
நாடக கலைஞரான என்னை 'ஆயிஷா'ன்னு சொன்னா யாருக்கும் தெரியாது; 'நிலம்பூர் ஆயிஷா'ன்னு ஊர் பெயரை சேர்த்து சொன்னாத் தான் தெரியும். அப்படீன்னா, 'ஆயிஷா' என்பவள் யார்?
என் 13 வயசுல மனைவி ஆனேன்; சில நாட்கள்தான் அந்த இல்லற வாழ்க்கை; அதுல இருந்து நான் வெளியே வந்ததும் நான் கர்ப்பம் தரிச்சிருக்கிறது எனக்கு தெரிஞ்சது; அப்போ, 'விவாகரத்து' முடிவுக்கு நான் வந்திருந்தேன்!
அது, நாடகங்கள்ல பெண் கதாபாத்திரங்களில் ஆண்களே நடிச்சுட்டு இருந்த 1960ம் காலகட்டம்! 'நடிக்க போகலாம்'னு நான் முடிவெடுத்தேன். 'முஸ்லிம் பெண்கள் நடிக்கக்கூடாது'ன்னு நினைச்ச ஒருத்தர் என்னை துப்பாக்கியால வேட்டையாட நினைச்சார். குறி தப்பிப்போக நான் நடிப்பை தொடர்ந்தேன்.
என் மேடைக்கு கல் வந்தது; நான் காயப்பட்டேன்; ஆனாலும், 'நடிப்பை தொடர்ந்தே ஆகணும்'ங்கிறதுல நான் உறுதியா இருந்தேன்! 1988ம் ஆண்டு; நடிப்பை விட்டுட்டு சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண் வேலைக்காகப் போனேன். அங்கே ஒரு பெண் என்கிட்டே கேட்டாங்க...
'உங்களால் எப்படி புகழை துறக்க முடிந்தது?'
'புகழ் ஒரு மாயைன்னு உணர்ந்தேன்; சுலபமா துறந்துட்டேன்!'
இன்னைக்கு... பல பெண்கள் என்னை முன்மாதிரியா நினைக்கிறாங்க; இதுக்கு காரணம், என் முடிவுகள்!
'நாம் யார்' என்பதை நமது முடிவுகளே தீர்மானிக்கும்.
படம்: ஆயிஷா (மலையாளம்)