
நான்கு அண்ணன், நான்கு அக்கா மற்றும் வறுமை சூழ வளர்ந்த சுலைஹாள் பீவி, தனது பத்து வயதில் கைத்தறியில் பாய் நெய்ய கற்றுக் கொண்டார். தற்போது, 70 வயது. இப்போதும் கைத்தறியில் பாய் நெய்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய், 8 கிராம் தங்கப்பதக்கத்துடன் 'வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருது வழங்கியிருக்கிறது தமிழக அரசு!
கடந்த 1955ல் துவக்கப்பட்ட திருநெல்வேலி வீரவநல்லுார் பாய் நெசவாளர் தொழில் கூட்டுறவு சங்கத்தின் மூத்த உறுப்பினரான சுலைஹாள் பீவிக்கு எழுத படிக்கத் தெரியாது.
விருது வாங்கியாச்சு; எப்படி இருக்கு மனசு?
'பத்தமடை பாய் பிரபலமான அளவுக்கு நம்ம வீரவநல்லுார் பாயோட தரம் உலகத்துக்கு தெரியலையே'ன்னு ஏக்கம் இருந்தது. இப்போ, என் 60 ஆண்டு கால உழைப்பை அங்கீகரிச்ச இந்த விருதால, எங்க வீரவநல்லுார் பாய்க்கு வெளிச்சம் கிடைச்சிருக்கு; எனக்கு ரொம்ப பெரிய சந்தோஷம்.
ஆனாலும், உங்களுக்குன்னு ஒரு சொந்த வீடு இல்லையே...
முன்னாடி எல்லாம் தினமும் இரண்டு பாய் தயார் பண்ணிருவேன். இந்த 'கொரோனா' தடுப்பூசி போட்டதுல இருந்து மூட்டுவலியும், இடுப்பு வலியும் படுத்தி எடுக்குது. இப்போ சுகர் பிரச்னையும் சேர்ந்திருச்சா... வாரத்துக்கு ஒரு பாய் நெய்யுறதே மலையை சுமக்குற மாதிரி இருக்குது! மாசம் பொறந்தா மருந்துக்கு 400 ரூபாய், வீட்டு வாடகைக்கு 500 ரூபாய் தேவைப்படுது. ஒரு பாய்க்கான கூலியே 350 ரூபாய்தான். இதுல எங்க இருந்து சொந்த வீடு கட்டுறது; அரசுகிட்டே இலவச வீட்டுமனை பட்டா கேட்டிருக்கேன்... பார்ப்போம்!
வரதட்சணை பிரச்னையால் திருமணமான நான்கே மாதத்தில் கணவரை பிரிந்து விட்டார் சுலைஹாள் பீவி. உடன்பிறந்தவர்களின் வாரிசுகளை வளர்த்தவர், விருது தொகையை தனது சகோதரியின் மகன் வழி பேரனின் உயர்கல்விக்கு வழங்கி இருக்கிறார்.
எப்போ வாவது 'விவாகரத்தை தவிர்த் திருக்கலாம்'னு தோணியிருக்கா...
ப்ப்ச்ச்... ஒருநாளும் அப்படி எனக்குத் தோணினது இல்லை; ஏன்னா, அது நான் சுயமா எடுத்த முடிவு. ஆனா, என்னைப் பார்த்து என் பாதையில வர்றவங்களுக்கு தோணலாம். இம்மாதிரியான முடிவுகள் எடுக்குறப்போ அடுத்தவங்க வாழ்க்கையை உதாரணமா வைச்சுக்கிட்டா, காலம் முழுக்க மனசுல குடைச்சல் இருந்துக்கிட்டே இருக்கும்.
இந்த தொழில் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கு?
இந்த வயசுலேயும் என்னை மட்டுமே நான் நம்பி வாழ்ற நிலையில என்னை வைச்சிருக்கே... இதுக்கு மேல என்ன கொடுக்கணும்! எங்க சங்கத்துல 50க்கும் மேற்பட்ட பெண்கள் என்னை மாதிரி உழைச்சு சாப்பிடுறாங்க. நான் வாங்கின இந்த விருது அவங்க எல்லாருக்குமானது.
பாட்டி சொல்லை தட்டாதே...* கைத்தறி நெசவு பாய்களை பயன்படுத்துங்கய்யா!