
எந்நேரமும் 'எம்பிராய்டரி' எனும் பூத்தையல் போட்டுக் கொண்டிருப்பவர்களின் உதடுகளில் ஒரு புன்னகை பூத்து பூத்து மறையும்; சில சமயம் விழிகள் கண்ணீர் உதிர்க்கும்; பற்க ளில் நுாலை கடித்து அறுக்கையில் கோபம் கொப்பளிக்கும்! அவர்களின் அன்றாடம் எம்பிராய்டரி போடுவ தில் துவங்கி எம்பிராய்டரி போடுவதில் முற்றுப் பெறுகிறது!
கன்னியாகுமரி புன்னையடி கிராமத்தின் தங்கஜோதிக்கு 69 வயது. கடந்த 53 ஆண்டுகளாக இவரது அன்றாடமோ, இயற்கை நாரில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் துவங்கி அதிலேயே முற்றுப்பெறுகிறது! இந்த தொழில்தான் அவரது உலகம்!
வில்லில் இருந்து புறப்பட்ட ஜோதி
என் அப்பா பனையேறி; எட்டு வயசுல இருந்து பனை ஓலை கைப்பை, மூங்கில் கூடை, வாழைநார் பொம்மை எல்லாம் பண்ண கத்துக்கிட்டு, 16 வயசுல சொந்த முதலீட்டுல பொருட்கள் தயாரிக்க ஆரம்பிச்சேன்!
வழக்கமான பனை ஓலை, வாழை நார், மூங்கில் மட்டுமில்லாமல் அன்னாசி இலை, சம்பு புல், தாழை இலையில் இருந்தும் நார் திரித்து நுாற்றுக்கும் மேலான தயாரிப்புகளில் புதுமை புகுத்தி இருக்கிறார் தங்கஜோதி.
இந்த புதுமைகள் சாத்தியமானது எப்படி?
கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையம் தந்த உதவித்தொகையோடு கூடிய பயிற்சி என் திறமையை வளர்த்தது. அந்த திறமைதான் நான் படைத்த எல்லா புதுமைகளுக்கும் காரணம்!
கோல்கட்டாவில் தேசிய அளவிலான பயிற்சிக்கு 2003ம் ஆண்டு தேர்வான 60 கைவினை கலைஞர்களில் தங்கஜோதியும் ஒருவர். அந்த 60 பேரில் அடுத்தகட்ட சர்வதேச பயிற்சிக்காக பிலிப்பைன்ஸ் செல்ல இவர் மட்டுமே தேர்வானார்!
ஜோதிக்கு தொழில் மட்டும்தான் வாழ்க்கையா?
அப்படித்தான் எனக்குத் தோணுது; திருமணம் பற்றின சிந்தனையே எனக்கு வரலை. எங்க கிராமத்துல சில பெண்கள் கணவர் இல்லாமலும், இருந்தும் இல்லாமலும் வாழ்றாங்க. அவங்களுக்கு இந்த தொழிற்பயிற்சி கொடுத்து வருமானத்துக்கு வழி ஏற்படுத்தி தந்திருக்கேன்.
பத்து பெண்கள் என்கிட்டே வேலை பார்க்குறாங்க; இதுல சிலர் என்னை மாதிரியே 'மாநில விருது' வாங்கி இருக்கிறதால, 60 வயதுக்கு அப்புறம் ஓய்வூதியம் வாங்குற தகுதி அவங்களுக்கு கிடைச்சிருக்கு. என் வாழ்க்கை எப்படிப்பட்டதுன்னு இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்!
கைவினைப் பொருட்கள் கண்காட்சிகளில் பங்கேற்க இந்தியா முழுக்கவும், இலங்கைக்கும் பயணித்திருக்கிறார் தங்கஜோதி. சில ஆசைகளை இலக்காக கொண்டு வில் விட்ட அம்பாகப் பாய்கிறது இவரது இப்பயணம்.
ஆசைகள் 1000
* ஜனாதிபதி கையால 'தேசிய விருது' வாங்கணும்!
* கீழ் நிலையில இருக்கிறவங்க உயர உதவணும்!
* இயற்கை நாரில் இன்னும் புதுமைகள் படைக்கணும்!