
ராஜேஸ்வரி வாழ்வில் நமக்கு தேடிக் கிடைக்காத பதில்களை, நம்மால் இணைக்க முடி யாத புள்ளிகளை 'தற்செயல்' சம் பவங்கள் சாதித்து விடும். திருச்சி, வயலுார் ராஜேஸ்வரியின் வாழ்வி லும் சில தற்செயல்கள் உண்டு.
ஒரு பதாகை அச்சு நிறுவனத்திற்கு கல்லுாரி நிகழ்வு மற்றும் சிறுதொழில் விளம்பர ஆர்டர் வருகிறது. இரு பதாகைகளும் இடம் மாறி விடுகின்றன. சிறுதொழில் விளம்பர பதாகையைப் பார்த்த பேராசிரியர், அதற்குரியவரை அழைத்து கல்லுாரி நிகழ்வில் ஸ்டால் போடும் வாய்ப்பைத் தருகிறார். இப்படி வேர் பிடித்ததே, ராஜேஸ்வரியின் மூலிகை சார்ந்த அழகூட்டும் பொருட்களின் தயாரிப்புகள்!
ராஜேஸ்வரிக்கு ஏன் வெற்றி அவசியம்?
என் அப்பா 'சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா' ஊழியர். வசதியான இடத்துல எனக்கு திருமண வாழ்க்கையை அமைச்சு தரணும்னு அவருக்கு விருப்பம். ஆனா, பெத்தவங்க சம்மதம் இல்லாம நான் காதல் திருமணம் பண்ணிக்கிட்டேன். கோபத்துல அவங்க சொன்ன வார்த்தைகளால மனக்காயம்; அந்த காயத்துக்கு மருந்தா ஒரு வெற்றி அவசியப்பட்டது!
திருமணத்திற்குப் பின் ராஜேஸ்வரியின் பட்டப் படிப்பு கைவிடப்பட்டது. மகள் ப்ரீத்தி பிறந்தபின் கணவர் சுப்பிரமணியனின் வருமானம் போதாததால், மூலிகை சார்ந்த அழகூட்டும் பொருட்களை தயாரிக்கத் துவங்கினார்.
உங்கள் எதிரி யார்?
என் தயாரிப்புகளுக்காக அதிகாலையில 8 கி.மீ., பயணம் பண்ணி, உதிரி சாத்துக்குடி, ஆவாரம்பூ எல்லாம் மார்க்கெட்டுல வாங்கிட்டு வருவேன். அருகம்புல், குப்பைமேனி எங்கே பார்த்தாலும் பறிப்பேன். இதை பார்த்த சிலர், 'உங்க பொண்ணு தெருவுல பொறுக்கிட்டு இருக்கு'ன்னு என் அப்பாகிட்டே சொல்ல, அவர் என்னை திட்டினார். அப்போ, எனக்கு எதிரியா அவர் தெரியலை; என்னோட வாழ்க்கை சூழல்தான் அப்படி தெரிஞ்சது!
உங்க வெற்றிக்கு உங்க அப்பா கைதட்டினாரா?
திருச்சி மத்திய சிறைச்சாலை கைதிகளுக்கு சிறுதொழில் பயிற்சி தந்ததுக்காக, எனக்கு 19 ஆயிரம் ரூபாய்க்கு காசோலை கிடைச்சது. வங்கியில, காசோலையோட என் அப்பா முன்னாடி நின்னேன். அப்போ, அவர் மனசு கைதட்டினது எனக்கு கேட்டது!
அப்புறம்...?
சிறை கைதிகளுக்கு நான் தந்த பயிற்சி பற்றி பத்திரிகையில வந்ததும், 'என் மகளைப் பற்றி எழுதி இருக்காங்க'ன்னு பார்க்குறவங்க எல்லார்கிட்டேயும் சொல்லி அப்பா பெருமைப்பட்டிருக்கார். அப்புறம்... இளைய மகள் லக் ஷா பிறந்தாங்க. வாழ்க்கை இன்னும் அழகாயிருச்சு!
சூழ்நிலையால் பட்டம் பெறாமல் போன ராஜேஸ்வரிக்கு வயது 47; கல்லுாரிகளில் எம்.பி.ஏ., மாணவர்களுக்கு தன் பேச்சால் ஊக்கமூட்டி வருகிறார். உண்மையின்பால் உழைத்தவரை தற்செயல்கள் பின்தொடர்கின்றன.