/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
மனை அங்கீகாரம் தொடர்பான விஷயங்களை அறிவது அவசியம்!
/
மனை அங்கீகாரம் தொடர்பான விஷயங்களை அறிவது அவசியம்!
மனை அங்கீகாரம் தொடர்பான விஷயங்களை அறிவது அவசியம்!
மனை அங்கீகாரம் தொடர்பான விஷயங்களை அறிவது அவசியம்!
ADDED : ஜன 03, 2026 07:50 AM

எதிர்காலத்தில் வீடு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் காலி மனை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டு கின்றனர். இவ்வாறு காலி மனை வாங்கும் நிலையில், நிலத்தின் உரிமை தொடர்பான விஷயங்களுக்கு அப்பால், பல்வேறு கூடுதல் தகவல்களை சரி பார்க்க வேண்டும்.
அங்கீகாரமில்லாத மனைகள் விஷயத்தில் உயர் நீதிமன்றம், தமிழக அரசு தலையிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. இதனால், தற்போது பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முறையான அங்கீகாரத்துடன் புதிய மனைப்பிரிவுகளை அறிமுகம் செய்கின்றன.
இருப்பினும், மனை வாங்கும் மக்கள் சில இடங்களில் ஏமாற்றங்களை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக நீங்கள் வாங்க நினைக்கும் காலி மனை அமைந்துள்ள பகுதி தொடர்பான முழுமையான விபரங்களை விசாரித்து அறிவது நல்லது.
இது மட்டுமல்லாது, அந்த பகுதியில் அடுத்த 20, 30 ஆண்டுகளில் என்னென்ன வளர்ச்சி ஏற்படும் என்பதை உரிய நபர்களை அணுகி விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதில் மனை திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் முறையாக அங்கீகாரம் பெற்றுள்ளதாக கூறுவார்கள்.
இதில் விற்பனை நிறுவனத்தின் முகவர்கள் சொல்லும் விஷயங்களை அப்படியே நம்புவதற்கு அப்பால், உரிய ஆவணங்களை கேட்டு வாங்கி பார்க்க வேண்டியது அவசியம். நகர், ஊரமைப்பு துறையின் முறையான முத்திரை, கையெழுத்துடன் வரைபடம், அனுமதி உத்தரவு ஆகியவை இருக்க வேண்டும்.
இதில் நகர், ஊரமைப்பு துறை, உள்ளாட்சி அமைப்பின் முத்திரையுடன் காணப்படும் வரைபடத்தை காட்டிவிட்டு, அதில் கூடுதல் பகுதி என்று அங்கீகாரமில்லாத மனைகளை விற்பனை செய்வோரும் இருக்கின்றனர். எனவே, அங்கீகார வரைபடத்தில் உள்ள முறையான மனையை மட்டும் தேர்வு செய்வது நல்லது.
பிரதான பகுதி முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நீட்சியாக இருக்கும் மனையில் என்ன விதிமீறல் நடந்து விட போகிறது என்று பலரும் நினைக்கின்றனர். இதனால், அங்கீகார மனைப்பிரிவின் நீட்சி என்ற பெயரில் அங்கீகாரமில்லாத மனைகள் விற்கப்படுகின்றன.
பிரதான பகுதி மனையைவிட குறைந்த விலையில் இந்த மனைகள் கிடைக்கும் சூழலில், இதை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த மனைகளை வாங்கும் போது ஒரு பிரச்னையும் தெரியாது, அதில் வீடு கட்ட வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பை நீங்கள் அணுகும் போது தான் உண்மை நிலவரம் தெரியவரும்.
அந்த மனையை வாங்கியதற்கு இணையான தொகையை அபராதம் அல்லது வரன்முறை கட்டணமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்படக்கூடும். இதில் பணம் செலவிடும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.
பிரதான பகுதி முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நீட்சியாக இருக்கும் மனையில் என்ன விதிமீறல் நடந்து விட போகிறது என்று பலரும் நினைக்கின்றனர், இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கு வழியாக அமைந்துள்ளது.

