
காதல் தோல்வியால நான் எடுத்த இரண் டாவது தற்கொலை முயற்சியும் தோல்வியில முடிஞ்சிருந்த நேரம்! அப்போ தான் எங்கம்மா அதுவரை என் கிட்டே மறைச்சு வைத்திருந்த ஒரு விஷயத்தை சொன்னாங்க.
'சுவாதி... நீ குழந்தையா இருக்கும்போதே உங்கப்பா இறந்துட்டாருன்னு நான் உன்கிட்டே சொன்னது பொய். நானும் அவரும் உறவுகளை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அன்பா இருந்தோம். ஆனா, பிறந்தது பெண் குழந்தைன்னு தெரிஞ்சதும் உங்கப்பா காணாம போயிட்டார்!'
'கைக்குழந்தையான உன்னை ஒரு ஆசிரமத்துல சேர்த்துட்டு நான் தண்டவாளத்துல ஏறி நின்னுட்டேன். எதிர்ல அசுர வேகத்துல ரயில். அந்த சத்தத்துக்கு மத்தியிலேயும் உன் அழுகை சத்தம் என் காதுல கேட்டுச்சு! நானும் உங்க அப்பாவும் செஞ்ச தப்புக்கு நீ ஏன் தண்டனை அனுபவிக்கணும்னு மனசுக்குள்ளே ஒரு கேள்வி!
'அந்த விநாடியே என் முடிவை மாத்திக்கிட்டேன். தனி ஒருத்தியா நின்னு உன்னை படிக்க வைச்சு ஆளாக்கினேன்; என் வாழ்க்கைக்கு புது அர்த்தம் கிடைச்சது. அன்னைக்கு கடவுள் என்னை காப்பாத்தினதுக்கு காரணம் நீ; அதேமாதிரி, இப்ப நீ உயிர் பிழைச்சதுக்கும் ஒரு காரணம் இருக்கும். அதுக்கான காரணம் புரியுறப்போ கண்டிப்பா உன் வாழ்க்கை மாறும்!'
'அந்த காரணம் எப்போ எனக்கு புரியும்மா?'
'உன்னை மாத்திக்க நீ தயாரா இருக்கும்போது கண்டிப்பா புரியும்!'
படம்: வான் மூன்று