PUBLISHED ON : அக் 20, 2024

அக்டோபர் 14: 'அரசு ஊழியர்களே அரசு என முதல்வர் சொல்கையில், அனைத்து துறை ஊழியர்களும், அதிகாரிகளும் சாக்கடை கலந்த மழைநீரில் களமிறங்கி மக்களுக்கு உதவுவதுதானே முறை' என சிந்திக்காதவர் 'தன்னார்வலர்' எனப்படுகிறார்!
அக்டோபர் 15: 'மூடப்படாத கழிவுநீர் பாதைகளை கண்டால் சொல்லுங்கள்' என நம் துணை முதல்வரை கேட்க வைத்து, தன் சீரிய நிர்வாகத்திறனை மக்களுக்கு உணர்த்துவதுதான் உலகிற்கே வழிகாட்டும் 'திராவிட மாடல்' அரசின் தனித்துவம்!
அக்டோபர் 16: 'தேங்கியிருந்த மழைநீரில் தவறி விழுந்த இருசக்கர வாகன ஓட்டி' எனும் செய்தியை, 'தரமற்ற சாலையின் பள்ளங்களை மூடியபடி தேங்கியிருந்த மழைநீரில்...' என்று திருத்தி வாசித்தேன்; முதலாவதன் அறம் இரண்டாவதில் இல்லை!
அக்டோபர் 17: 'துணை முதல்வர் உதயநிதியின் துடிப்பான களப்பணிகளை பார்த்து மிரண்ட மேகம், சென்னையை துவைக்காமல் தலைதெறிக்க ஓடியது' என்றவன், 'தமிழகத்தில் மாணவர் சேர்க்கையானது 62 சதவீதம்' எனும் அமைச்சர் மகேஷின் பெருமைக்கான சாட்சி!
அக்டோபர் 18: 'மழைநீர் வடிகால் பணிகளுக்காக செலவிடப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் வீண்' என்று நீ வருந்துகிறாய். அந்த மழைநீர் வடிகால் பாதைகளின் அருகில் மோட்டார் வைத்து மழைநீர் உறிஞ்சிய விஞ்ஞானத்தை நான் வியக்கிறேன்.