PUBLISHED ON : செப் 08, 2024

தோலின் அடர்த்தி அதிகரிப்பது பிக்மென்டேஷன். அடர்த்தி குறைந்து பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக, 'டி பிக்மென்டேஷன்' கிரீம்களை பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. தோலின் நிறத்தை நிர்ணயம் செய்வது, மேலடுக்கில் உள்ள 'மெலனின்' என்ற நிறமி. கிரீம்களில் உள்ள வேதிப்பொருட்கள், மெலனின் மேல் செயல்பட்டு அதன் அடர்த்தியை குறைக்கும்.
பாதரசம் ஈயம் போன்ற உலோகங்கள் இந்த கிரீம்களில் அடிப்படை மூலப்பொருட்களாக உள்ளன. இவற்றை நீண்ட காலம் பயன்படுத்தும்போது, அதிக அளவில் நச்சுகள் உடலில் கலந்து, பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக சிறுநீரக செயலிழப்பு, நரம்பு மண்டலம் தொடர்பான கோளாறுகள் வரலாம்.
பாதரசத்தின் பாதிப்பால் 'அக்ரோடைமியா' எனப்படும் கால்கள், கைகளில் தோல் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவது, போட்டோபோபியா என்கிற வெளிச்சத்தை பார்க்க சிரமப்படுவது, பாலிநியூரைடிஸ் என்கிற நரம்பு பாதிப்பு போன்ற பிரச்னைகளும் வரலாம்.
ஹைட்ரோகுயினோன் என்கிற நச்சுத்தன்மை நிறைந்த வேதிப்பொருளை அதிக அளவில் பயன்படுத்தும்போது, தோல் சிவத்தல், எரிச்சல், எரியும் உணர்வு, தோல் அடர்த்தியாவது, தோலின் நெகிழும் தன்மை குறைவது உட்பட பல பிரச்னைகள் ஏற்படலாம்.
சோப்பு, எண்ணெய், லோஷன் பயன்படுத்துவதற்கு முன், தோல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.
அதில் எந்த அளவுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் உள்ளன என்பதை தெரிந்து, அவரவர் தோலுக்கு எந்த அளவில், எத்தனை நாட்கள் உபயோகிக்க வேண்டும் என்று டாக்டர் பரிந்துரைக்கிறாரோ, அந்த அளவு மட்டும் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
'பிக்மென்டேஷன்' இருந்தால், தோலை வெள்ளையாக்குவது 'ஸ்கின் ஒயிட்டனிங், லைட்டனிங்' செய்வது தீர்வல்ல. தோலின் தன்மைக்கு ஏற்ற 'மாய்ஸரைசர்' பயன்படுத்த வேண்டும்.
டாக்டர் ஜெயலட்சுமி தேவி, தோல் மருத்துவ ஆலோசகர் மற்றும் லேசர் அறுவை சிகிச்சை நிபுணர், அரசு ராஜாஜி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மதுரை94877 81175dr.jayacosmoderm@gmail.com

