PUBLISHED ON : நவ 16, 2025

யார் குரல்?: அமுத சுகந்தி பாபு
வயது: 43
அடையாளம்: பளு துாக்கும் வீராங்கனை
சென்னை மாங்காட்டில் உள்ள இவரது வீட்டின் வரவேற்பறையை கணவர் ஏ.ஜே.ஆர்.பாபு, மகள் தர்ணீஷ்வரியுடன் இவருள்ள புகைப்படங்கள் அலங்கரித்திருக்கின்றன. அலமாரியில் இவர் வென்ற பரிசுகள்; இதில் புதிய வரவாக, கடந்த அக்டோபரில் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற 'வேர்ல்டு விமன் மாஸ்டர்ஸ் எக்யூப்ட் பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப்ஸ்' போட்டியில் வென்ற இரு தங்கம் மற்றும் மூன்று வெள்ளி பதக்கங்கள்!
பரிசுகள் இல்லாத வாழ்க்கை
இந்த வாழ்க்கையைப் பற்றி எனக்கு எந்த திட்டமும் இருந்ததில்லை. நான் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிச்சது, 19 வயசுல திருமணம் பண்ணிக்கிட்டதுன்னு எனக்கான எல்லாமே குடும்பம் எடுத்த முடிவுதான்!
முதல் குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகள் கழிச்சு மூணு தடவை கருச்சிதைவு. கரு தங்குறதுக்காக எடுத்த தொடர் சிகிச்சை என் உடல்நிலையை பாதிக்க கடுமையான மன அழுத்தத்துல மூழ்கிட்டேன்!
உங்களை காப்பாற்றிய 'லைப் ஜாக்கெட்' பற்றி...
சிலம்ப கலைஞரான என் கணவர் சொல்லி, 33 வயசுல உடற்பயிற்சி கூடத்துக்குப் போனேன். எனக்குள்ளே இருந்த விரக்திகள் எல்லாம் வெளியேறுற வரைக்கும் உடற்பயிற்சி கூடத்துல என்னை பிழிஞ்சு எடுத்தேன். புகைமூட்டம் விலகி பாதை தெரியுற மாதிரி, கடின பயிற்சியால மன அழுத்தம் நீங்கி வாழ்க்கைக்கான குறிக்கோள் தெரிஞ்சது; பளு துாக்கும் வீராங்கனையா என் பயணத்தை ஆரம்பிச்சேன்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்திய பவர்லிப்டிங் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்று மாநிலம், தேசியம் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் குவித்திருக்கிறார் அமுத சுகந்தி பாபு.
இஷ்டமாக மாறிய கஷ்டம்
போட்டிகள்ல பங்கேற்க வேற மாநிலம், நாடுகளுக்குப் போறது எனக்காக நான் முடிவெடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி தருது. சமீபத்திய தென் ஆப்ரிக்கா போட்டியில, '150 கிலோ துாக்கினாத்தான் வெண்கலத்துக்கு தகுதி பெற முடியும்'ங்கிற நிலைமை; ஆனா, அந்த எடை என் கால்மூட்டு ஜவ்வுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கலாம்!
'ஒரு பகுதி வாழ்க்கையை அனுபவங்கள் இல்லாம வாழ்ந்துட்டே; இன்னொரு பகுதியை மனஅழுத்தத்துல கழிச்சுட்டே; இனி என்ன... போய் துாக்கு'ன்னு மனசுல இருந்து ஒரு உந்துதல். அதுவரைக்கும் பழக்கம் இல்லாத 150 கிலோவை துாக்கினேன்; வெண்கலத்துக்கு ஆசைப்பட்ட இடத்துல வெள்ளி பதக்கம் கிடைச்சது!
'இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா வாழ்க்கை நமக்கான பரிசை கொடுக்கும்'ங்கிறது என் அனுபவம்.
குறள் சொல்லும் குரல்
குறள் எண்: 620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்
பொருள்: சோர்வு இல்லாதவரது குறைவற்ற முயற்சி செயலுக்கு இடையூறாக வரும் விதியையும் ஒருகாலத்தில் தோல்வியுறச் செய்யும்.

