
'உடல் ஆரோக்கியமாக இருக்கும்போதே மூச்சு நின்றுவிட வேண்டும்; கனிந்த வெள்ளரிப்பழத்தில் இருந்து காம்பு தனியாக கழன்று வருவது மாதிரி இவ்வுலகம் விட்டு சிரமமின்றி பிரிந்துவிட வேண்டும்' என்பது மிச்சமிருக்கும் வாழ்வின் மீது புரிதலும், வாழ்ந்த வாழ்வினால் பக்குவமும் பெற்றோரின் பெரும் விருப்பம்!
அப்படியொரு பக்குவப்பட்ட புரிதலுடன் இன்றோடு விடைபெறுகிறாள், 400 வாரங்களுக்கும் மேலாய் சின்னஞ்சிறு கூட்டில் அர்த்தமுள்ள வாழ்வு கண்ட உங்கள் கண்ணம்மா. இன்று நிகழ்வது முடிவல்ல... நிறைவு.
'நன்றி சொல்லும் உயிர்களால்தான் இவ்வுலகம் நிறைவு பெற்றிருக்கிறது' எனில், 'கண்ணம்மா'விற்கான இவர்களின் நன்றியோடு, 'கண்ணம்மா'வின் பெரும் நன்றி எல்லாமுமாகிய உங்களுக்கு!
நன்றி!
2017 பெண்மை என் பெருமை
ஜூன் 4 -திருநங்கை டாக்டர் செல்வி சந்தோஷம், சென்னை.
'பெண்களுக்கான பகுதியில் ஒரு திருநங்கைக்கு இடம் கொடுத்தது ரொம்ப பெரிய விஷயம். ஒரு திருநங்கையான நான் மருத்துவர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறதை பெரிய விஷயமா பேசாம, என் வாழ்க்கையையும் எனக்கிருக்கிற பார்வையையும் 'கண்ணம்மா' பதிவு பண்ணின விதம் அட்டகாசம். இதைப் படிச்ச சிலர், என்னை அழைச்சு அவங்க சார்ந்திருக்கிற அமைப்பு சார்பா பாராட்டு விழாவே நடத்தினாங்க!'
2018 ஒரு ஊர்ல ஒரு பாட்டி
பிப்., 18 - மூத்தோர் தடகள வீராங்கனை கண்ணம்மாள், திருப்பூர்.
'கண்ணம்மா' பகுதியில என்னைப் பற்றி படிச்சப்போ 1,000 மெடல் வாங்குன சந்தோஷம் எனக்கு! என் மாணவியான திருப்பூர் முன்னாள் மேயர், கட்டுரையைப் படிச்சிட்டு என்னைத் தேடி வந்தாங்க; ரொம்பவே சந்தோஷமா இருந்தது; மனநிறைவோட ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி வைச்சேன்! முதியவர்களை ஒதுக்கி வைச்சுப் பார்க்குற இன்றைய சமூகத்துல எங்களுக்கு கவுரவமான இடம் தந்த 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி!'
2019 வானமே எல்லை
ஜன., 13 - சுயதொழில் முனைவோரான கலைச்செல்வி, சென்னை.
'என்னைப் பற்றியும் என்னோட சுயதொழில் பற்றியுமான கட்டுரையைப் படிச்சிட்டு தமிழகம் மட்டுமில்லாம கேரளாவுல இருந்தெல்லாம் கூட ஏகப்பட்ட அழைப்புகள். நேர்ல வந்த 200க்கும் அதிகமானவங்க லிக்விட் டிடர்ஜென்ட், ப்ளோர் கிளீனர் தயாரிப்பு பயிற்சி எடுத்துக்கிட்டாங்க. சின்ன குளத்துல நீந்திட்டிருந்த எனக்கு இப்போ கடல்ல நீந்துற உணர்வு. சுயதொழில் செய்ற பெண்களை கைதுாக்கி விடுற 'தினமலர் - கண்ணம்மா'வோட சேவையை மனதார பாராட்டுறேன்!'
2020 அன்புள்ள சிஸ்டர்
மார்ச் 15 - செவிலி சு.நுார்ஜஹான், தஞ்சாவூர்.
'கண்ணம்மாவை வாசிச்சதும் உங்களை நேர்ல ஆசிர்வாதம் பண்ணணும்னு தோணுச்சு; அதான் வந்தேன்'னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்ட சடகோபன் சார், கிளம்புற நேரத்துல... 'என்னம்மா இது... இந்த பழைய ஸ்கூட்டரை வைச்சுக்கிட்டு அவசர நேரத்துல எப்படி பயணம் பண்ண முடியும்'னு கேட்டு, 88 ஆயிரம் ரூபாய்க்கு புது ஸ்கூட்டர் வாங்கித் தந்தார். மனசாட்சியோட சொல்றேன்... மனிதமுள்ள மனிதர்கள் வாசிக்கிற நாளிதழ்... தினமலர்!'
2021 ரவுத்திர வீணை
மே 16 - மாற்றுத்திறனாளி பேத்தியின் சிகிச்சைக்காக பேசிய பொ.மாரியம்மாள், சேலம்.
'என் கண்ணீர் கதையைப் படிச்சதும் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில முழு சிகிச்சையும் எடுத்துக்க பரிந்துரை பண்ணி தலைமைச் செயலர் கடிதம் அனுப்பினார். 'தினமலர்' வாசகர்கள் மூலமா 1.25 லட்சம் ரூபாய் பண உதவி கிடைச்சது. 'தினமலர்' நாளிதழுக்கும், தமிழக முதல்வருக்கும் கடமைப்பட்டிருக்கேன்!'
2022 ரவுத்திர வீணை
மே 1 - மின்வாரிய அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட தன் மகனுக்காக நீதி கேட்டிருந்த வெ.ரேவதி, விழுப்புரம்.
'என் செய்தி வெளியான மறுநாள், 'திரு.பிரதாப்பிற்கு ஏப்ரல் 2022 முதல் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க அனுமதி வழங்கப்படுகிறது'ன்னு விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் கையொப்பமிட்ட ஆணை ஆட்சியர் கையால கிடைச்சது. மூணு வருஷ போராட்டம். 'கண்ணம்மா' மூலமா 24 மணி நேரத்துல என் குறை தீர்ந்திருச்சு. மக்களோட குரலா ஒலிக்கிற 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்நாள் கடன்பட்டிருக்கேன்!'
2023 ரவுத்திர வீணை
மார்ச் 12 - தன் குழந்தைக்கான உரிமைத் தொகைக்கு குரல் கொடுத்த த.பாண்டீஸ்வரி, விருதுநகர்.
'என் மனக்குமுறலை 'கண்ணம்மா' சொன்னதுமே, 'வங்கி கணக்கு புத்தகத்தோட நாளைக்கு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துடுங்க'ன்னு அழைப்பு. ஏழு ஆண்டுகளா அலைஞ்சும் கிடைக்காத 'முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட உரிமைத்தொகை'யான ரூ.30 ஆயிரம் வெறும் 24 மணி நேரத்துல வரவாயிருச்சு. தமிழக முதல்வருக்கும், 'தினமலர்' நாளிதழுக்கும் பெரும் நன்றி!'
2024 பெண் பார்வை
ஏப்., 14 - குணம் மின்னும் அமுதாவுடன் கணவர் நடராஜன், ராணிப்பேட்டை.
'விதை சேகரிக்கிறேன்'னு கோணிப்பை எடுத்துட்டுப் போற நான் பலரோட பார்வையில பிழைக்கத் தெரியாதவனா இருந்தேன். ஆனா, என்னைப்பற்றி என் மனைவி 'கண்ணம்மா' பகுதியில வெளிப்படுத்தின பார்வை அவ்வளவு அழகு. 'சம்பாத்தியத்தை என் கணவர் 'டாஸ்மாக்'ல அழிக்கலை'ன்னு என் மனைவி கம்பீரமா சொன்னதை ஊர்ல எல்லாரும் பாராட்டுறாங்க. எனக்கு ரொம்பவே பெருமையா இருக்கு!'