PUBLISHED ON : நவ 17, 2024

நவம்பர் 12: 'உலகத் தமிழர்களுக்கு சிறு இடர்பாடு என்றாலும் தமிழக அரசு காப்பாற்றும்' என்று நம் சபாநாயகர் அப்பாவு ஆஸ்திரேலியாவில் சொன்னதில் சிலிர்த்தேன்; 'தமிழகத்தில் 2024ல் நான்கு லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு' செய்தியில் சிரித்தேன்!
நவம்பர் 13: 'பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கும்' என்ற அறிவிப்பு, 'டாஸ்மாக் கொல்லும் குடும்பத்தலைவர்களது குழந்தைகளின் கல்விச் செலவையும் அரசு ஏற்கும்' எனும் நம்பிக்கையை தருகிறது!
நவம்பர் 14: 'தி.மு.க., நிர்வாகிகள் வார இறுதியில் ஒரு முழு நாளை கட்சிப்பணிக்காக ஒதுக்க வேண்டும்' என முதல்வர் சொன்னதும், 'இப்படி செய்தால் நான் துணை முதல்வராக வர இயலுமா' என்று யாராவது கேட்கக்கூடும் என சிறுபிள்ளைத்தனமாய் எதிர்பார்த்தேன்!
நவம்பர் 15: 'குறைந்த அளவு மருத்துவர்களைக் கொண்டு 24 மணி நேர சேவைக்கு அழுத்தம் தரப்படுவதால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல்' எனும் அரசு மருத்துவர்களின் குமுறலை நம்பிய நான், 'மருத்துவ துறை 41 மாத காலமாக சீரழிகிறது' எனும் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டை நம்பவில்லை.
நவம்பர் 16: 'நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்...' குறளை தீவிரமாய் சிந்தித்துக் கொண்டிருந்த போது, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம் பற்றி முதல்வரின் குரல்; பூரித்தது மனது.