
'காருகுறிச்சி' அருணாச்சலத்தின் நாதஸ்வர இசைபோல காருகுறிச் சிக்கு பெருமை சேர்ப்பது மட்பாண்ட ங்கள். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இக்கிராமத்தின் 72 வயது சிவகாமியம்மாள், ஆறாவது தலை முறையாக மட்பாண்டம் செய்யும் குடும்பத்தின் தலைவி!
ஒருவார உழைப்பில் உருவான இசக்கியம்மன் மண் சிலைக்கு இறுதி வடிவம் கொடுத்தபடியே நம்மிடம் பேசினார்.
'பானையை விரல்ல தட்டினா வர்ற சத்தத்தை வைச்சே அதுல அதிகம் இருக்குறது இரும்பு சத்தா, சுண்ணாம்பு சத்தான்னு சொல்லிருவேன். என் அப்பாவும் இதே தொழில்ல இருந்ததால சின்ன வயசுலேயே நான் இந்த நுணுக்கங்களை பழகிட்டேன்!'
ஒரு மண்பானை அப்போ என்ன விலை பாட்டி?
ஊர் ஊரா நானும் அவரும் மண்பானைகளை சுமந்துட்டு போய் பத்து பைசாவுக்கு விற்போம். அந்தகாலத்துல பணம் கிடைச்சாதான் சாப்பிட முடியும்ங்கிற சூழல் இல்லை! ஏன்னா, பணத்துக்கு பதிலா நெல், மிளகாய் வற்றல், கருப்பட்டின்னு எல்லாம் அதிகமாகவே கிடைக்கும்.
இந்த தொழில் நலிவடைந்து வருகிறதா?
முன்னெல்லாம் ஏழு குளத்துல இருந்து ஏழு வகையான மண்ணெடுத்து மட்பாண்டம் செய்வோம். இப்போ, குளத்துக்கும் மண்ணுக்கும் தட்டுப்பாடு; அதனால, தொழிலாளர்கள் குறைஞ்சிட்டாங்க. சமீபகாலமா மண்சட்டி சமையல் பிரபலமாயிட்டு வர்றதால ஏதோ தாக்குப் பிடிச்சு நிற்கிறோம்!
சிவகாமியம்மாளுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்; மகன்களும் இவருடன் இணைந்து மட்பாண்டம் வடிக்கின்றனர். கணவர் ராஜகோபால் 2022 - -23-ம், ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருது பெற்றிருக்கிறார்.
மட்பாண்டம் விற்கிறவங்க கார், பங்களான்னு வாழ முடியாதா?
எங்களுக்கு அதெல்லாம் வேணாம் சாமி! பொங்கல் பண்டிகை நேரத்துல அரிசி, வெல்லம், கரும்பு, வேட்டி, சட்டை, புடவைன்னு அரசு மக்களுக்கு கொடுக்குறதால விவசாயிகளும், நெசவாளர்களும் பயன் அடையுறாங்க! இதேமாதிரி, எங்ககிட்டே பொங்கல் பானைகளை அரசு கொள்முதல் பண்ணி விநியோகம் பண்ணினா எங்களுக்கு பெரிய உதவியா இருக்கும்!
கீழடி, ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளில் கிடைக்கும் மட்பாண்டங்கள் பழந்தமிழர் பெருமையை பேசும் நிலையில், கேரள மக்களாலேயே தங்களது மட்பாண்டங்கள் அதிகம் வாங்கப்படுவதாகச் சொல்கிறார் சிவகாமியம்மாள்.
நம் மக்களை இயற்கை கைகழுவி வருகிறதா?
ம்ஹும்... இயற்கை எப்பவுமே நம்மளை கைவிடாது; நாமதான் இயற்கையை கைவிட்டுட்டோம். தேவைக்கு மீறி இயற்கையை அனுபவிக்கிறோம். அதுக்கான தண்டனைதான் வயநாடு சம்பவம். இனியாவது நாம திருந்தணும்.
பாட்டி சொல்லை தட்டாதே...* வீட்டுக்கு ஒரு மண்பானை வாங்குங்க!