
தங்களது வாழ்க்கைக்கான நோக்கத்தை சிலர் தாமாகவே உருவாக்கிக் கொள்கின்றனர்; சிலருக்கு சூழ்நிலைகள் வழியே, வாழ்க்கையே அந்நோக்கத்தை உருவாக்கித் தருகிறது. மருத்துவர் விஜயலட்சுமிக்கு, 1992ம் ஆண்டில் மகனால் ஏற்பட்ட ஒரு சூழல் வாழ்க்கைக்கான நோக்கத்தை ஏற்படுத்தி தந்தது!
சென்னை முட்டுக்காட்டில் இயங்கும் 'நிப்மெட்' எனும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனம் கொண்டோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில், ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகும் கடுகளவும் குறையாத ஈடுபாட்டுடன் மருத்துவராக செயல்பட்டு வருகிறார் விஜயலட்சுமி.
துயர் துடைக்கும் இப்பணி மனம் இறுக்கவில்லையா?
இருபத்திரெண்டு ஆண்டுகளா, ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளை பரிசோதிச்சு சிகிச்சையை பரிந்துரைக்கிற மருத்துவர் மட்டுமில்ல நான்; 35 ஆண்டுகளா செவித்திறன் குறைபாடுள்ள மகனின் தாய். இந்த இரண்டு சூழ்நிலையிலேயும் என் மனசு இறுக வாய்ப்பிருந்தும், அதுக்கு நான் அனுமதிக்கலை. பணியிலேயும், வாழ்க்கையிலேயும் என் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றிகள்தான் இதுக்கு காரணம்!
ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் திட்ட வடிவமைப்பில் பங்காற்றுவது, சென்னையைக் கடந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் வசதி வாய்ப்புகளை பரவலாக்குவது என, இத்துறையில் விஜயலட்சுமி செயலாற்றும் தளங்கள் அதிகம்!
ஆக... துயரங்களில் விஜயலட்சுமி துவள்வதில்லை; அப்படித்தானே?
இம்மாதிரியான மாற்றுத்திறனாளிகளுக்கு சக வயது நண்பர்கள் வட்டம் ரொம்பவே அவசியம். ஆனா, நம்ம சமூகத்துல மாற்றுத்திறனாளிகளை நண்பர்களா அரவணைக்கிற பக்குவம் இன்னும் வரலை. ஒரு தாயா, மருத்துவரா 'இவங்க எதிர்காலம் என்னவாகுமோ'ன்னு நினைக்கிறப்போ மனசு பதறுதுதான்; ஆனா, இதுக்காக நான் சரிஞ்சுட்டா நிலைமை இன்னும் மோசமாயிடுமே!
மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்கான இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும்விதமாய், கடந்த ஆகஸ்ட் மாதம் 'முதல்வர் விருது' வழங்கி கவுரவித்துள்ளது தமிழக அரசு.
மகளிர் முன்னேற்றம் மாற்றுத்திறனாளிகளை உயர்த்துமா?
நம்ம சமூகத்துல மாற்றுத்திறனாளி குழந்தைகளோட தாய்மார்கள் பெரும்பாலும் கணவரால கைவிடப்பட்டு வாழ்றாங்க. இவங்களோட தனிப்பட்ட முன்னேற்றம் அந்த மாற்றுத்திறனாளி குழந்தையோட பாதுகாப்பை உறுதி பண்ணும். அரசு சலுகைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமா இப்பெண்களோட தற்சார்பு வாழ்க்கைக்கு நான் வழிகாட்டுறேன்!
ஓர் ஆசை?
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பல்கலைக்கழகத்தை தமிழக அரசு உருவாக்கினா நான் ரொம்பவே சந்தோஷப்படுவேன்.