
நமது பிரதமர் மோடியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதத்தில், 600 சதுரஅடி பரப்பளவில், 344 கிலோ சிறுதானியங்களால் அவரது உருவத்தை 12 மணி நேரத்தில் வரைந்து உலக சாதனை செய்தவர், இந்த 13 வயது மாணவி.
யார் இவர்?
பெயர்: பிரஸ்லி ஷிக்கைனா/ 8ம் வகுப்புபெற்றோர்: பிரதாப் செல்வம் - சங்கீராணி தேவிபள்ளி: வேலம்மாள் போதி கேம்பஸ், கொளப்பாக்கம், சென்னை.அடையாளம்: உலக சாதனையாளர்
பிரதமரை பிரஸ்லி வரைய விரும்பிய காரணம்?
என்னோட ஓவியங்கள் மூலமா உலகளவுல பிரபலமாகணும்னு விரும்புற நான், உலகமே கொண்டாடுற ஒரு பிரதமரை வரையுறதுதானே சரியா இருக்கும்!
சின்னவயசுல பெரிய பாராட்டு; பாரமா இல்லையா?
ம்ஹும்! என்னோட 'ஸ்கூல் புராஜெக்ட்'களை அம்மா - அப்பா உதவி இல்லாம நானே செய்றதால, அது பிரமாண்டமா எல்லாம் இருக்காது; ஆசிரியர்கள் எதிர்பார்க்கிற நிறைவும் அதுல வராது. இந்த எட்டு ஆண்டுகள்ல இதுக்காக நான் பரிசே வாங்கினதில்லை. ஆனாலும், அடுத்தடுத்த புராஜெக்டுகளை ஆர்வமா பண்றேன். ஏன்னா, எனக்கு பாராட்டு வாங்குறதை விட என் திறமையை மெருகேத்திக்கணும்; அவ்வளவுதான்!
மனதிற்கு நெருக்கமான தோழி?
'தப்புன்னா தப்புதான்'னு முகத்துக்கு நேரா அழுத்தமா சொல்ற நதிரா!
எதிர்கால உலகத்துல பிரஸ்லி யார்?
'டாக்டர் ஆகணும்'னு சின்னவயசுல நினைச்சேன். ஓவியங்கள் வரையத் துவங்கின பிறகு, 'அனிமேட்டர் ஆகணும்'னு ஆசைப்பட்டேன். நாளைக்கு இதுவும் மாறலாம். ஆனா, 'பிரஸ்லி நல்ல குணமுள்ள பெண்'ங்கிற பெயரோட இருப்பேன்!
அடுத்த உலக சாதனை எப்போது?
தெரியலை; ஆனா, 1889ம் ஆண்டு வின்சென்ட் வான்கோ வரைஞ்ச ரொம்பவே சவாலான 'தி ஸ்டேரி நைட்' ஓவியத்தை வரையணும்னு இலக்கு வைச்சிருக்கேன். அதை வரைஞ்சு முடிக்க குறைஞ்சது ஒரு முழுநாள் தேவைப்படும்.
சமீபத்திய சாதனைக்கு உதவின 344 கிலோ தானியங்கள் என்னாச்சு?
ரொம்பவே பத்திரமா இருக்கு. இயற்கை நமக்கு கொடுத்திருக்கிற எதையும் வீணாக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதனால, 344கிலோவும் பறவைகளுக்கு உணவாயிட்டு இருக்கு.
எங்கள் பிரஸ்லி
'காலையில 8:30 மணிக்கு அவ வரைய ஆரம்பிச்ச ஓவியம், சாயங்காலம் 6:00 மணிக்கெல்லாம் முடிஞ்சிடும்'னு எதிர்பார்த்தோம். ஆனா, ஓவியம் நிறைவடைய இரவு 8:30 மணி ஆயிருச்சு. ஆனா, முழு மூச்சா பணியில இயங்கின அவளுக்கு துளிகூட சோர்வு இல்லை! பிரஸ்லி... எங்க பள்ளியோட பெருமை!'
- ஆர்.லாவண்யா, தலைமை ஆசிரியை.