடன் உடனடி சிகிச்சை தேவைப்படுவதில்லை. மெதுவாக பரவும் இவ்வகை கேன்சருக்கு, வழக்கமான பரிசோதனைகள் செய்த பின், நோயாளியை தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்து, தேவைப்பட்டால், சிகிச்சை செய்யலாம்.
புரோஸ்டேட் சுரப்பி முழுவதும் கேன்சர் பரவி இருந்தால், சுரப்பியை நீக்குவதற்கு ‘ரேடிகல் புரோஸ்டேடெக்டமி’ எனப்படும் அறுவை சிகிச்சையை, ரோபோடிக் உதவியுடன் செய்யப்படுகிறது.
என்னுடைய அனுபவத்தில், ரோபோடிக் அறுவை சிகிச்சையில், புரோஸ்டேட் சுரப்பியைச் சுற்றியுள்ள மென்மையான நரம்புகள், திசுக்களையும் துல்லியமாக காண முடியும் என்பதால், சிறிய கீறல்கள், குறைந்த ரத்த இழப்பு, குறைந்த வலி மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு உடனடியாக திரும்பும் விதமாக அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது.
சிலருக்கு, அறுவை சிகிச்சை இல்லாமல், கதிரியக்க சிகிச்சை செய்யும் போது, அருகில் உள்ள சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலைப் பாதிக்காமல், கேன்சர் கட்டியைத் துல்லியமாக அழிக்க முடியும். நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு, ஹார்மோன் சிகிச்சையும் பலன் தரும்.
புரோஸ்டேட் கேன்சர் உறுதியானதும், அனைவரின் மனதிலும் வரும் கேள்வி, சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிக்கப்படுமா, தாம்பத்திய வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்குமா? என்பது தான். தற்போதுள்ள நவீன சிகிச்சை முறைகளில், இந்த இரண்டிற்கும் எவ்வித பாதிப்பும் வராமல், சிகிச்சை அளிக்க முடியும்.
டாக்டர் தீபக் ராகவன், சிறுநீரகவியல் மருத்துவ ஆலோசகர் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர், அப்பல்லோ மருத்துவமனை,
சென்னை.
80629 70299
drdeepakr@apollohospitals.com
